Saturday 3 September 2016

#ஏனமேந்தும் வாழ்வு 03.09.16 #21

#ஏனமேந்தும் வாழ்வு
03.09.16

எட்டாத கனிகள் எண்ணி என்றும் உள்ளம்
ஏங்கவில்லை நிதம் தேடுவது பசிதீர்க்கவொரு கவளம்
எங்கள் உலகம்  வெட்டவெளி என்றானது ஆனால்
ஏக்கங்கள் வேய்ந்த மேற்கூரை எப்போதும் உள்ளது......

எந்நேரமும் அவசரமாய் எங்கேயோ போகுதொரு உலகம்
ஏனங்கள் அவர்முன் ஏந்தினாலும் இல்லையொரு
சலனம்
எண்ணத்தால் வானத்தை எட்ட நினைக்குமொரு கூட்டம்
ஏற்றமில்லா (எம்)வாழ்வோ சேராமல் நிலைத்துவிட்ட வட்டம்......

எச்சில் கூட வறண்டு போன நாக்கு
ஏப்பம்(பசி) மட்டும் தேடாமல் வந்த சொத்து
எப்பொழுதும் உயிர் எங்கள் கண்ணில் நிற்க
ஏனிந்தப் பிறப்போ ஏழைகள் வாழ்வே கசப்போ....

எங்களுக்கும் கனவுகள் வருவதுண்டு அதில் தினம் 
ஏடெடுத்துப் படிக்கும் எங்கள் நாதியற்ற சனம்
எஞ்சாமல் எஞ்சும் எங்கள் வயிற்றின் ஓலம்
ஏழையுள்ளம் எரிகையிலே ஏது ஏடெடுக்கும் காலம்......


என்று பாரதியின் எண்ணம் உண்மை ஆகும்
ஏமாற்றம் இல்லா ஏற்றம் இங்கு சேரும்
என்று இல்லை என்ற சொல்லிங்கு அழியும் 
ஏற்றத்தாழ்வு  இன்றி எங்கள் வாழ்வு மலரும்.....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment