Saturday 24 September 2016

#ஆசைகளின் படியில் #44

#ஆசைகளின் படியில் 

ஆசைகளின் படியில் ஆடாத மனது
தேசங்கள் தேடினும் காணீர்
அறிந்ததை உரைப்பேன் கேளீர்
மாற்றுரைத்தால் கேட்பேன் வாரீர்

ஆசையே அழிவிற்குக் காரணம்
புத்தனின் வாக்கு ஒன்று
சித்தார்த்தனின் தேடல் ஆசை
புத்தனாய் நமக்கு இன்று

அரையாடை உடுத்தி நின்ற 
காந்தியின் எளிய உள்ளம்
குறையாமல் கொண்ட ஆசை
கண்டதே நம் சுதந்திரம்

அன்பின் பெருவடிவம் உண்மையில் 
அன்னையோ சிறு உருவம் 
மனித சேவையே தன் ஆசையென்று
சொன்ன தாயுள்ளம் தெரசாவன்றோ

விண்கண்ட வெள்ளை உள்ளம்
விஞ்ஞானி ஆன ஞானி
கலாமும் கொண்ட ஆசை
கனவைத் துரத்தும் இளைய சமூகம்

ராஜராஜனின் கோவில் ஆசை 
தஞ்சையிலே உயர்ந்து நிற்க
ஷாஜகானின் ஆசை உறவோ
தாஜ்மஹாலாய் உருவெடுக்க

காவி உடை வசதிக்கில்லை
வாழ்வின் முறையே அதுதானென்று
உண்மை ஞானம் தேடிய முனியின் ஆசை 
உணர்ந்ததை ஊருக்கு உரைத்தல்

நல்லவர் கொண்ட ஆசை
நன்மையே பயக்கும் என்போம்
தயக்கமின்றி ஆசை கொள்வோம்
படிகள் ஏறி உயரம் செல்வோம்

கவியாக்கம் - ரத்னா வெங்கட்





#ஆசைகளின் படியில் 
நாள் 16.08.16

கனவுகள் என்னும் வடத்தினிலே
அனுதினம் எந்தன் மனத்தினிலே
ஆசைகள் எனும் முத்துக்கள்
அழகழகாகக் கோர்த்து வைத்தேன்

காற்றினில் மாறும் மேகங்களாய்க்
கண்ணெதிர் தோன்றி மறையுமுன்னே
கைகளால் பற்றிக் கருத்தினில் பொதித்து
காதலென அதைப் போற்றி வைத்தேன்

இன்னிசையாய் வரும் கீதம் கேட்டால் 
இசைக்குயிலாக  நான் மாறிட ஆசை
வீணையில் நாதம் விளைந்திட வைக்கும் 
விரல்களாகவும் ஆகிட ஆசை

'ததிங்கினத்தோம்' சொல்லக் கேட்டால்
தந்தேன் எனையென ஆடிட ஆசை
நாட்டியத் தாரகை  நீதான் என்றே
நாநிலத்தில் பலர் புகழ்ந்திட ஆசை

கற்பதைத் தவிர வேறொரு வேலை
காணாமல் நான் வாழ்ந்திட ஆசை
கற்பிப்பதிலும் எனைப் போல் ஒருவர் 
கண்டதுண்டோ எனக் கேட்டிட ஆசை

உயிரைக் காக்கும் மருத்துவராகி
உயர்ந்த செயல்கள் செய்திட ஆசை
கற்றுத் தெளிந்த அறிஞரும் ஆகி
காவியங்கள் பல படைத்திட ஆசை

அன்பைத் தந்து அடைக்கலம் கொண்டு
அன்பே உருவென மாறிட ஆசை
உள்ளும் புறமும் மாற்றம் இல்லா
உயிராய் என்றும் நிலைத்திட ஆசை

எத்தனை பிறவி எடுத்தால் எந்தன் 
இத்தனை ஆசைகள் தீரும் இறைவா
கணக்கெடுத்தாலோ கைதான் ஓயும் 
மனம் ஓயாமல் நீ காத்திட வேணும். 

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

# கதை கவிதை 26.08.16 #43

# கதை கவிதை
26.08.16

முதல் முறை வான்முகில் தனை
முத்தமிட்ட வெள்ளிப் பறவையில் பயணம்
படிப்படியாய் வாழ்க்கைப் படியேற
பதவி தந்த சொகுசுப் பிரயாணம்......

இது சொர்க்கத்தின் சிறுபதிப்போ
இதனிலும் இரு வகுப்போ
இருக்கை தேடியமர உதவும்
தேவதைகள் அணி வகுப்போ..... 

அமர்ந்தவுடன் நட்புடனே புன்னகைக்க
அருகமர்ந்த மாது முகம் கோணலாக 
தேளெதுவும் கொட்டியதோ.... முகம்
தெளிவாய்க் காட்டியது...மன பின்னம்?
ஒட்ட நிறமென்ன சாயமா? சாபமா? 
உயரப்பறந்தால் உயருமோ உள்ளம்? .....

தேவதையை அழைத்தவள் குற்றங்கூற
தேனான புன்னகை மாறாமல் கேட்டுத்
தேவைதனை விமானியிடம் கலந்தாலோசிக்க
மனக்குறைகள் எங்கள் பயணிக்கோ
மாற்றுவது எங்கள் கடமையன்றோ
மாறாத அன்புடன் முதல்வகுப்பு ஈந்தார்....

பேதத்தால் மனித நிறமிழந்த மங்கைக்கல்ல
பாதித்தாலும் புன்னகை மறக்காத 
நல்லிதயத்திற்கு -மனித
நேயத்திற்கு நிறமொரு பொருட்டல்ல .....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#அம்மா வரம் வேண்டும் 19.09.16 #42

#அம்மா வரம் வேண்டும்
19.09.16

ஐயிரு திங்கள் சுமந்தே உந்தன்
ஐம்பொன் மேனிதவித் திடப் 
பாசமெனும் கொடிவழி காத்துப்
பெரும் பேறெனவே எனை ஈந்தாயே....

தாயே அன்னைக்குக் கடன்பட் டோமென
மாந்தர்கள் பலருரைக்க இல்லையென
மறுத்துரைப்பேன் கடனதுவோ உந்தன் அன்பு
வற்றாத பெருங்கருணைக் கடலன்றோ.....

கடலே அலைகளில் தாலாட்டியெனைக்
கரை சேர்த்தாயே என்விழி வழியே
உலகு கண்டாயே உணராமல் உள்ளிழுக்க
உயிராகும் காற்றெனவே (நீ)நிறைந்தாயே....

நிறைந்திட்ட அன்பில் திளைத்திட்ட
பின்னும் நான் தீராத பேராசையினால்
கேளாமலே கொடுக்கும் உன்னைக்
கேட்டுப் பெறவும் வந்திட்டேன்.....

வந்தேன் கோரிக்கை கொண்டு 
வள்ளலாய் வாரியே (நீ)வழங்கிய
பாசமதை எந்தாளும் அழியாமல்
பெற்றது போல் கொடுத்திடவே...

இடுவாய் எனக்கோர் வாய்ப்பு
இனிவரும் பிறவிகளெல்லாம்
என்மகவாய்ப்  பிறந்திடுவா யெனும்
வரமது வேண்டும் தருவாயா அம்மா? ....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#கும்மிப் பாட்டு #கிராமியக் கவிதை 18.09.16 #41

#கும்மிப் பாட்டு
#கிராமியக் கவிதை
18.09.16

கும்மியடி பெண்ணே கும்மியடி நாமும்
உயர்ந்திடக் கைகொட்டிக் கும்மியடி
கண்மணியாம் எங்கள் பெண்கள் இனமது
மகிழ்ந்திடக் கைகொட்டிக் கும்மியடி

கருவினி லுதித்து கல்லறை தப்பி
கண்விழித் தோமே கல்வி கொண்டு
கருத்தாய் வாழக் கற்றிட்டு நாமே
காண்போம் வளமென்று கும்மியடி 

அடுக்களை மட்டுமா நம் சொந்தம் 
பல அலுவல்கள் கூட நம் பந்தம்
அனைத்தும் புரிவோமே ஏற்புடனே நாம்
அவதானி என்றேதான் கும்மியடி

அச்சம் தவிர்ப்போம் ஆக்கம் பெறுவோம் 
ஆதாரமாய் அன்பை நாம் கொள்வோம்
நாணம் கொள்வது நல்லொழுக்கம் இல்லாப்
பண்பைக் கண்டெனக் கும்மியடி

எத்தனை எத்தனை துறைகள் உள்ளது
அத்தனை யிலும்நம் தடம் பதிப்போம்
எங்கும் எதிலும் குறைவில்லை நாமென
இங்கு உரைத்தே பெண்ணே கும்மியடி

கவியாக்கம் -ரத்னா வெங்கட்

மாயமான் vs போக்கிமான் #40

மாயமான் தேடி வனமதனில்
திரிந்தான் சீதா ராமன்.....
போக்கிமான் தேடி வளாகமதில்
பள்ளி வளாகமதில் அலைந்தான்
சித்தார்த் வெங்கட்ராமன்.....

மானை வேண்டித் தன் குணம்
மாறி நின்றாள் கட்டியவள் அங்கே
போக்கிமான் வெறுத்துத்
தாடகையாய் மாறினாள் பெற்றவள் இங்கே.....

நான்குவரி நயம்படவே படித்து
நாலு பதில் நறுக்கெனவே கொடுக்க
கிடைக்காதோ ஒரு போக்கிமான்? 

நூலகங்களில் தேடு போக்கிமான் 
நூற்றுக் கணக்கினில் அள்ளு எனும்
விளம்பரம்தான் வாராதோ? 

தேடல்கள் என்பதே வாழ்க்கை
அறிவுத் தேடல் ஒரு ஏணி -பயன் 
அல்லாத் தேடலிது அரவின் படம்
பரம பதம் காட்டும் வழித்தடம்
விளையாட்டு தரும் வாழ்க்கைப் பாடம்

கவியாக்கம் -அம்மாவாகிய ரத்னா வெங்கட்.

#தென்றல் தீண்டி # புன்னகைக்காதோ பூக்கள் 22.08.16 #39

#தென்றல் தீண்டி
# புன்னகைக்காதோ பூக்கள்
22.08.16

தென்றல் தீண்டிய இளவேனில்
செக்கர் உதித்த வானில்
வெள்ளித் திருவிழா நாளில் தங்கத்
தேர் உலா வரும் ஊரில்
தோழியர் புடை சூழ......

கரும்பவழ நிறப் பட்டாடை
கனியிதழுடன் போரிட்டுத் தோக்க
மைக்குளம் நீந்திய மீன்கள் பொன்
தாமரை இதுவெனத் துள்ளி
அலை பாயும் பொழில்.....

மேகம் ஒன்று வான் விடுத்து
தோகை நுதல் மோகம் கொள்ள
பாதையெங்கும் பூ விரித்துப்
பத்திரமாய்ப் பாதம் ஏந்தும் 
பித்தான பல இதயங்கள் ......

மலர்விரல் நோகத் தொடுத்த 
மல்லிகையும் மனம் நொந்து
பரிகாரம் செய்ய மனமுவந்து
பின்னல் சிறைப் பட்டதொரு
நாளில் இரு பொழுதுகள் ....

கன்னியழகு சித்தம் மேவ
கவியுரைத்தது சொல்லழகு
கருக் கொண்ட வார்த்தைகள் தனில்
கருத்தாழம் தேடிக் காணாமல் 
பூஞ்சோலையில் புன்னகைக்காதோ பூக்கள்.......

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#பெண் #அகராதியில்# ஆண் 18.08.16 #38

#பெண் #அகராதியில்# ஆண்
18.08.16

முன்னொரு நாளில் இறைவனானவன்
இரண்டு தலையும் நான்கு கால்களும்
உணர்வும் உயிரும் ஒன்றெனக் கொண்ட
ஆண்பெண் அதனை ஒட்டியே படைத்து
தாள முடியாத் தருணத்தில் ஒருநாள்
தனியாய்ப் பிரித்தே அலைந்திட  விடுத்தான்
தன் இணை தேடி அலையும் உயிரே
ஆணும் பெண்ணும் என்றறிவோமே ....

இன்னுயிர் தந்தான் தந்தையானவன்
பெண்ணவள் வாழ்வில் முதல் ஆண்மகன்
இன்னும் சிலருக்கோ தாயும் ஆனவன்
அண்ணனும் அவனே தம்பியும் அவனே
அன்பின் வடிவாய் உருவெடுத்தானே
பாட்டனும் அவனே மாமனும் அவனே
பெரியப்பன் சித்தப்பன் எல்லாம் அவனே
பாசமும் பண்பும் கொடுத்தவன் அவனே....

எழுத்தறிவித்த நல்லாசிரியன் வாழ்வின்
ஏற்றம்  உரைத்த நல் குருவும் அவனே
தன்இட பாகம் என் அன்னைக்குத் தந்து
அம்மையப்பனான முதல்வனும் அவனே
காதலனாக என்னுள்ளம் கவர்ந்து
கணவனுமாகி நின்றவன் அவனே
என்னுள் உருவாகி என் உயிராகி
என் மகன் இவனென உயர்ந்தவன் அவனே...

இத்தனை உருவம் இத்தனை உயரம்
இவை மட்டுமே இவன் என்றாகி இருந்தால்
எத்தனை சிறப்பு எத்தனை மகிழ்வு
அவை முழுவதும் காணமுடியா ஓர்சோர்வு
தோழனாக நினைத்து நெருங்க
காலனாக மாறிடுவானோ அவன்
தனித்திருக்கும் பெண்ணைப் பார்த்தால்
தங்கை தாயை நினைத்திடுவானோ......

என் கருவானவன் வெளியேவந்து
என்னை அடக்க மனம் கொள்வானோ
தேவியின் வடிவம் என்றே புகழ்ந்து
தேய்பிறையாய் எனைச் செய்திடுவானோ
தேம்பும் உள்ளம் கேள்விகள் கேட்க
தன்மனம் திருத்தி உயர்த்திடுவானோ
பெண் என்பவள் தன்னில் ஓர் பாதி என்ற
பேருண்மையை உணர்ந்திடுவானோ.....


நம் பார்வையில் முழுமையான ஆண்
நாம் பார்க்கும் நாள் தொலைவில் இல்லை
என்ற நம்பிக்கையுடன்
கவியாக்கம் - ரத்னா வெங்கட்

துல்லியமாக மதிப்பீடிட்டு #37

துல்லியமாக மதிப்பீடிட்டு
உன் மதிப்பு இவ்வளவுதான்
என்றுரைக்கும் தராசெனத்
தம்மை நினைக்கும் உறவுகள்
நட்புகள் உண்டு நம்மிடையே....

உறவதனைப் பெரிதென நினைத்து
உண்மையை விளக்கினாலும்
தான் பிடித்த முயலுக்குக்
கால்கள் மூன்றெனவே சாதித்து
வாதிட்டு ஆக்குவார் பித்தென்று.....

வார்த்தைக்கும் சொல்லுக்கும்
அர்த்தங்களோ ஆயிரம்
அனர்த்தங்களோ பல கோடி
வரிகளை வலிகளாக்கும்
வல்லமை பெரிதும் பெற்றோர் ....

பிறர் வலி உணர்ந்தோர் என்றும்
புறம் பேசித் திரிவதுமில்லை
உறவுகள் பேண நினைப்போர்
குறை கூறி வருத்துவதில்லை
தன் நிலை உணர்ந்தவர் பிறரை
சந்தேகங் கொண்டு பார்ப்பதுமில்லை....

பச்சாதாபம் தன் மேல் கொண்டு
பழியதனைப் பிறர் மேல் சுமத்திப்
பாரினில் தனைப்போல் யாரும்
பாரங்கள் சுமந்ததில்லை என்று
பந்தயம் கட்டி வாழ்ந்து
பரிவதனைத் தேடி நிற்போர்
போகட்டும் ....மன்னிப்போம்
பாவப்பட்ட மனிதர்களை....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்.

#உயிராய் அவள் 16.09.16 # 36

#உயிராய் அவள்

அன்பின் வடிவே அருளது பூத்திடும் உருவே
அகப்பூச் சொரிந்து நின்அருட் பாதம் பணிந்தேனே

ஆக்கம் அளித்தே ஆத்ம ஞானம் தந்தாயே
ஆட்கொண்டே எம்மை ஆதரிப்பாய் என்றும் நீயே

இணையில்லா உந்தன் இளமை மாறா அழகும்
இசையாய் நாடகமாய் இயல்வடி வெனஎமை மயக்கிட

ஈர்த்து எம்மை ஈகை கொண்டு காத்தாயே
ஈண்டு உனக்கு ஈடிணை யுண்டோ தாயே

உத்தமி உந்தன் உயர்வு தனைச் சொல்லவே
உள்ளக்கிடக் கைகொண் டுவந்தே முயற்சித் தேனே

ஊக்கம் அளித்தே ஊற்றாக வாவெந்தன் வாக்கினிலே
ஊட்டுவாய் அமிழ்து ஊடுருவி எந்தன் பாட்டினிலே 

எண்ணமும் மற்றும் எங்கணும் நிறைந்தே நின்றாய்
எண்ணியார் நின்னை எந்நாளும் நிறைவே பெற்றார்

ஏழுகடல் தாண்டினாலும் ஏற்றம் குறையாத ஏந்திழையே
ஏறுமுகம் தானுனக்கு ஏங்கிடவே இனித்தேவை யில்லையே

ஐந்தும் மணியாய் ஐம்பெருங் காப்பியம் ஆரணமாய்
ஐயேநின் எழிலும் ஐம்புலன் கொள்ளை கொண்டிடவே

ஒப்பித்தேன் என்னுயிர் ஒண்ணுதல் இனியும் இல்லையே
ஒத்துக்கொள் மகவென்று ஒப்பற்ற மொழியே தமிழேயென்

ஓவியமே உன்னழகை ஓதிடவே அனுதினம் நானும்
ஓடிவந் தேனேநீ ஓம்புதலும் வேண்டியே தாயே

ஔடதம் தேடா யௌவனம் வருமே உனைப்பருக
ஔவியம் கொள்வாரெம் சௌந்தரம் கண்டேபிற மொழியினரும். 

கவி முயற்சி- ரத்னா வெங்கட்

தமிழன்னையை 'எம் உயிராய் அவள் ' என்ற 
தலைப்பில் பாட முயற்சி செய்துள்ளேன். முதல் முறை செய்துள்ள முயற்சி. பிழை இருந்தால் மன்னிக்கவும்.  வாய்ப்புக்கு நன்றி.

Monday 19 September 2016

#தாலாட்டும் தமிழ் 18.09.16 #35

#தாலாட்டும் தமிழ்
18.09.16

அகிலமும் அடங்கிடும் அன்னையின் அன்பினில் 
அமுதமும் அல்லவா அவள்குரல் ஒலிக்கையில்

ஆதிநாள் ஆங்கவள் வாரியேதன் மடியிலிட்டு
ஆராரோ பாடித் தாலாட்டத் தமிழதனில்

இருசெவியும் தேனதில் இன்பமாய் நனைந்திட்டு
இன்னமும் மயக்குது இமைசோராமல் இயக்குது

ஈடுண்டோ அருந்தினால் மீளவும் வழியுண்டோ 
ஈங்கவள் மோகத்தில் தீராத உயர்வன்றோ

உண்ணக் குறையாத சுவையும் அவளே
உயிர்க்கு மருந்தாகும் அவள்தன் வளமே 

ஊனில் கலந்திட்டு உயிர்த்து மெய்யுருக்கியென்
சூலில் வளர்ந்திட்ட பூமகளும் இவளோ

எங்கும் நிறைந்தென் எண்ணமு மென்றாகி
எழிலாய் மயக்கிடும் என்காதலும் இவளோ

ஏமாற்றம் தவிர்த்து ஏற்றம் அளித்தே
ஏழ்மை துடைக்கும் மேலான செல்வமன்றோ

ஐந்தடக்கி வாழ வைக்கும் நற்றுணையோ
ஐயம் தீர்க்கும் பைந்தமிழே நம்துணையோ

ஒளிரும் வைரமே ஓவியமே எங்கள்
ஔவையின் மொழியே மௌத்திகமே தாலேலோ

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

மௌத்திகம்- முத்து.

# காவேரித்தாய் 16.09.16 #34

# காவேரித்தாய் 
16.09.16

உதித்தது குடகு மலையென்றாலும் அவள்
உகப்பொடு நடந்தது தமிழ்மண் கண்டு
தன்வழி தானே தீர்மானித்த அவளின்
தலை விதி மாற்றும் வகை கண்டோமோ?

தாய்வீடு கன்னட நாடென்றாலும்
தன்வீடாய் அவள் நினைத்தது தமிழகமன்றோ
தாயென அவளை அழைத்திட்டு நாமே
தடங்கல்கள் செய்திட்டால் நலம் பெறுவோமோ?

அன்னைக்குத் தன்பிள்ளை இரண்டில்
அன்பால் இடைவெளி உண்டோ
ஏற்றத்தாழ்வு பாரா தாய்மை அதில்
ஏனிந்த விவகாரம் முறையோ?

ஒரு தாயின் தண்ணீர் அருந்தி
உறவாலே சகோதரர் என்றானோம்
உணர்விழந்து உறவு கொன்றே அவள்
கண்ணீரைப் பெருக்குதல் சரியோ?

ஐந்தறிவு கொண்டு பகிர்ந்துண்ணும் காகம்
ஆறறிவு பெற்றும் பகிர்ந்தளிக்க மறுத்தோம்
சொந்தச் சகோதரனின் துன்பம் கண்டும்
சிந்தை இரங்கா மனம் பெற்றோமோ?

இன்றைய நிலையது நாளை மாறலாம் 
இன்னல்கள் தீரந்திடும் காலம் ஆகலாம்
சொல்லதும் செயலதும் மாறாது நின்றிடும்
பண்பாடு மறந்திட்டால் பகையென்றாகிடும்

எழுதிச் செல்லும் விதியின் கை
எங்கே எவ்விடம் சேர்க்கும் நம்மை
என்றேதான் அறிவாயோ தேடி
மனித இனமே நாடோடி

என் வீடு என் தெரு என் மொழி
என் இனம் என் நாடு என்கின்ற
எண்ணமது நமது நாம் நம்முடைய 
என்றாகி விட்டால் இன்பம் நமதே 

உரிமைக்கும் குரல் கொடுப்போம் 
உறவதனைப் பேணிடுவோம்
காவிரித் தாயவளைக் 
காத்திடுவோம் ஒற்றுமையாய் 

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

48 வார்த்தைகளில் போட்டி#1 16.09.16 #33

48 வார்த்தைகளில்
போட்டி#1
16.09.16

கருத்த பூங்குழல் 
விரித்த தோகையென் றுதித்த
கதிரவன் தன்ஒளிக் கிரணமதை
முகில் கொண்டு துடைத்துத்
தன்னுள்ளம் மென்னொளியாய்ப்
பரிசளித்தே மகிழ்வுற்றுத் தண்ணென்றாக

பிரம்மன் தூரிகை வரைந்த
ஓவியம் உயிர்த்தெழுந்து தரையினிலே
ஒய்யார நடை போட்டதென்றே
பிரமையில் மலர்கள் ஆடையில்
பின்னிக் கொண்டு பிறப்பின்
பயனைப் பெற்றோமென இறுமாந்திருக்க 

வேலிகள் உடைத்துப்  பண்பாடுடைத்து
விடுதலையுற்றுக் கலைபல பெற்று
வல்லினமுற்ற மெல்லியலாளும்
தன்னிறைவதில் பெருமை கண்டு
வானமவள் எல்லையென மோனத்திருந்தாள்....

#போட்டி 2

உலகு சுருங்க வைத்ததில்
உரிய பங்கு எனக்குண்டு
கன்னங்கரிய என்னுடல்
காட்சிப் பொருளாய் ஆனதின்று 

எந்தன் குரலைக் கேட்டதும்
இன்றும் மகிழும் மனமுண்டு
பல் விழுந்த மனிதர்கூட
பிள்ளையெனக் களிப்ப துண்டு

மோகன்தாஸ் காந்தியாய் மாறிட்ட
கணமதுவும் மணியாச்சி ஏட்டிலிடம்
பெற்று நிலைத்ததுவும் நாடு பங்குற்ற
நேரம் நடந்திட்ட கொடுமையதும் 
சாட்சியாய் எனைக்கொண்டு நிகழ்ந்ததுவே 

வாரிசுகள் பரிணாம வளர்ச்சிகண்டு
வேகங்கூட்டிப் பறந்திட்டாலும்
என்பெருமை மறக்காமல் 
சிறப்பித்தே ஓடவிட்டார்....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

கடவுளுக்குமா ??? #32

ஆற்றங்கரையில் அரசமர நிழலில்
ஏகாந்தத்தில் வீற்றிருந்த என்னை
நகர நடைபாதையினில் வைத்தே
வணிகப் பொருளாய் விற்றிட்டார்

போட்டியிட்டு எனை வாங்கிப்
பாங்குறவே பந்தலிட்டுப்
பளபளவெனவே அலங்கரித்துப்
பத்து நாட்கள் அமர்த்தி வைத்தார் 

இருந்த ஒரு முகம் போனதனால்
ஆனை முகமான என்னைப்
பல வேறு முகங்கள் கொண்ட
அவதாரமெனச் சித்தரித்தார். 

பேட்டைக்குப் பெரிய ஒன்று
தெருவிற்கு ஏத்த ஒன்று தம்
வீட்டிற்குத் தனி அடுக்குமாடிக்
குடியிருப்பில் ஒரு பொதுவென்றே

எத்தனை இருப்பிடங்கள்
என்னென்ன அலங்காரங்கள் 
குறையாத கூட்டங்கள் பல
கோடிப் பிரார்த்தனைகள்

காணிக்கைகள் கொண்டு
குவிக்கும் கூட்டங்கள்
கணக்கெடுத்தால் கைசோரும்
மனம்சோரா மாந்தர்கள்

பத்தாம் நாள் அலங்கரித்துத்
தேரினையொத்த வண்டியதில்
மின்விளக்கு ஜொலிஜொலிக்க
வீதியெங்கும் தோரணமிட்டு

ஆண் பெண் பேதமின்றி
ஆடியேதான் ஊர்வலம் செல்ல
பாட்டுக்கள் வகை வகையாய்க்
காதினிலே ஓலமிட

ஷீலாவின் இளமையும்
முன்னியின் பெயர் கெட்டதுவும்
பீடியின் நெருப்பைத் தன் 
நெஞ்சினிலே சுமந்திட்ட

பாவையவள் பரிதவிப்பைக்
கேட்டே நானும் கசிந்துருகிக்
கண்கலங்கிச் சோர்வுற்றுத்
தவிக்கையிலே கண்ணீரோடு

எனையிறக்கி எதிர்பாராக்
கணத்தினிலே கடலினிலே
தள்ளியெனைத் தலைமுழுக
வைத்து அவர் ஒதுங்கிட்டார்

முழுதும் கரையாமல்
உடலின் பாகங்கள்
கரையொதுங்கித் தவிக்கையிலே 
காணாமல் அவர் சென்றிட்டார்

மண்ணால் பிடித்தது
மண்ணுள்ளே சென்றதென
முன்னோர்கள் சொன்னதை
மறந்தேதான் நடந்திட்டார்

பொன்னான பூமியும்
பால் போன்ற அலை கடலும்
மாசுறவே செய்திட்டார் விளையும் 
தீங்கதனை மறந்திட்டார்

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

# விழிகள் உதிர்த்திடும் கிரந்த எழுத்துக்கள் #பட்டு தெறிக்கட்டும் முத்துக்களாய் 15.09.16 #31

# விழிகள் உதிர்த்திடும் கிரந்த எழுத்துக்கள்
#பட்டு தெறிக்கட்டும் முத்துக்களாய்
15.09.16

விழிகள் உதிர்த்திடும் கிரந்த எழுத்துக்கள் 
மொழியது புரிந்திடா மௌனப் பரிபாஷைகள்
இருளதில் துழவித் தேடிடும் பார்வையாய்த்
தவித்திடும் என்னுயிர் நீ சென்ற வழியினில்...

இமைதனைத் தாழ்த்தியென் விழி தவிர்க்கும்
வித்தையது கற்றதுவோ உயிர் குடித்திடவோ
தவிர்த்திட்ட விழியது விளைத்திட்ட வலியினை
உணர்ந்திட்டா சென்றாய் உன் வழியில் .....

விரல்கள் ஸ்பரிஸித்து வந்த நேசமில்லை
இதயம் துடிக்க வைக்கும் நீயென் ஸ்வாஸம்
வசந்தங்கள் கடந்தாலும் மாறாத பாசம்
வற்றாத கங்கையிது இல்லை வெளிவேஷம்....

வழக்கொழிந்த மொழியாயிடுமோ என் காதல்
தேய்ந்து அழிந்து வெறும் கல்வெட்டாயிடுமோ
வழக்கிலாவது உபயோகித்திடடி என் கண்ணே
வாழ்கிறேன் உன்வாக்கில் தமிழ்ப் பெண்ணே.

ஏறிட்டு ஒருமுறை பார்த்தே உன்
நேசக்கரம் நீட்டிடு என் கண்ணீர்
பட்டான உன் வளைக்கரத்தில்
பட்டுத் தெறிக்கட்டும் முத்துக்களாய் ....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#உண்மைச் சம்பவம் 14.09.16 #30

#உண்மைச் சம்பவம்
14.09.16

பாய்ந்தோடும் நதிகளைந்து
பெயரதின் காரணமாக
வளமான மண்ணதும்
வீரம் செறிந்த மக்களும்
பெற்ற ஒரு நகரினிலே
பெட்டையொன்று தான் ஈந்த
குட்டி ரெண்டு கிணற்றினிலே
தவறித்தான் விழுந்ததென்று
தவித்தேதான் போனதம்மா....

கதறியழ வாயில்லா ஜீவனது
குலைத்தேதான் தனை வளர்த்த
மனிதரையும் அழைத்திடவே
பதறியவர் ஓடிவந்து கிணற்றுள்
கண்டிட்ட காட்சியது ஈரக்
குலை நடுங்க வைத்ததுவே
பரிதவித்த குட்டிகளின் 
பக்கத்திலே படமெடுத்த
அரவொன்று சீறி நிற்க.....

பயமது தெளிந்தபின்
அறிவது வேலை செய்யக்
காட்சியில் கண்ட உண்மை
காணாத அதிசயமாய்ப்
பல்லதனில் விஷமுள்ள
பாம்பதுவும் குட்டிகளைக்
காத்தேதான் நின்றதுவே 
காப்பாற்றி மேலேற்றும்வரை
கண்டிட்டு நகர்ந்ததுவே.....

பாரத பூமியிலே பாம்புக்குமுள்ள
பண்பதனைத் தொலைத்தேதான்
மிருகமெனச் சிலர் உருமாறித்
திரிகின்றார் பாலருந்தும் பாலரோ
மழலை பேசும் குழந்தையோ
பள்ளி செல்லும் சிறுமியோ
பருவம் எட்டிப் பார்க்கும் கன்னியோ
எவரும் அவர் இலக்கு -இல்லை
அவர்க்கு விதிவிலக்கு......

பூக்களைக் கசக்கி முகர்ந்திடும்
குரூர மனம் படைத்திட்ட இவற்றை
விலங்குகளோடு ஒப்பிட்டால் அவை
வருந்தித் தலை குனியும்
திருத்திட முடியாத் தவற்றைப்
புரிந்திட்டோர் தமக்கு
இம்மையில் மறுமையில் ஏழேழ்
பிறவி எடுத்தே வந்தாலும் 
மன்னிப்பு என்பது கிடையாது.....

கவியாக்கம் -ரத்னா வெங்கட்

# வேரைத்தேடி 13.09.16 #29 Different view

# வேரைத்தேடி
13.09.16

மண்ணுக்குள் ஒளிந்திருக்கும்
உயர்ந்த மரம் உயர்த்தி நிற்கும் 
கண்ணுக்குப் புலப்படாமல் 
தரைக்குள்ளே தாங்கி நிற்கும்...

சிறு புல்லெனவே இருந்ததுவை
இரு கை கொண்டு கட்டவொண்ணா
தல விருட்சமென ஆக்கிட்டுத்
தனை அடக்கிப் புதைந்திருக்கும்....

வளமதனை உறிந்தே தனக்கென்று
வைக்காமல் கிளை விடுத்த பூவாய்க்
காயாய்க் கனிந்து நல் விதையாய்
நலம் பெருக்கும் இயல்புற்றிருக்கும்.....

மரம் காக்கும் வேரைப்போல்
மனித இனம் காக்கும் மனிதருண்டு 
தேடிப் பொருள் சேர்த்தே ஏழு
தலைமுறைக்கென்று வைக்காமல்...
சோம்பலும் சுயநலமுமாய்ச்
சந்ததியை ஆக்காமல்.....

தன்னலம் என்பது சமுதாயமதில்
பிறர் நலம் காணும் தன்மையதே
என்னும் நேயமது கொண்டிட்டார் 
தமை உயர்த்தும் வழி கண்டிட்டார்
பிறர்க்கு ஈந்து பேருவகை 
பெறும் வரம் பெற்றிட்டார்.... 

கொண்டாடி அவர் குணம் கொண்டே
தொண்டாற்றுவோம் ....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

# வேரைத்தேடி 13.09.16 #28

# வேரைத்தேடி
13.09.16

வேர்களைப் புதைத்து ஓரிடம்
நிலைத்து உயர்ந்திருக்கும்
மரங்களும் இடம் பெயர்தலுண்டு
விதை விழுங்கி மரம் சுமந்த பறவையால்.....

புதைந்த விதை துளிர்த்து மழை
முகில் நோக்கி வளரும் மறுபடியும் 
வேர் விட்டுக் கிளை பரப்பி
விழுதுகள் ஊன்றி அசையும்.....

வேர்களை விடுத்து சிறு
விதைகள் மேற்கொள்ளும்
தொலை தூரப் பயணங்கள் என்றும்
வலி தூரப் பயணங்களே.....

விதைகளின் மரபணுக்களில்
படிந்த வேர்களின் நினைவுகளே 
இடைவெளிகள் தாண்ட வைக்கும்
விடுகதைக்கு விடையளிக்கும்.....

வேர்களும் விதைகளும் போல
நம்மிலே பலரிங்கு உண்டு
திரைகடலோடிய வாரிசுகள் 
திரும்பிப் பார்க்குமுன்னே
நரையோடித் தளர்ந்ததொரு
தலைமுறை தனியாக .....

புலம்பெயர்தல் பொருளீட்டல்
உயிர் வாழத் தேவையது -நம்
புறம் தழைக்க வைத்திட்ட
வேர்களைத் தேடியே அவர்
வாடாமல் வணங்கியே
காத்திடுவோம்.....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#படக்கவிதை 48 சொற்களுக்குள் 09.09.16 #27

#படக்கவிதை 48 சொற்களுக்குள்
09.09.16
போட்டி# 1

கருமமே கண்ணாக கண்ணம்மா
கடவுளே வந்தாலும் கண்பாராள்
கதிரவனும் கண் மயங்கும்
காலையிலே கண்விழிச்சு
ஊதுகுழல் கையில் கொண்டால்
ஊரு சனம் உவப்பாகும்
வரிசை போட்டு வயிராறும் ....

இடியாப்பமும் இட்டலியும்
இனிக்கும் அவள் கைவண்ணத்தில் 
கருணை பூத்த முகத்தைக் கண்டு
நாணும் வெள்ளைப் பணியாரமும்
நாட்டில் எங்கே தேடினாலும் 
கிடைக்காதவள் கைப் பக்குவம்
காசைக் கொட்டிக் குடுத்திட்டாலும்
காணாதவள் தாய்மை உள்ளம்
அன்னையில்லா பிள்ளைக்கெல்லாம்
அம்மாவான மனப்பக்குவம்....

போட்டி# 2

ஒத்தச் சக்கரந்தான் 
சூரியனைப் போலத்தான்
ஓயாமல் ஊரைச்சுத்தி இப்போ
ஓய்வெடுத்து நின்னாச்சு
ஓட்டிய கன்றிரெண்டு
ஓய்வெடுத்துப் பசியாறக்
கடமை கொண்ட வீரனாய்க்
காவலது காக்கத்தான்
கேடயமாய் மாறியிங்கே
பெருமிதமாய் நின்னாச்சு ....

நிக்கையிலே அதனுள்ளே
நினைப்பொன்று ஓடியது
காலமும் என் போலத்தான் 
காற்றெனவே நகர்ந்து செல்லும் 
வாழ்வுமொரு சக்கரந்தான்
வட்டமது உருண்டு வாழ்வில்
ஏற்றமது தந்துவிடும் 
ஊக்கமென்ற குச்சி கொண்டு
ஓயாது உருட்டிட்டால் 
தோழர்களே ஓடுங்கள் 
வெற்றியது காணுங்கள் .....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#பூமித்தாயி தந்த வரம் # பூரித்து நிக்குதே மனம் 11.09.16 #26

#பூமித்தாயி தந்த வரம்
# பூரித்து நிக்குதே மனம்
11.09.16

பூமித்தாயி தந்த வரம்
பூவிழி நிறையும் பசுமை வளம்
மண்ணைப் பொன்னாய்
பொன்னே போல் மணியாய் 
மணிமணியான நெல்லாய்
மாற்றும் வித்தை கற்றே நம்
முன்னோர் காட்டிய ரஸவாதம்.....

சேறும் சோறும் இரண்டெழுத்து - ஒரு
காலால் மாறும் நம் தலையெழுத்து
உழைத்திட அஞ்சா மாண்புடைத்தோர் -நாம்
உய்ந்திடத் தேவை அவர் உயர்வுடைத்து...

மதலையின் பசிதீர முலைசொரிந்த
நெகிழ்வன்றோ அன்னையின் மேனி வண்ணம்
நெகிழி புதைத்து அதைக் குலைக்காமல்
மரபு தொலைத்த விதை விதைக்காமல்
அவள் அன்பின் ஈரமதை உறியாமல்
வளமுறக் காத்திடல் நம் நலம்பேணும்....

நெல் பொழியும் பசுங்காடும்
நீர்நிறைந்த கண்மாயும்
உரமிட்டுக் குறையா மண்வளமும்
உழைத்து உரம் பெற்ற தோள்கள் 
உயர்ந்திடவும் வகை கண்டிட்டால் ?
கனவதிலேயே
பூரித்து நிக்குதே மனம்!!!!!!....


கனவது நினைவாக வேண்டி நிற்கும் 
-ரத்னா வெங்கட்

#மாற்றான் தோட்டத்தில் என் மல்லிகை 08.09.16 #25

#மாற்றான் தோட்டத்தில் என் மல்லிகை
08.09.16

கண்ணுள்ளே மணியாய் அகம்
தழைக்க வந்த ஜோதியாய் எம்
நசையெனும் தீயிலு தித்திட்ட
நல்லமுதமாய்க் குறையில்லா நல்
அழகாய்க் குறைதீர்க்க வந்த எம் 
அன்னையின் மாற்றுருவான மகளே....

உச்சி முகர்ந்து கர்வம் மேலோங்க 
பிச்சிப்பூச் சூட்டிக் கலையரசி உன்னில்
கலையும் இயலும் இசையும் புகட்டிக்
காலத்தால் அழியாக் குணமுற் றென்றும்
குன்றா வளமாம் நிறைவான அன்பில்
குமுதமாய் மலர்ந்திட்ட செந்திருவே.....

அறிவும் நிறைவும் முதிர உயர்ந்து 
ஆல் போல் தழைத்தல் இயற்கையெனக்
கண்டு ஓர் இசைந்த இதயம் தனைக்
கருத்திலுணர்ந்து காதல் கொண்டு எம்
வாழ்த்தது வேண்டி மனமகிழ்வோடு
வாரணம் சூழ வலம்வந்த கோதையே....

பாசமெனும் பதியனிட்டுப் 
பாங்குறவே பந்தலிட்டு
நேசமென்ற நீரூற்றிக்
காத்த எம்
மல்லிகை மாற்றான் தோட்டத்தில் 
மணத்ததுவே.....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#தரையில் தொட்டணைக்கும் #பேசட்டும் உன் மௌனம் 07.09.16 #24

#தரையில் தொட்டணைக்கும்
#பேசட்டும் உன் மௌனம்
07.09.16

தரையில் தவழ்ந்து தொட்டணைக்கும் 
குளிர்த் திரையெனக் 
கவிந்தென் இமை மூடும்
வெண் புகையெனக்
கடக்கையில் சிலிர்ப்பூட்டும் 
மென் தடவலில்
உயிரின் வேர் தள்ளாடும்
மஞ்சு மட்டுமல்ல என்
அஞ்சுகமே நீயுமெனைத் தழுவையிலே...

காற்றினில் கலந்து மனம் வருடும்
கவியென இசைமழை
பொழிந்திருக்கும்
விரல் மீட்டலில்
சிணுங்கி ரீங்கரிக்கும்
மடிதனில் ஏந்தினால்
மயங்க வைக்கும் 
வீணை மட்டுமல்ல ஆயன் 
வேணுவையொத்த உன் மொழியும்தான்....

நாணத் திரையது மறைத்திருக்கும்
மோக நிலா மனதினில்
ஒளிந்திருக்கும்
விழிகளோ ஏகாந்தத்தில்
திளைத்திருக்கும்
வார்த்தைகள் பயனின்றி
பலம் இழக்கும்
கனவுகள் மட்டுமல்ல நம்
காதலும் கவிதைதான்..... 

தவழட்டும் மேகம் தரையில்
தாலாட்ட நீயென் அருகில்
கடக்கட்டும் கரையை அலைகள் 
தாண்டட்டும் அன்பின் எல்லைகள்
நிலவட்டும் மோனம்
பேசட்டும் உன் மௌனம்....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

Tuesday 6 September 2016

# உடல் வலிமை 06.09.16. #23

# உடல் வலிமை
06.09.16. 

சுவர் சரியாய் இருந்தாலே
சித்திரம் வரைய இயலும்
அன்னை கூறிய பழமொழி
அனுபவம் கண்ட பொன்மொழி..... 

அகம் பிரம்ம ஒளி
அதன் பொருள் தேடும் வழி
உள் மூச்சாயிருக்கும் வளி அதன்
உருவம் செதுக்கு நீயே உளி...... 

கடவுள் வாழும் கருவறை என்போரும் 
காயமிது வெறும் கருவி என்போரும் 
ஒருமித்து உரைப்பர் ஒரு கூற்று 
ஒழுக்கத்தோடு உடல் நலம் பேணு..... 

மருந்தே உணவாகும் நிலை தடுக்க
விருந்தே ஆனாலும் அளந்து உண்க
சோம்பித் திரியாமல் உடற்பயிற்சி -நிதம்
சாத்தியமாக்கி  விடக் கூடும் மகிழ்ச்சி... 

நாவடக்கி,உளம் கட்ட,உடல் வலிமை 
தேடி வரும் காயகல்பம் தேவையில்லை 
தேவை
உறுதி கொண்ட நெஞ்சும் 
உரம் பாய்ந்த தோளும் 
ஒருங்கமைந்த இளநெஞ்சங்கள் என்றும்
குன்றாத பெருஞ்செல்வங்கள்..... 

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

# ஆசிரியர் தின சிறப்புப் போட்டி 05.09.16 #22

# ஆசிரியர் தின சிறப்புப் போட்டி
05.09.16

அண்டமதில் ஞாயிறுதான் புற இருளை
ஆனந்த ஒளிகூட்டி அகற்றுதல் போல்
ஆவொன்று கன்றுக்கு ஊட்டுதல் போல்
அந்தகாரமது நீக்கிட்ட ஆசானாக..... 

கண் திறந்து காட்சிதனைப் பார்த்தாலும் 
காண்கின்ற திறனதுதான் வந்திடுமோ
ஊனென்ற பிறவி இதைப் பெற்றாலும்
ஊனமதை நீக்கும் கல்வி மருத்துவனாக.... 

அமுதமெனத் தன் குருதி ஈந்தவளும் 
ஆடிஓடிப் பொருள் தேடிக் காப்பவனும்
நம்பியெமை ஒப்படைக்கக் கல்லாமை எனும்
நதியைக் கடக்க வைத்த தோணியாக.....

ஏற்றமிகும் உயர்விடத்தில் கால் பதிக்க
ஏற்புடனே எம்மை ஏற்றிவிட்டு
எட்ட நின்று எம் மக்கள் இவரென்று
எல்லையிலா மகிழ்ச்சியுறும் ஏணியாக....

ஏற்றி விட்ட கைகள் கோடி அன்பு
ஏந்தி நின்ற முகங்கள் கோடி அவர்
என் தாய்க்கு ஈடாக்கி நன்றிகளை
என் கவிதைப் பூக்களால் சமர்ப்பிக்கிறேன்...

கவியாக்கம் - ரத்னா வெங்கட்