Saturday 18 March 2017

#தேர்வு #92

#தேர்வு

போகிற போக்கில்
பதில் சொல்ல முடியாத
பதிலொன்று இல்லாத
கேள்விகளை என் முன்
விளையாட்டாய் 
இறைத்துச் செல்கிறாய்
குழந்தையைப் போல! 
திணறி , அள்ளி,ஆராய்ந்து
சிந்தித்து, உணர்ந்து
வார்த்தைகளைத் தேடும் முன்
கடக்கிறாய் அனுபவம் தந்து
கடவுளைப் போல! 

வலிகள் நீ தந்தாலும்
தாண்டிடும் திறன் தந்தாய் ! 
துன்பம் சலித்துத் தக்க வைத்துப்
புறவுலகிற்காய்ப் புன்னகை 
சிந்தும் இதழ்கள் தந்தாய் ! 
சிரிப்பு சென்றடையாத என்
கண்களை  மறைக்க 
வேண்டிய அளவில் 
பாவனைகள் கற்பித்தாய்! 

வருத்தங்கள் உன் மேல் இருந்தாலும்
வாரி வழங்கும் வள்ளலல்லவா? 
இன்பமும் துன்பமும் 
சரியான விகிதத்தில்! 
ஒன்றின் பிடியில்
மற்றொன்றைத் தேட வைக்கும்
முயற்சியின் தூண்டுதலில் ! 
கோபம் சாத்தியமில்லை ! 
கொண்டாலும் செல்வதெங்கே? 

அணு அணுவாய் ரசிக்கிறேன்
அனு தினமும் நிந்தனை செய்து! 
இரண்டையும் ஒன்றாய்ப் பார்த்து
மந்தகாசப் பார்வையொன்றை ஈன்று
இன்றைக்கான கேள்விகளைத் தந்து
இமை தாழ்த்திக் கையிலெடுத்து
நிமிரும் முன் நகர்கிறாய்! 
திகைத்தாலும் தொடர்கிறேன்! 
முடிவில்லாத் தேர்வெழுதி உன்
மதிப்பீட்டிற்கான காத்திருப்பை! 

#ரத்னாவெங்கட்                        

#உயிர்வலி #91

#உயிர்வலி
****
உயிர் திணறும் வலியொன்றைத் தந்து
உடல் மட்டும் கேட்கிறாய்! எடுத்துக் கொள்! 
இரண்டையும் ஒரு சேரக் கொள்வாயெனில்! 

கடலோடு கலந்த ஆறொன்றை வழிதிருப்பிக்
கரையாக மறுக்கிறாய்! அணையொன்று இடு! 
தேக்கி வைப்பாய் உன் நினைவிலெனில்! 

மனம் கொன்று புதைத்து விட்டு
மலர்ப் பதியனிடுகிறாய்! காப்பாற்றி விடு! 
பூக்களாவது பிழைத்துப் போகட்டும்! 

ஆசையெனும் நெருப்பிலிட்டு உண்மையை
ஆகுதியாக்குகிறாய்! எரியட்டும் பொறு! 
சாம்பலில் என் இதயம் உயிர்த்திருக்கக் கூடும் ! 

#ரத்னாவெங்கட்.

#பதுங்கும் நிஜங்கள். 02.03.17 #90

#பதுங்கும் நிஜங்கள். 
02.03.17

பனிப்பொழிவிற்குக் கதகதப்பாய்
கம்பளியைச் சுற்றினாற் போல
காலத்தை ஒத்தி வைத்துக்
கனவுகளில் வெம்மை கண்டு
குளிர் காயும் நிழல்கள்
நிஜங்களின் பதுங்குதலில்! 

மழைத்துளி தெறித்திடும் வனத்தில்
குடை விரிக்கும் உண்மைகள்
மன இருள் துடைத்திடத் துடிக்க
மூடு பனியாய் மறைத்தே மனம் 
முகமூடியாய் அணிந்திடும் 
முன்னேற்பாடாய் பொய்களை! 

#ரத்னாவெங்கட்.

#காதல் பறவை #89

#காதல் பறவை


விரித்த சிறகுகள்  வான்வழி பறக்கச்
சிலிர்த்த மலரது இதழ்விரியத் துடித்துத்
திளைத்த நொடிகளின் கனம் வழியத்
திகைத்து நின்றது வாடி மடிந்திட! 

எடுத்த தேனின் சுவையில் கிறங்கித்
தொடுத்த அம்பின் வேகங் கொண்டு
தடுத்த காற்றை  மீறியே பறவை
கொடுக்கத் திரும்புமோ பூவின் உயிரை? 

#ரத்னாவெங்கட்.

#உனை வரைகிறேன் ஓவியமாய் #88

#உனை வரைகிறேன் ஓவியமாய்
   
**********

உனை வரைகிறேன் ஓவியமாய் 
தினம் கண்ணீரில் உன் நிறம் குழைத்து 
உப்பிட்டு உலகுள்ளவரை காக்கிறேன்
என் நினைவுகளில் உனைப் புதைத்து! 

உயிர் கலந்த உறவே உந்தன்
வண்ணம் பல தொட்ட தூரிகையில்
வரையும் ஒரு வானவில் கூட
உரிமை மறுத்து ஏகுதே வானில்! 

தனை மறந்து பருகும் இதயம்
கள்ளுண்ட வண்டாய் ஆகும்! 
என்றோ உனை மறந்து நீ உதிர்த்த
மனம் தொடாத உன் வார்த்தைகளை! 

தடைகள் தாண்டி வாவென அழைத்தேன்
காற்றாய் என்னுள் உயிர்த்திருக்க! நிலை
தடுமாறச் செய்து உணர்வழித்தாய்! மென்
கவிதை ஒன்றின் கருவறுத்தே! 

திரைக்குள் மறைந்தாய் ஒளியின் துகளாய்
இருண்டதென் வானம்....நில்லடா! 
குடைக்குள் மழை விழிகளில் தூறலாய்
விசும்புகிறது  உயிரே....சொல்லடா! 

#ரத்னாவெங்கட்.

#காதல் மேகங்களே #87

#காதல் மேகங்களே 
********

மலர்ந்து மகிழ்வாலே மனம்
நிறைந்து சூல் கொண்டு
தரித்து ஓரிடம் நில்லாது
கடந்து காற்றில் நகர்ந்து
கலைந்து சென்றிடல் தகுமோ? 
கனத்த கனவது நினைவில்
தழைத்து இன்னுயிர் செழிக்கப்
பொழிந்தே வரம் தருமோ? 

#ரத்னாவெங்கட்.

#வானவில் துகள் #86

#வானவில் துகள்
*****

காற்றில் ஆடும் தூசாய்
அலைக்கழிக்கிறாய்! பிறர்
கண்களில் விழுந்து உறுத்தும்
எண்ணம் சிறிதுமில்லை! 

வாலறுந்த பட்டமொன்றாய்
இடவலமாய் அலைய வைக்கிறாய்! 
மேகத்தில் தொலைவதன்றி
சிக்குவதில் விருப்பமில்லை! 

கவர்ந்திடும் பூவொன்றாய்
கருத்தில் மணக்கிறாய்! 
கொய்வதைத் தவிர்க்கிறேன்!
வன்முறையில் நம்பிக்கையில்லை! 

மயக்கிடும் நல் இசையாய் என்
செவிகளில் நுழைகிறாய்! 
மனதினை நீ அசைத்தாலும் அங்கே
சிறை வைக்க  ஓர் ஆசையில்லை! 

வானவில் வர்ணமாய் உன்
விழிகளில் நான் ஒளிர்ந்தாலும்
விடியும் வரை சேர்ந்திருக்க நம்
விதியினிலே சொந்தமில்லை ! 

#ரத்னாவெங்கட்.

காலம் கடந்து வந்த காற்றைப் போலானாலும் #85

காலம் கடந்து வந்த
காற்றைப் போலானாலும்
ஸ்வாஸத்தில் நிறைந்து
பழகிய சில நாட்களில் 
பிறந்ததில் இருந்து வந்த
பழக்கமொன்றாய்க் குருதி 
நாளங்களுடன் கலந்து விட்டாய்! 
பிரிப்பது சுலபமில்லை! 

மாற்றும் முயற்சியில் 
இதயத்தைக் கீறிக் கீறி
ரணமாக்கிக் கொள்கிறேன்!
மரண வலி மட்டும் மிச்சம் !
காயத்திற்கு மருந்தாகவும்
உன்னையே எதிர்பார்க்கிறேன்! 
குழம்பி, தெளிந்து, குழப்புகிறேன் உன்னை! 

நீட்டிய விரலொன்றை விடுவித்து
நீ போனால் உடைந்திடுவேன்! 
தாங்கிடத் தோளொன்று
அருகிலிருந்தும்
உன் கைப்பிடியில் அடங்குதற்காய்
புரியாது அடம்பிடிக்கும்
குழந்தையான மனதை வாரியணைத்து
சமாதானம் செய்யும் முயற்சியில்
என்னை இழக்கிறேன் உன்னிடம்!  

என்றோ மனதில் நுழைந்து 
நினைவடுக்குகளில் பதிந்த
பாடலின் வரிகள் 
அசந்தர்ப்பமான ஒரு கணத்தில்
வெளிவரத் துடிப்பதைப்
போன்றதானதாகத்தான்
உன்னுடனான என்
தொடர்பும் நிகழ்கிறது! 
சூழலுக்கேற்றவாறு பாடல்
தன்னை சுகமாகவும் சோகமாகவும்
மாற்றிக்கொள்ள 
குழப்பத்தின் வேகத்தில் நாட்கள்
நொடிகளாய்  நகர்கிறது ! 

#ரத்னாவெங்கட்.

மணித் துளிகளைத் தள்ளித் #84

மணித் துளிகளைத் தள்ளித்
தவமொன்று புரிவதாய்
என்னை நானே 
ஏமாற்றிக் கொள்கிறேன்! 
இடையில் கண் திறந்து
இல்லாத செய்தியொன்று
உன்னிடமிருந்து 
வந்திருக்கக்கூடுமென்ற
எதிர்பார்ப்பில் 
அலைபேசியைத்
திறப்பதும் மூடுவதுமான
கண்ணாமூச்சி 
விளையாட்டொன்றில்....! 

வெட்கம் கெட்ட மனம் 
ஆறாத புண்ணொன்றின்
ரணத்தைத் துடைக்க நீ
வரக்கூடும் என்று
நம்பிக்கை இழக்காது 
தெருவெங்கும் அலைந்து
தளராது யாசிக்கும்
பிச்சைக்காரனின் தொனியில்
இரவு முழுவதும்
புலம்பிக் கொண்டிருந்தது! 

தேடியே வலியைத் தலையில்
ஏற்றிய இதயமொன்று
உறங்காத இமை தாழ்த்தி
குற்றத்தை ஒப்புக்கொண்டு
வால் சுருட்டி
அரைக்கண் மூடிக்
காலடியில் கிடந்தது! 
உன் ஒரு செய்தியில்
மறுபடி துள்ளிப் பாயக்கூடுமென்ற
உண்மையின் தாக்கத்தை
உணர்த்தியதோர்
பரிதாப முனகலில்! 

#ரத்னாவெங்கட்.

#ஓரங்க நாடகம். ****** #83

#ஓரங்க நாடகம். 
******

கோரிக்கையொன்றை வைத்தாய்
எள்ளி நகையாடினேன்! 
வெள்ளி வரம்பிட்ட வயதைக் காட்டி! 
இதயம் இன்னமும் இளமையாய்
உள்ளதென் நினைவால் என்றாய்! 
மறுத்து வாதாடினேன்! 
மனம் சித்து விளையாட்டு காட்டும்
வல்லமை படைத்ததென்று! 
சரியென ஆமோதித்துச் சந்தேகத்தின்
விதைகளை என்னுள்
தூவிச் சென்றாய் அமைதியாய்! 
வேர் விட்ட விதையின் வீரியம்
தந்த குடைச்சலில் திரும்ப வந்து
எப்படியெனக் கேட்டேன்? 
வருத்தமாய் அமைதி காத்தாய்! 
கேள்விகள் கேட்க வைத்து
ஓரிரு வார்த்தையில் ஒரு
ஓரங்க நாடகத்தை நடத்தி
ஒற்றைப் பார்வையாளராய்க்
கட்டி வைத்தாய் மயக்கத்தில்! 
தெளிந்த நேரம் மேடையில் நானும்! 
பார்வையாளனாய் நீயும்.....! 
ஒற்றை வரியில் நீ செய்ததை
பத்தி பத்தியாய் வசனம் பேசியும்
செய்ய இயலாத பேரிடரில் 
மேடைக்கப்பாலுள்ள நிஜத்தை
உணர மறுக்கும் இருள் வடிவாய்
ஒளி வெளிச்சத்தில் மூழ்குகிறேன் நான்....! 

#ரத்னாவெங்கட்.

#கானலைத் தேடி....#82

#கானலைத் தேடி....
*******
வார்த்தை தவறிய சொல் ஒன்று
வாழ்ந்த வாழ்வினைக் கூண்டில் நிறுத்தும்
வண்ணம் சிதறிய  ஓவியமொன்று
வரைந்த தூரிகைக் கனவினை முறிக்கும்! 

கானலைத் தேடி அலையும் உள்ளம்
காலம் கடந்த முயற்சியில் பொங்கி
ஆசைத் தீயினை அணைத்திட வேண்டி
அழகிய நிஜத்தை மறந்திட நினைக்கும்! 

தப்பிப் பிறந்த ஸ்வரத்தின் இனிமை
தவறுதலான ராகத்தில் அழியும்
தவறிய பாதைகள் விதிவழி அழைக்கும்
தப்புத் தாளம் இசையினைக் குலைக்கும்! 

நடந்தது கையில் பிடிபடா வானம்
நடப்பது என்னுடன் என் நிழலாகும் 
நிகழ்வுகள் இல்லா அமைதி ஒன்றே
நிம்மதி தந்து நாட்களை நகர்த்தும்! 

இடவலமாக அலைந்திடும் மகிழ்ந்து
கிளைகள் தாவிக் கூத்தாடும் மனது
இறுக்கிப் பிடித்து ஒருமுகப்படுத்தக்
கிட்டிய வாழ்வின் அற்புதம் விளங்கும்! 

#ரத்னாவெங்கட்

#கனவுக் குளம் #81

#கனவுக் குளம். 

கனவுக் குளமொன்றைக்
கல்லறையில் இட்டுப் புதைத்துக்
கல்லொன்றை ஊன்றி வைத்துக்
கவிதையொன்றைச் செதுக்கி வைத்தேன்!

துவங்கிய நாளெது நினைவிலில்லை
துடித்த இதயத்தினொலி மறக்கவில்லை!
புதைத்திட்ட நாளின் நினைவொன்றில்
புத்தம்புதிய பதியனொன்றை நட்டு வைத்தேன்! 

நித்தம் பிழிந்தெடுக்கும் கடமைகளைச்
சித்தம் குவித்து நிதம் ஆற்றிப் புறந்தள்ளி 
மொத்தம் முடித்ததாய் மயங்கிய மாலையிலே
ஒத்தி வைத்த விஜயத்தைச் செய்து வைத்தேன்! 

பதியனொன்று பூக்காடாகி விரிந்து நிற்க
பிளந்திட்ட பூமி வழி குளம் அங்கு
பளபளத்த வெண்ணிலவின் நிழல் தன்னைப்
பிரதிபலித்து வாவென அழைக்க நின்றேன்! 

மூடி வைத்துத் தேங்கியதோர் தண்ணீரில்
முடை நாற்றமடிக்குமென நினைக்க மாறாய்
நீந்திடும் மீன்களும் அல்லிப் பூக்களும்
நினைவின் நிழல் தன்னில் செழிக்கக் கண்டேன்! 

வட்டச் சுழலில் சிக்கிச் சுழன்றிடுமோர்
இச்சைத் துகளின் பிடியில் மறுபடி 
கட்டுப்பட்டுத் துள்ளும் மனதினைச்
சஞ்சலமின்றிக் கனவுடன் சேர்த்தேன்! 

#ரத்னாவெங்கட். 

# காலம் விசித்திரமான கற்பனையில் 15.11.16 #80

# காலம் விசித்திரமான கற்பனையில்
15.11.16

(கைகளில் சிக்காதது
காற்று மட்டுமில்லை 
காலமும்தான். 
எனதென்று நான் நினைக்கும்
எதுவும் எனதல்ல. 
தலைமுறைகளின் தொடர் ஓட்டத்தில் காலத்தின் சுழலில் சிக்கிய 
சிறு துளியாய் நாம். 
கற்பனையிலல்ல நிஜத்திலும்
விசித்திரமானதே காலம்)
&&&&&&&&&&&&&&&&&&&&&

காக்கையின் கூட்டினில்
குயிலொன்று இட்ட முட்டை
காக்கைக்குச் சொந்தம் 
உள்ளிருப்பது குயிலென
உணர்ந்திடும் வரை
இரவல் ஒளியின் வெளிச்சம்!!!

தொடர் ஓட்டப் பந்தயத்தின்
ஒளிப்பந்தமாய் ஓர் ஒப்பந்தத்தில்
ஓயாது இறுதிக்கோடு வரை
தொடரும் கை மாற்றம்
தொடும் புள்ளியில் எதிர் நோக்கிக்
காத்திருக்கும் கரங்கள்
முடிவில்லா எல்லைக்கோடு!!!

வானப் பெருவெளியெங்கும்
வட்ட வட்டமாய் நீர்க்குமிழ்கள்
விழிமூடி இமை சிமிட்டச்
சிதறுமே ஒவ்வொன்றாய்
கண்மூடி நின்றால் தெரிவதில்லை
காட்சியின் அழகு
காணாது போனாலும் 
கணநேரம் நிற்பதில்லை!!!

பழுத்துதிர்ந்த இலைகள்
பளபளத்துக் கிளைகளைப்
பற்றி உறவாடும் 
பசுமை மாறா இலைகளைப்
பார்த்துப் பெருமூச்சு விட்டுச் சிரிக்க
உதிர்ந்தவற்றைப் பார்த்து
உதிராத ஒன்று
உதிர்க்குமோர் அலட்சியத்தில்
உதிர்க்கும் நமுட்டுச் சிரிப்பொன்றை
உதடு சுழிக்கும் காலம் !!!

கவியாக்கம்- ரத்னா வெங்கட்.

#எடுத்துக் கோர்த்த முத்துக்களில் ஒன்று # மொட்டவிழ்த்துவிடு இதழ்களை #79

#எடுத்துக் கோர்த்த முத்துக்களில் ஒன்று
# மொட்டவிழ்த்துவிடு  இதழ்களை
15.11.16

எடுத்துக் கோர்த்த முத்துக்களில் ஒன்று
தரை வீழ்ந்து தடம் மாறி மறையக் கண்டு
தடங்கியதில் முழுப்பெறாத மாலையொன்று
தவித்திடும் தன்வசம் இழந்தே பித்தாய்- அதன்
எண்ணமெங்கும் உலவிடும் காணாத முத்தாய்

வடமாகப் பூணுதற்கு வரமாகப் பெற்றதிங்கு
மடியேந்தி அள்ளிட்ட ஆழியின் சொத்தென்று
வாடாத மலர் போல அள்ளிக் கட்டிவைக்க
மாய நொடியில் ஒன்று கைநழுவ-அதன்
வண்ணங்கள் வானெங்கும் முகிலாய் அலைய 

தேடுதல் மட்டும் வாழ்வின் அடையாளமாய்
தேடாத நாளொன்று பிரிவின் துயராய்
வாடி நிற்பதே மனத்தின் பணியாய்
வாழ்வெனும் பிம்பமது கலையும் முன்னே
வந்து நிற்பாய் எந்தன் வாசலில் பெண்ணே
தீயொன்று எனைச் சுடும் முன் கண்ணே
தீதில்லை காலங்கள் கடந்தாலும் வந்தே
நீயும் மொட்டவிழ்த்துவிடு இதழ்களை

கவியாக்கம்- ரத்னா வெங்கட்.

#சம்மதம் சொல்லியே தந்துவிடு உள்ளமதை #மூச்சுக் காற்றே நூலாய் என்னிடம் #78

#சம்மதம் சொல்லியே தந்துவிடு உள்ளமதை
#மூச்சுக் காற்றே நூலாய் என்னிடம்
05.12.16

சம்மதம் சொல்லியே 
தந்துவிடு உள்ளமதை
சகியே ஒரு வார்த்தை 
சங்கேத மொழியிலேனும் ! 
சந்தேகம் இன்னுமோ?
சங்கடம் தீருமோ?
சசியே ஒரு பார்வை
சாரலாய் வீசியேனும்! 

கள்ளவிழிப் பார்வையில் 
தெளித்துவிடு  காதலை
கண்ணே கள்ளமதை
வைத்துவிடு சொல்லிலே! 
கன்னச் சிவப்பழகில்
பளபளக்கும் அன்பதை
கனிவாய்க் காட்டிவிடு
படபடக்கும் விழியிலே! 

இதழோரச் சிரிப்பினிலே 
இன்பத்தின் சாயலொன்றை
மதிமுகத்தின் மகிழ்வினிலே
மறைமுகமாய் உணர்த்திவிடு
இனியவளே சில்லென்று 
இதயத்தில் பூத்திடுவாயென்றே
இனித்திடும் தேனையொத்த
இதழால் நீ உரைத்துவிடு! 

செவிமடலை வருடிடும்
இசையாய் உள் நுழைந்து
தெவிட்டாத சந்தமொன்றை
இசைத்திடு பாட்டொன்றாய்
வேய்ங்குழல் எடுத்து
மூடிய  உன் இதழ் பிரித்து
பூபாள ராகமொன்றை
ஊற்றாய் என் உயிரினிலே
ஊதிடு மூச்சுக் காற்றே
நூலாய் உன்னிடம்! 

#ரத்னாவெங்கட்

# புதிருக்குள் புதிரானவள் 05.12.16 பாரதிதாசன் போட்டியாளர் #77

# புதிருக்குள் புதிரானவள்
05.12.16
பாரதிதாசன் போட்டியாளர்


எவரும் படித்திட இயலாத 
புதினமொன்றைப்
படைத்திட்டுப் பாராட்டுக்களை
எதிர்பாராத பிரம்மன்
தன் படைப்புத் தொழிலின்
உச்சத்தைத் தொட்டதாய்
தனக்குத்தானே
தட்டிக் கொடுத்துக் கொண்டு
நடக்கப்போகும் காட்சியொன்றை
வேடிக்கை பார்க்க 
வசதியான இருக்கை 
பார்த்து அமர்ந்தான் 

அறிவாளிகளெனப்
பிதற்றிக்கொண்டு திரிந்த
ஒரு வர்க்கம்
தன் ஆதாரத்தின் வேரெதென்று
அறியாமல் பலவிதமான
கோணத்தில் பார்வையிட்டுத்
தம் அறிவிற்கு எட்டிய வரையில்
புதுப்புது அர்த்தங்களைக்
கற்பித்தே பல பெயர்களில்
அழைத்துத் திரிந்தன

ஆயிரம் நூறாயிரமாய்க்
குவிந்த பொழிப்புரைகளில்
குருடர் உணர்ந்த யானையின் 
பிரம்மாண்டம் சிறு சிறு 
துண்டுகளாய்ச் சிதறிக் கிடந்தது
முடிவில் மூளைக்கு எட்டாத
முயற்சியொன்றைக் கைவிட்ட
சமுதாயம் சீச்சீ இந்தப்
பழம் புளித்ததெனத்
தன் இயலாமையை
மூடி வைத்து அறிவித்தது
புதிரான இதைப்
படித்து மதித்து
வழிநடப்போர்
மதி கெட்டு அழிவாரென! 

படைத்தவன் தோல்வியை
ஒத்துக்கொண்டு
பைத்தியமாய் அலைவதாய்
சமீபத்திய தகவலொன்று
கிடைத்தது! 

#ரத்னாவெங்கட்

#நீ மீட்டிய யாழ் கொடுத்த சுரம் என்னருகில் நிற்கிறது #பித்தாகக் கிடந்து வாழ்ந்தென்ன பயன் #76

#நீ மீட்டிய யாழ் கொடுத்த
சுரம் என்னருகில் நிற்கிறது
#பித்தாகக் கிடந்து வாழ்ந்தென்ன பயன்
29.12.16


நீ மீட்டிய யாழ் கொடுத்த
சுரம் என்னருகில் நிற்கிறது
நீ பேசிய மொழி பாடலின் வரியாய்
உணர்வுகளோடு உறைந்திருக்கிறது!

நீ பார்த்த பார்வைகளில் என் மனம்
குளிர் காய்ந்து சுகித்திருக்கிறது
நீ தீண்டிய வாழ்வின் பக்கம்
உன் கைக் குறிப்புகளால் நிறைந்திருக்கிறது!

நீ சென்ற வழித்தடத்தில்
உலகிங்கு அஸ்தமித்து நிற்க
நீ பிரதிபலிப்பாய் விட்டுச் சென்ற
உறவொன்று பிரகாசித்து இழுக்கும்! 

சுரம் ஒன்றில் விளையுமோ சந்தம்
சுருதி கூட மூன்றின் பந்தம்
சுகம் கலைய ஏங்கிடும் நெஞ்சம்
சுமை அல்ல வாழ்வின் பந்தம்! 

முத்தாக என் உயிரில் உனைப் பொருத்தக்
கொத்தாக மலர் ஏந்தி வேண்டி நின்றேன்
வித்தாக வரம் தந்து வேர் அறுத்தாய்
பித்தாகக் கிடந்து வாழ்ந்தென்ன பயன்! 

#ரத்னாவெங்கட்.

#எங்கே நிம்மதி 30.12.16 #75

#எங்கே நிம்மதி
30.12.16

கண்ணாமூச்சி விளையாட்டில்
கைதேர்ந்த ஒன்றின் கூட
கண்கட்டிக் காட்டில் விட்டுக்
கைநழுவி நகர்ந்தோடும் காலம் 
காரிருளில் கைதடவி
கண்கட்டை அவிழ்த்தாலும்
கையதனில் சிக்காமல்
காற்றினிலே மறைந்து நின்று
கெக்கலிப்புக் காட்டிக் காட்டி
கடும் பித்தாய் அலைய வைக்கும்! 

கண்ணருகில் கல்லை வைத்துக்
கல் அல்ல குன்றே என்று
கண்மூடிப் பிதற்றும் கூட்டம்
கடைசிவரை காண்பதில்லை 
குறுக்கிடும் மலையொன்றைக்
கலங்காமல் நகர்த்திச் செல்லும்
கடின மனம் படைத்தோர்
கண்டாலும் நிற்பதில்லை! 

தேடும் உள்ளங்கள் 
தடுமாறி அலைகையிலே
தேடாத நெஞ்சமொன்றில் பதுங்கித்
தேவைகளின் இருப்பிடம் 
தேடியலைந்து கச்சிதமாய் எதிர்
திசையொன்றில் குடியேறும் ! 

எங்கே எதிலே என்று
எந்நாளும் குழம்ப வைத்து
உள்ளேன் உனக்குள்ளேயென
உணர்த்திடும் பொழுதொன்றில்
உலகம் வசப்படும் நாளில்
உயிரொன்று உடல் நீங்கும்
நிம்மதியாய்! 

#ரத்னாவெங்கட்.

#முத்திரைக் கவிதை-4 #மரணம் முடிவுரை அல்ல #74

#முத்திரைக் கவிதை-4
#மரணம் முடிவுரை அல்ல
************
நிரந்தரமில்லாதது வாழ்வு
பிறந்த கணமே 
நிச்சயிக்கப்பட்டது
இறப்பென்பது! 
வாழும் காலத்தில்
குறிக்கோளில்லாது வாழ்ந்து
மரணித்து மண்ணாவதில்
அர்த்தம் இல்லை! 
விதையொன்று புதைந்து
மரமாய்ப் பலவித உயிரினங்களுக்குப்
பயன்படுதல் போலே
வருங்காலச் சந்ததி வளம்பெற
நல்ல செயல்கள் செய்ய
இறந்த பின்னும் மற்றவர்
நினைவில் வாழுதல் 
சாத்தியமே! 
மரணம் முடிவுரை அல்ல
பிறர்க்கென வாழ்பவர்களுக்கு ! 
*************
ஒவ்வொரு விதையும்
ஒரு மரத்தின் வேர்களைத்
தன்னுள் அடக்கியே உருவெடுத்து
வீழ்ந்து புதைந்து மண்ணில்
விழுதூன்றிக் கிளைபரப்பி
புதைந்தாலும் வேரென்று
மரித்தாலும் மரமாக
வேறாக மாறியிங்கு
விண்ணுயரம் தான் அளக்கும்! 

ஊற்றுக்கண் திறந்து
காற்றடைத்த பையொன்றை
நிரந்தரமென நினைத்து
ஆரம்பித்ததோர்
நீண்ட பிரயாணத்தில்
நிர்ணயிக்கப்பட்டது இலக்கென்று
புரிபடாமல் பல்வேறு பாதைகளில்
பற்றுக் கோல்களின் உதவியுடன்
கடக்கும் தடங்களில்
சேகரிக்கும் மூட்டைகள்
சுமையென அறியாமல்
தோள்களில் சுமந்து
இறக்கிடும் வழியறியாத
கணமொன்றில்
பயணம் முடிவுற..... 

காலப் பெருவெளியில்
கைநழுவும் மணல் துகளில்
பெயர் பொறிப்பதை விடக்
கற்பக தருவாய் நல்
வரம் கொடுத்து 
நினைவொன்றில்
பசியமரமாய் உயிர்பெற
நிற்காது நகரும் 
நொடி முட்களாய்ப்
பிறந்து நகர்ந்து
இழந்திடுமோர் தருணங்கள்
உயிர்த்திடும் தொடர்ந்திடும்
புதிய கணக்கொன்றாய்! 

#ரத்னாவெங்கட். 

வேறாக- விதை விதையாகவே இருந்திட
                உபயோகமில்லை. 
                உருமாறி வேறொன்றாகி
                உபயோகமாக உயர்ந்து
                நிலைத்திடும் 
                உலகில் புகழுடைத்தே!

#காய்ந்து உதிர்கின்ற இலைகளாய் வாழ்வின் பிரிவுகள் சருகுகள் புன்னகைப்பதில்லை #73

#காய்ந்து உதிர்கின்ற இலைகளாய் வாழ்வின் பிரிவுகள்
சருகுகள் புன்னகைப்பதில்லை
12.01.17

காய்ந்து உதிர்கின்ற இலைகளாய் 
வாழ்வின் பிரிவுகள் அலைமோதிப்
பாய்ந்து ஓடிய நதியொன்றின்
கானல் வரிச் சுவடுகளாக
சாய்ந்த கதிரவனின் இரவல் ஒளியில்
வாழும் பிம்பங்கள் தம்
மாய்ந்த இளமையின் நிழலொன்றைப்
பாவனையாய்க் குடை பிடிக்கும்!  

துளிர் விடும் உறவுகள் நிலைக்குமென்று
தளிர் மனம் தழைத்தே உயர்ந்தோங்கும்
துளிர்த்துப் பூத்துக் காய்த்து நின்று
தரு அது கொடை என நிழல் தருமே
சுழற்சியில் பழையன கழிதலும்
துளிர்த்திடும் புதியன புகுதலும் 
இயற்கையில் நிகழும் நிகழ்வே! 

வரமாய்க் கிடைத்த காலத்தின் துளியொன்று
கரங்களில் தவழ்ந்த பொழுதொன்றின்
தரமது அறியாது தவற விட்டுப்
பாரமென மரக்கிளையில் ஊசலாடித்
தருணம் வந்ததென்று தரையிறங்கிச்
சுருண்டு காற்றில் அலைபாய்ந்து
மருண்டு மக்கி மண்ணாகும்
சருகுகள் புன்னகைப்பதில்லை! 

#ரத்னாவெங்கட்.

#ஒரு முறை புன்னகைக் கொடு 18.01.17 #72

#ஒரு  முறை புன்னகைக் கொடு
18.01.17

கருவேலங்காடொன்று செழித்து வளரும்
கருமேகம் கவிந்து பயம் காட்டும்
கருங்கோட்டான் கூவுதலில் உயிர் நடுங்கும்
காவு கேட்டு அலையும் ஒரு மிருகம்!  

விஷக்கனிகள் உண்டு எச்சமிடும்
விரிந்த சிறகுகளில் திடம் சேர்த்து
விடைக்கும் அலகொன்றைக் கூர் தீட்டி
விழி கொத்தக் காத்திருக்கும் பறவையினம்!  

பிளவுற்ற நாவொன்றைக் காட்டி மயக்கிப்
பல்லில் சேர்த்து வைத்த நஞ்சைப் புகட்டிப்
பிணைத்துப் பித்தாய்த் திரிய வைத்துப்
படமெடுத்துப் பளபளத்து நெளியும் அரவினம்!  

முள் அகற்றிப் புது வனமொன்றாய்
முகில் கண்டு பீலியசைய மயில்
கவியுள்ளம் பொங்கப் பீடு நடையிடக்
குயில் கூவும் பிருந்தாவனமாய் ...

ஒளி தீண்ட விலகும் இருளின்
ஒவ்வாமை உள்ளத்தின் கருமையதில்
ஒளிந்திருக்கத் தூண்டியதை வெளிச்சமாக்க
ஒளிச்சிதறும் மத்தாப்பூவாய்
ஒரு முறை புன்னகைக் கொடு! 

#ரத்னாவெங்கட்

# நல்லதோர் வீணை செய்தே பாரதிதாசன் சான்றிதழ் போட்டி. கவியுலகப் பூஞ்சோலை. #71

# நல்லதோர் வீணை செய்தே
பாரதிதாசன் சான்றிதழ் போட்டி.
கவியுலகப் பூஞ்சோலை.
***********
சுமந்து செல்லும் காற்றொன்று
நிசப்தத்தைக் கலைத்துச் செல்ல
உருவாகும் ஒலி அலைகள் எழுப்பும்
நிராசையின் எதிரொலிகள்!

இன்னிசையாய்ச் சில அதிர்வு
இமை வருடி இதயம் தொட
இயல்பற்ற ஓசையொன்றாய்ச் சில
இரு செவியும் கடந்து போகும் !

மீட்டிடுமோர் விரல் வழியே ராகங்களாய்
வீணையொன்றின் விதி பேசும்
மீஒலியாய் ஒளிந்திருக்கும் நாதமதைப்
பீடமொன்றில் ஏற்றி வைக்கும்!

லயம் தவறாப் பாங்கினிலே
லகு த்ருதக் கணக்கினிலே
ஸ்ருதியோடு ஒன்றி நிற்க
ஸ்வரம் ஸ்வரமாய் மழை பொழியும்!

குறைவில்லா அமிழ்தனைய இசையைக்
குடமதிலே சுழன்றலையும் மூச்சொன்றாய்க்
குறைவறக் கொண்டதோர் அரும் கருவியைக்
குறைகள் கண்டு புழுதியிலே எறிவதுண்டோ?

நலிந்திட ஒலி திடம் குறைந்திட-மன
வலி மிகுந்திடப் படும் துயர் துடையாது
பலி கொடுத்திடல் முறையோ?
எழு நடந்திடு தோள் கொடுத்திட
விழி துடைத்திடு விரல் மீட்டியே
பொழிந்திடு நல் இசையாய்!

#ரத்னாவெங்கட்.

வழி தவறும் இளைய சமுதாயம் புழுதியில் எறிந்திட்ட வீணைகள் போல
அவர்களைத் தூசு தட்டி மறுவாழ்வு கொடுக்க முடிந்தால் நலமென்ற ஒரு கருத்தைவைத்து முயற்சித்துள்ளேன்.
நன்றிகள்.

#இருட்டில் ஒளிந்திருக்கும் விடியல். #மீ மொழி செய்யுட்கலை சூடிகை. #70

#இருட்டில் ஒளிந்திருக்கும் விடியல். 
#மீ மொழி செய்யுட்கலை சூடிகை. 
22.01.17
***********
நமக்குள்ளே மறைந்திருக்கும் ஆற்றலை
இறைத்தன்மையை உணரும் சாத்தியம்
ஐம்புலனைக் கட்டுப்பாட்டில் வைத்து
நமக்குள்ளே தேடும் கணத்தில்
புலப்படும் ஒளியில் புரியும்
பிரச்சினைகளின் தீர்வு சிக்கலின்
ஒரு முனையைக் கண்டுபிடிப்பதிலென்று! 
நுனி கிடைக்காத பட்சத்தில் 
அமைதியாய் அங்கீகரிப்பதிலென்று! 
வாழ்க்கை நமக்கென மறைத்து வைத்திருக்கும் ரகசியங்கள்
முன்னமே தெரிந்துவிட்டால்
சுவாரசியம் என்பது ஏது? 
***********
திரிந்த பாலெனத்
தன்னுள்ளே
சுவாரசியமான இனிப்பை
அடக்கிய காலத்தின் 
ஒரு பாதியாய் நீண்ட இரவு
தொலைத்த ஒன்றை
தொலைத்த இடத்தில்
திரும்பத் திரும்ப
தேடி அலுத்துப் போனதன் 
துடிப்பு
நட்சத்திரம் உறங்கிய
பொழுதொன்றில் 
துயரின் நிழல் நீண்டு
ஆட்சி செலுத்தத் 
தலையணை வைத்து
அமுக்கப் பார்த்தும்
புரண்டு திமிறி
இமைகளைக்
கல்லாய் அமிழ்த்திடும்
கனவொன்றை 
நிறுத்தி வைத்து
அனிச்சையாய்த் தொடர்ந்த 
தேடும் படலமொன்றைத்
தன்னிச்சையாய்
உள் நோக்கித் திருப்பிட
உபரியாய்க் கைகள் கொண்டு
ஆழ்ந்து அகழ்ந்து 
அமிழ்ந்திட விடாது
கலைக்கும் பிசாசுகள்
உதறிச் செல்லும் 
ஒரு முகப்படுத்தி கவனம் குவித்திட! 
நீர்த்துப்போன நிராசைகளை
வடிகட்டி உருவற்ற வெண்மையொன்றை
உணர்ந்து உள்வாங்கி
உருவேற்றப் பிறந்திடுமோர்
ஒளியின் துளி
உள்ளிருந்த இருளினின்று
வெளிப்படுமோர் உண்மையான 
இனிப்பன்றோ? 

#ரத்னாவெங்கட்.

#இருட்டில் ஒளிந்திருக்கும் விடியல். #மீ மொழி செய்யுட்கலை சூடிகை. 22.01.17 #69

#இருட்டில் ஒளிந்திருக்கும் விடியல். #மீ மொழி செய்யுட்கலை சூடிகை. 22.01.17  #69


 *********** நமக்குள்ளே மறைந்திருக்கும் ஆற்றலை இறைத்தன்மையை உணரும் சாத்தியம் ஐம்புலனைக் கட்டுப்பாட்டில் வைத்து நமக்குள்ளே தேடும் கணத்தில் புலப்படும் ஒளியில் புரியும் பிரச்சினைகளின் தீர்வு சிக்கலின் ஒரு முனையைக் கண்டுபிடிப்பதிலென்று! நுனி கிடைக்காத பட்சத்தில் அமைதியாய் அங்கீகரிப்பதிலென்று! வாழ்க்கை நமக்கென மறைத்து வைத்திருக்கும் ரகசியங்கள் முன்னமே தெரிந்துவிட்டால் சுவாரசியம் என்பது ஏது? *********** திரிந்த பாலெனத் தன்னுள்ளே சுவாரசியமான இனிப்பை அடக்கிய காலத்தின் ஒரு பாதியாய் நீண்ட இரவு தொலைத்த ஒன்றை தொலைத்த இடத்தில் திரும்பத் திரும்ப தேடி அலுத்துப் போனதன் துடிப்பு நட்சத்திரம் உறங்கிய பொழுதொன்றில் துயரின் நிழல் நீண்டு ஆட்சி செலுத்தத் தலையணை வைத்து அமுக்கப் பார்த்தும் புரண்டு திமிறி இமைகளைக் கல்லாய் அமிழ்த்திடும் கனவொன்றை நிறுத்தி வைத்து அனிச்சையாய்த் தொடர்ந்த தேடும் படலமொன்றைத் தன்னிச்சையாய் உள் நோக்கித் திருப்பிட உபரியாய்க் கைகள் கொண்டு ஆழ்ந்து அகழ்ந்து அமிழ்ந்திட விடாது கலைக்கும் பிசாசுகள் உதறிச் செல்லும் ஒரு முகப்படுத்தி கவனம் குவித்திட! நீர்த்துப்போன நிராசைகளை வடிகட்டி உருவற்ற வெண்மையொன்றை உணர்ந்து உள்வாங்கி உருவேற்றப் பிறந்திடுமோர் ஒளியின் துளி உள்ளிருந்த இருளினின்று வெளிப்படுமோர் உண்மையான இனிப்பன்றோ? #ரத்னாவெங்கட்.