Sunday 2 October 2016

#48 வார்த்தைகள் 25.09.16 #62

#48 வார்த்தைகள்
25.09.16

நட்டு வச்ச தென்னங்கன்னு
நான் வளர்த்த எந்தன் கண்ணு
தண்ணியத்தான் குடிச்சுப்புட்டுத்
தலையால காயைத் தந்து 
தவறாம என்னைக் காக்க

நான் பெத்த பிள்ளை ஒன்று
நம்பிக் கெட்ட எந்தன் மண்ணு
தண்ணியத்தான் அடிச்சுப்புட்டு
தவறிப்போயி தானும் கெட்டுத்
தனியா என்னைப் புலம்ப வைக்க 

தீராத சோகமய்யா
தீரவில்லை பாரமய்யா
தன்னைக் காக்க நாதியில்லா
தள்ளாத வயதினிலே துணையாகப்
பேரனுந்தான் நம்பியிங்கு வந்தானய்யா 
காலமிங்கே திரும்பு தய்யா...

வேர் குடித்த நீரை
ஏற்றியே தன் தலையில்
தனக்கெனவே வைக்காது
தவித்திடும் வேளையிலே பிறர்
தாகமது தீர்த்திடும் தென்னையும் 

உடல் தளர்ந்து மூப்பினிலே
தள்ளாடும் பொழுதினிலே
தளிரொன்று அடைக்கலமோ
உறவென்ற பிணைப்பதுவோ
பாசத்தின் பெருவெளியில் 
யாருக்கு யார் காவல்?

பாரதிதாசன் போட்டி#1 #மேகங்கள் அழுகின்றன 23.0916 லிருந்து 26.09.16 வரை #61

பாரதிதாசன் போட்டி#1
#மேகங்கள் அழுகின்றன
23.0916 லிருந்து 26.09.16 வரை

கீழ்த்திசை உதித்திடும் கதிரவனும்
அச்சினில் சுழன்றிடும் புவியதுவும்
கடமை மறந்திடல் சாத்தியமோ? 
வீணரோ நாம் மானுடரே?....

கர்ப்பத்தில் காத்திட்ட தாயவளைக்
கலங்கிடப் பொதுவினில் கைவிடுவோமோ? 
ஆத்திரம் கொண்டே உறவுகளைச்
சாய்த்திட்டுத் தனியே நிற்போமோ? 

மடியினில் தவழ்ந்திட இடமளித்தாள்
மரகதப் பச்சை வயல் கொடுத்தாள்
மண்ணும் நதியும் காடும் கடலும்
மழையும் இயற்கையின் கொடையன்றோ? 

ஏரிகள் தூர்த்து நதிமணலது திருடி
நிலத்தடி நீரை உறிஞ்சியே குறைத்து
காடுகள் அழித்து மரங்களைச் சாய்த்து
காற்றின் தரத்தை மாசு படுத்தி 

மண்ணின் கற்பை மதிக்க மறந்து
சுற்றுச்சூழல் கெடுத்தோமே
சுயநலம் நாளைய சந்ததி
அழிக்கும் என்பதை நாமும் மறந்தோமே 

ஆனந்த மேகங்கள் பொழிந்திட்டால்
தழைத்திடும் உயிர்களும் பயிர்களுமே
அமிலமாய் மேகங்கள் அழுதிட்டால்
தவித்தே அழிவோம் சத்தியமே 

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#அத்தமவளே அடியே #உசுரே நீதான் கிளியே 24.09.16 #60

#அத்தமவளே அடியே
#உசுரே நீதான் கிளியே
24.09.16

அத்தமவளே அடியே....என் முத்து ரத்தினமே
அல்லித்தண்டு போலே அடியெடுத்து வாரவளே

அன்னமே மரிக்கொழுந்தே அஞ்சுகமே மல்லிகையே -யாரும்
அறியாமப்பாத்து என்னைப்பித்தா நீயும் ஆக்கிட்டியே

ஆத்தோரம் குடமெடுத்து வஞ்சி நீயும் நடக்கையில
ஆடுதடி எம்மனசு உந்தன் ஓரப்பார்வையிலே 

ஆடி போயி ஆவணியில் பரிசமொன்னு போட்டிடவா
ஆமான்னு சொல்லிடு நீ தங்கத்தாலி வாங்கிவாரேன் 

இனிமேலும் காலந் தள்ள என்னுசிரு தாங்காதே
இசைந்திடு என்னுயிரே என்னோடு நீ சேர்ந்திடவே 

உண்மையாக உழைத்திடுவேன் கண்ணா உன்னைக் காத்திடுவேன்
ஊருலகம் மெச்சிடவே ஒத்துமையா வாழ்ந்திடுவோம் 

ஏரோட்டும் மாமனும் நான் ஏடெடுத்துப் படிச்சவ நீ
என்னிக்குமே உன்னுடைய சொல்பேச்சு கேட்டிடுவேன் 

என்னுடைய ஆசையத்தான் உன்னிடத்தில் சொல்லிப்புட்டேன் மறுக்காதே
மரகதமே என்னோட உசுரே நீதான் கிளியே....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#நிலாவே வா மெட்டுக்குப் பாட்டு 23.09.16 #59

#நிலாவே வா மெட்டுக்குப் பாட்டு
23.09.16

பல்லவி:

கனாவே வா... கண்தேடி வா....
காணாமல் நான் கண்மூடல் வீண்
விழி ஓரம் உனைநானும் 
தினந்தோறும் அழைப்பேன்

சரணம்1

பூமாலையோ வாடுதிங்கே உந்தன் தோள்சேர
பாமாலையும் ஏங்குதிங்கே சந்தம் அதில் சேர
மேடையது கண்டு வாழ்வே இது என்று
தாவிவந்தேன் நானும் தள்ளிச் சென்றாய் நீயும்
ஆகாயம் என்னில் நீ என்றும் காணா நீலம்.... 

கனாவே வா...

சரணம்2

வானவில்லின் வர்ண ஜாலம் கண்கள் காணும் நேரம் 
கண்சிமிட்டும் நேரம் அந்த வண்ணம் என்ன மாயம்
காயம் அது தந்தாய் காயும் வெண்ணி லாவே
முள்ளாய் நீயும் தைத்தாய் தேனிலாடும் பூவே
கடல்தாண்டி நடந்தாயே பாயும் நதியே நீயே

கனாவே வா......

கவி முயற்சி - ரத்னா வெங்கட்

#திருவிழா 25.09.16 #58

#திருவிழா
25.09.16

ஊர்கூடித் தேர்களிலே
பூவாரிச் சொரிந்திடுவார்
பூமாரி கருமாரி 
எங்க ஊரு மகமாயி
எங்க முத்துமாரி
தங்க முத்துமாரி 

புதுகை நகரினிலே
அன்னையவள் வீற்றிருப்பாள்
பாதம் பணிந்திட்டால்
அருள் மாரிப் பொழிந்திருப்பாள் 

ஒன்றல்ல பலநூறு 
தேரதுவும் பவனி வரும் 
தகுதிக்கேற்றாற் போல்
அலங்காரம் ஒளிர்ந்திருக்கும் 

பொய்க்கால் குதிரையுண்டு
புலிவேஷம் தானுமுண்டு
அப்பாவின் கைபிடித்துப்
பார்த்து வந்த நினைவுமுண்டு 

ஒயிலாட்டம் கரகாட்டம் 
மயிலாட்டம்  பரவசமாய்
நோக்கிட இளவட்டம் தானாய்த்
தாளம் இட்டதுண்டு  

தம்பியவன் ஆசைக்கென
மரத்தேரும் உருவாக்கி
சிறுதேரின் அலங்காரம்
சிறப்பாய்ச் செய்திடவே
போட்டிகள் இட்டோமே
கூடியே திரிந்தோமே 

அப்பாவும் கண்ணுருட்ட
அம்மாவோ கைகொடுக்க
அக்கம் பக்கத்தவர்
அள்ளியே பூ நிறைக்க
தெரு கூடித் தேரிழுத்தே
ஊர்கோலமாய்ச் சென்று
பூவிட்டு வந்த கதை
கண்ணெதிரில் தோன்றுதே

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

சூழ்நிலைக்கு மெட்டமைத்து பாட்டெழுதும் போட்டி 23.09.16 #57

 சூழ்நிலைக்கு மெட்டமைத்து பாட்டெழுதும் போட்டி
23.09.16

பல்லவி
ஆண்
என் வானம் இன்றிங்கே இருளானது
என் வீணை ஸ்ருதிசேர விரல்தேடுது
மேகங்கள் மழைதேடி நகர்கின்றது
என்பாடல் உனக்கென்று தான் ஏங்குது

அனுபல்லவி

கரை தேடும் அலைகள் நானென்பது
பிரிந்தோடும் நதியோ நீயென்பது

காலங்கள் மாறும் வாழ்வென்பது
கனவல்ல காண்போம் நிஜமென்பது
காயங்கள் ஆறும் மனமென்பது
கனியட்டும் கண்ணீரே மருந்தென்பது 
என் வானம்.....

சரணம்

திசை மாறிப் பறக்கும் உந்தன் மனம்
கூண்டொன்றில் தவிக்கின்ற பறவை இனம்

வார்த்தைகள் போதும் பெண்ணே இனித்
தாங்காதென் நெஞ்சம் மலர்ப் பூங்கொடி
வரமென்று வந்தேன் மாறாதிரு உன்
மனமெங்கும் இருள் நீக்கி ஒளி சேர்த்திடு
என் வானம்....

கவி முயற்சி- ரத்னா வெங்கட்

#சேர்த்து வச்ச ஆசையெல்லாம் 02.10.16. #56

#சேர்த்து வச்ச ஆசையெல்லாம்
02.10.16. 

சேர்த்து வச்ச ஆசையெல்லாம் 
சருகாகப் போகும் முன்னே
சேர்க்க இனி காலமில்லை 
சடுதியிலே வாருமய்யா

காத்தைப் போல காலமுந்தான் 
கை நழுவிப் போகுதய்யா
ஆத்துமணல் கை நிறைச்சுக்
காத்த கதை ஆனதய்யா

நட்டு வச்ச செடியும் இப்ப
வளர்ந்து மரமாச்சுதய்யா
நான் விதைச்ச ஆசையொன்னு
வாடித்தான் தவிக்குதய்யா

காத்திருத்தல் கடமையென
கன்னியவள் விதியாச்சய்யா
காத்திருந்த காலம் போதும்
கன்னியெனைக் கரை சேரய்யா

ஏங்கி நின்ன நேரத்திலே
ஏடெடுத்துப் படிச்சிருந்தா
எந் தலையெழுத்தும் மாறியிருக்குமய்யா
எண்ணிப் பார்த்து மாறுங்கய்யா...

கவியாக்கம் - ரத்னா வெங்கட்.

#உசுரு ஒட்டிக்கிட்டு இருக்குதே #வெளுக்காம போகாது கிழக்கு 1.10.16 #55

#உசுரு ஒட்டிக்கிட்டு இருக்குதே
#வெளுக்காம போகாது கிழக்கு
1.10.16

உசுரு ஒட்டிக்கிட்டு இருக்குதே
உவரு மண்ணைப் போல ஆச்சுதே
உள்நாக்கு மேலண்ணத்தில ஒட்ட
உதடும் காஞ்ச தரிசாச்சுதே 

மழையப் பார்த்து விதை விதைச்சா
மானம் பொய்க்கும் விதியாச்சே -ஏழை
மானங் காக்கவும் மறந்தேதான்
மானமும் சதி செய்யும் கதையாச்சே.  

வாங்கின கடனோ கொஞ்சந்தான்
வட்டிய நெனச்சா கலங்குது நெஞ்சந்தான்
பயிரோ வாடுது காஞ்சேதான் -வயிறு
பத்தியே எரியுது இங்கேதான் 

கல்யாண வயசுல ஒரு பொண்ணு
தள்ளாத வயசுல என் ஆத்தா
தோள் சேர்ந்து ஏரோட்ட ஒரு புள்ள
தூணாட்டம் தாங்கிடும் பொண்டாட்டி 

கண்ணாட்டம் எல்லோரும் துணையிருக்க
தள்ளாட்டம் கண்டாலும் எம்மனசு
தன்னுசுர மாச்சுக்க நினைக்காதய்யா
கண் திறப்பா மாரியாத்தா சத்தியமய்யா 

உழவு ஒன்னேதான் பொழப்பு
வேறெதுவும் தேவையில்ல எமக்கு
வெளுக்காம போகாது கிழக்கு

கவியாக்கம் -ரத்னா வெங்கட்.

01.10.16 #48 வார்த்தைகள் படக்கவிதை #54

01.10.16
#48 வார்த்தைகள் 
படக்கவிதை. 

காத்திடும் தகைமைகள் 
காணாத தலைமைகள்
வளங்களைச் சுரண்டியே 
வங்கியில் பணம் சேர்த்து
ஏழேழு தலைமுறைகளுக்காய் 
நம்மை அடகு வைக்க

ஏரிகள் அடுக்கு மாடிகளாய்
மாறியே உயர்ந்திட
நெகிழிக் குப்பைகள்
வடிகால்கள் அடைத்திட
வெள்ளநீர் உள்புக
நாமுமன்றோ காரணம்? 

நன்றியும் அன்பதும்
நாலுகால் பாய்ச்சலில் ஆடிடும்
வாலதில் காட்டிடும் அதனுடன் 
வாலாய்த் திரிந்த சுட்டியும்
பாசமும் பண்பையும் 
தலைக்கு மேலோடி
தன்னையும் விழுங்கிடும்
தண்ணீரில் காட்டிட 
மனிதமிங்கு வாழுது  

கவியாக்கம் - ரத்னா வெங்கட்.

#சம்மதம் சொல்வாயா # உன் சாகசப் பார்வைகளாலே 30.09.16 #53

#சம்மதம் சொல்வாயா
# உன் சாகசப் பார்வைகளாலே
30.09.16

சம்மதம் சொல்வாயா நீ
சங்கேத பாஷையிலே
சாய்த்திட்டுச் செல்வாயா உன்
சாங்கனைத்த விழியதனால் 

சந்திரன் தரையிலுதித்த
சாயலோ உன் முகத்தில்
சாமரமும் வீசிடுமே கருஞ்
சாந்தலையாய்க் கூந்தலது 

சம்பங்கிப் பூச்சூடி பட்டுச்
சரிகையது பளபளக்க எழில்
சாம்ராஜ்யத்தின் ராணியென
சாத்தவியாய் (நீ)அமர்ந்திருக்க 

சரற்கால மேகங்கள்
சரசமிட்டே பொழிதல் போல்
சரக்கென்று இதயம் மாறச்
சாதிமதம் பார்க்கவில்லை

சாத்திரங்கள் கூறாத 
சாத்தியமற்ற காதலில்லை
சதைத் திமிரில் வந்திட்ட
சன்னதமும் இது இல்லை 

சங்கம் வளர்த்திட்ட தமிழ்ச்
சந்தம் கண்ட பாட்டிதுவே
சப்தஸ்வரம் தந்ததனைச்
சங்கீதமாய் மாற்றிவிடு....

சர்வமும் நீயன்றோ நாம்
சதிபதியாய் வாழ்ந்திடுவோம் 
சகடயோகம் பார்க்காதே
சரட்டுத்தாலி அணிந்திடவே....

சரக்கொன்றைப் பூவினைப் போல்
சரஞ்சரமாய்க் கவி படைத்தேன்
சஞ்சலங்கள் தீர்த்துவிடு உன்
சாகசப் பார்வைகளாலே ....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#48 வார்த்தைகள் படக்கவிதை #52

#48 வார்த்தைகள் 
படக்கவிதை

அரும்பு மலரே அன்பின் கொடையே
அழகின் மொத்தமும் நீயே நீயே

ஆசை கொண்டு வாரி அணைத்தேன்
அன்னையும் இனி நானே நானே

இன்னல் நீக்கும் இசை என்றாகி
இனிமை சேர்த்தாய் தேனே தேனே 

எட்டிப் பார்த்து என்ன கண்டாய்?
என்னிடம் சொல் மானே மானே 

கன்னம் குழியும் கனிச்சிரிப்பில் என்
கவலை மறந்தேன் கண்ணே கண்ணே 

மகிழ்ச்சி என்றும் மனதில் பொங்க
மேன்மை கண்டு வாழ்க பொன்னே

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

குறுங்கவிதை 24 வார்த்தைகள் 27.09.16 #51

குறுங்கவிதை 24 வார்த்தைகள்
27.09.16

மரகத மயிலே 
மதியொளி முகமே
மனதினில் நினைவுகள்
மருகியே ஓடுதோ...

வெள்ளிச் சதங்கையிட்ட உன் கால்கள் 
வெள்ளிப் பதக்கம் கண்டதன்றோ? ...

தளைகளை உடைத்து
தாவணிச் சிறையினை விடுத்து
தங்கம் பெற்றுத்தர வருவாய் மகளே.....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#தூண்டுகோல் 27.09.16 #50

#தூண்டுகோல்
27.09.16

உள்வாங்கும் திரியதனைத் தூண்டிவிட
முத்துப்போல் சுடரதுவும் நிலைத்து எரியும்
குடத்தினிலே விளக்கெனவே இருப்பவரைக்
குன்றிலிட்ட சோதியாக்கல் தூண்டுதலே

விழுந்தெழுந்து நடை பழகும் குழவியதும்
விழாமலே ஓடப்பழகுவதும் -மழலைப் 
பேச்சை மகிழ்ந்து போற்ற எதிர்காலப்
பேச்சாளர் உருவாவதுவும் தூண்டுதலால் 

சின்னஞ்சிறு அச்சாணி தேர் அதனின்
பெரு உருவம் தாங்கி நிற்கும் பலமதுவே
பெருஞ் செயல்கள் செய்தோரின் செயல்களதின்
சின்னஞ்சிறு பின்புலமும் தூண்டுதலே 

திறமை கண்டால் மகிழ்ச்சி கொண்டு 
தட்டிக் கொடுத்து உயர்த்திவிடும்
நற்பண்பு சான்றோர் தகைமையென உணர்ந்தே
நாம் அதன்வழி காண்பதுவும் தூண்டுதலே 

உடைந்திட்ட உள்ளமது கண்டால்
உறவென்றே கையதனை நீட்டிக்
கண்ணீரதனைத் துடைத்துக் 
கலங்காதிருக்கும் வழியதனைக் காட்டும்

வழுவா ஊக்கமது பெற்றிட்டோர் 
பெற்றதைப் பகிர்ந்திடக் கற்றிட்டோர்
கற்றதைச் செயலாக்கம் செய்திட்டார் 
அனைவரும் தூண்டுகோலே....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#அவசர கல்யாணம் 21.09.16 #49

#அவசர கல்யாணம்
21.09.16

சுற்றும் பூமியின் சுழலும் நேரம்
துரிதப் படுத்தும் காலமிங்கே
எங்கும் எதிலும் காண வேண்டும் 
உடனடித் தீர்வே நேரமெங்கே? 

கண்கள் பார்த்துக் கடிதம் எழுதிக்
கல்யாணம் முடித்தது கற்காலம் 
காதல் என்பது தவிர்க்க முடியாச்
சமூக அழுத்தம் இக்காலம் 

பந்தய வெறியில் கடிவாளமிட்டுப்
பயிற்றுவித்த சமுதாயம் ஓடவிட்டுப்
பல தளைகளால் கட்ட வெருளுது 
தடைகளை உடைத்திட்டு மிரண்டு  

பதறியே செய்யும் செயலது அவசரக்
கல்யாணமதில் தொடங்கி சிதறிப் பிரியுது
பருவ வயதின் கனவுகள் பிடிமானமில்லாப்
படியென்றாகிட வழுக்கியே விழுந்தது 

உடலின் மாற்றம் புரிபடாக் குழப்பம்
ஊறு விளைவிக்கும் இணைய வெளிப்பாடும்
தோளதில் கைபோட்டு விவாதமிட்டுத்
தோழமையோடு விளக்கமளித்துத்

தொலைதூரப் பார்வையளிக்கும் பெற்றோரும்
தெளிந்த நோக்கும் அறிவும் தந்திடும்
வாழ்க்கைக் கல்வியும் அவசியமிங்கே....


கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#தூண்டிலில் சிக்காத மீன்கள் 22.09.16 #48

#தூண்டிலில் சிக்காத மீன்கள்
22.09.16

தெளிந்த புனலில் துள்ளும் மீனும்
குவித்து கவனம் இரையதில் வைத்து
விழிப்பு  உணர்வு கொண்டே தேட
சிக்கு வதில்லையே தூண்டிலதில்....

பதின்ம வயதில் பக்குவக் குறைவில்
பருவத்தின் பிடியில் வேண்டாச் செயல்கள்
பல பரிமாணங்கள் எடுத்தே வந்து
கொக்கிகளிட்டுத் தளைகளில் மாட்டும்

தன்னியல்பு தொலைத்திட உந்திடும்
கருவிகள் கண்ணையும் கருத்தையும்
ஒருங்கே மயக்கிடும் புகையும்
போதையும் குடி குலைத்திடும் குடியதும்

குறுகிய பார்வையில் குழப்பிடும் காமமும்
கூடாத நட்பும் எதிர்பாலதில் மரியாதை
கொள்ளாமல் முறை தவறும் காதலும் 
நெளியும் புழுக்களாய் 
மீன்குஞ்சதைக் கவர்ந்திடும் 

ஒற்றைச் சக்கரம் உருட்டிடத் தேவை
பிறழாத பார்வை விலகாத கவனம்
வழுவாது நேர்வழி வாழ்வினில் சென்றிடச்
சிக்குவதில்லையே தீமையெனும் தூண்டிலில் இழந்திடவும் வழியில்லையே எதிர்
நீச்சலிடும் சுதந்திரத்தை.....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#சிறு துளி நீர் தீண்டிடா நிலவிற்குள் #47

#சிறு துளி நீர் தீண்டிடா நிலவிற்குள்

சிறு சிறு துளியாய் என் அன்பினைச்
சேமித்து வைக்கவே உன் இதயமதை
வேண்டினேன் ஏந்திழையே பதிலாய்ச்
சிந்திட வைத்தாயே கண்ணீர்த் துளிகள்

துளித் துளியாய்க் காதல் அதை
உளி கொண்டே வடித்தேன் அன்பே
சிற்பமதின் கண் திறந்து நோக்கும் நேரம்
முகம் மறைத்தாயே சொற் திரையால் 

திரை கொண்டு  வான் வெளியை
மறைத்திட நீ நினைத்தாலும்
தவழ்கின்ற மேகமெனத் திரைதாண்டி
வந்திடுவேன் உன் இதழ்த் துளி தீண்ட

துளி  நீர் தீண்டிடா நிலவிற்குள் 
உயிர் தேடிச் சென்ற மனிதன் போல்
விழி  தாண்டி உன் இதயம் புகுந்திடவே
இறங்கிட்டேன் விடா முயற்சியதில்

அதிசயமே எந்தன் அமரகமும் நீயே   
அந்தம் பாடி விடு உன் வாதத்திற்கு 
அன்பின் அணை திறந்து
அகமகிழ்ந்து அரவணைத்து விடு

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#ஞாபகம் வருதே 23.09.16 #46

#ஞாபகம் வருதே
23.09.16

குழப்பங்கள் கவலைகள் ஏதுமின்றிக் 
குழவியாய் இருந்த காலமொன்று
கண்மூடி அசை போட்டேன் நினைவதனில்
கண்ணோரம் நீர்கசிய நானுமிங்கே

தண்டையும் கொலுசதுவும் காலில் கொஞ்சத்
தங்கமெனத் தாயவளும் மடியிலிட்டுக் கொஞ்ச 
தந்தையவர் தோளினிலே ஊஞ்சலாடித்
தாய்மாமன் மடியமர்த்திப் பொன்தோடு மாட்ட

பாட்டனவர் பெருமையுடன் பார்த்திருக்க
பாட்டி வம்சம் வளர்ந்ததென்று பாட்டிசைக்க
அத்தையவள் ஆசையுடன் காப்பிட்டு
அழகியென்று கன்னத்தில் கருஞ்சாந்து வைக்க 

அமுதூட்டித் தாலாட்டிக் குளிப்பாட்ட
அடுத்தது தானென்று அன்போடு
அனைவருமே போட்டியிட -வாடாத
நினைவுகள் நீர்க் குமிழியென
நெஞ்சமெங்கும் மோதித் திரிந்திட

அன்பென்ற மொழி தவிர வேறில்லை
அரவணைத்த பலரும் இன்றில்லை
கசிந்தநீர் கன்னத்தில் இறங்கும் முன்னே
கற்கண்டாய்க் குரலொன்று செவியில் மோத 

பாட்டியென்று அழைத்திட்டுப்
பரவசமாக்கப் பேரனுண்டு பேத்தியுண்டு 
வாழ்க்கையது சுழலும் சக்கரமிங்கு....


கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#முதுமையில் நடுங்குகிறதெனது கரங்கள் #நிம்மதி வேண்டும் கல்லறையில் 26.09.16 #45

#முதுமையில் நடுங்குகிறதெனது கரங்கள்
#நிம்மதி வேண்டும் கல்லறையில்
26.09.16

முதுமையில் நடுங்குகிறதெனது கரங்கள்
முட்டிகளும் அதற்கேற்ற தாளமிட
வறுமையிலும் சோராத எந்தன் இதயம்
வலுவிழந்து வாசலிலே காத்திருக்குது 

எட்டினிலே ஒன்றெனவே பிறந்ததாலே
எட்டவில்லை கையினின்று வாய்க்கு கிடைத்தது
ஏட்டுக் கல்வி பாதியிலே கனவாகிப் போக
ஏற்றமது உழைப்பின் வழி என்றேயாச்சு 

அஞ்சவில்லை வேகங்கொண்ட இளரத்தமே
ஆர்வமது சேர்ந்ததாலே எதிலும் ஓட்டமே
மணித்துளிகள் கணக்கில்லை பணம் மட்டுமே
மானமாகப் பிழைத்திடவும் வழி இருக்குதே 

தம்பி தங்கை உயர்ந்திடவும் உதவி செய்தாச்சு
தாரம் வந்தபின்னே பாரம் சமநிலையாச்சு
எங்களது குடும்பமென்று ஆனதன் பின்னே
மாற்றமது கண்டு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாச்சு

கண்நிறைந்த பிள்ளைகளும் தம் கூட்டினில்
கால ஒட்டம்  இப்போது அவர்கள் கையினில்
கட்டிவள் முந்திச் செல்ல நானோ தனிமையில்
காத்திருக்கிறேன்.......
நிம்மதி வேண்டும் கல்லறையில் 

கவியாக்கம் - ரத்னா வெங்கட்