Thursday 29 December 2016

#நெடுந்தூரப் பயணம் 06.10.16 #68

#நெடுந்தூரப் பயணம்
06.10.16

தாய்மடி சேர ஓட்டமெடுத்துத்
தனியொரு ஆளாய் இடமும் பிடிக்கத்
தொடங்கிடும் நம் கருவறைப் பயணம் 

விழியது திறந்து வீழ்ந்திட்ட நேரம்
புவியது தாங்கிட உயிர்த்திட்ட கணத்தில் 
தொடங்கிடும்  நமது வாழ்க்கைப் பயணம் 

நெல்லில் எழுதிய அகரம் தொடங்கி
மேற் படிப்புகள் பட்டங்களென்றே
வேலையில் முடிவது கல்விப் பயணம். 

இருமனம் இணைந்த காதலுமிங்கே
திருமணம் கண்டு இறுதி வரையில்
இயைந்து வாழ்தல் இல்லறப் பயணம். 

மக்களைப் பெற்று மனிதராய் வளர்த்து
நற்பண்பு புகட்டும் நட்பாயிருக்க
மலரும் நல்லறப் பயணம் 

சுயநலமில்லா மனிதம் படைத்து
பிறர்நலம் காக்கச் சிறிதளவேனும் 
நன்மை பயத்தல் மனிதப் பயணம் 

தேடுதல் இல்லா மனிதருக்கிங்கே
நின்றிட இயலா ஓட்டம் இதுவே
தேடித் திரிபவர் மகிழ்ந்து உணர்ந்து
பகிர்ந்தே ரசிக்கும் நெடுந்தூரப் பயணம் 

கவியாக்கம் - ரத்னா வெங்கட்.

# நம்பிக்கையின் பலம் 05.10.16 #67

# நம்பிக்கையின் பலம்
05.10.16 

தன்னிடத்தில் வைத்தல் பலம்
தன்மை உணர்ந்து பிறரிடம்
வைத்தல் நலம்....

தன்கையைப் போலே தனக்குதவும்
தானுயரத் தடைக் கற்களை
நகர்த்தியே தரும் ....

ஆறறிவு உள்ள இனம்
ஆனாலும் அவசியம்
நம்பிக்கையூட்டும் மனம் 

அளவு குறைந்திட்டால் தாழ்விலும்
அதுவே உயர்ந்திடக் கனத்திலும்
தலை குனியும்....... 

கடவுளின் மேல் பாரமிட்டுக்
கண்மூடிக் காத்திருந்து
காண்பார் பலர்.... 

உள்ளத்தின் விளக்கேற்றி
ஊக்கமதின் துணையோடு
உயர்ந்திடுவார் சிலர்....

குறையில்லா உடல் பெற்றும்
நம்பிக்கைக் குறைபாட்டில்
நலிந்தோரும் தவழ்ந்திட.... 

உடலதின் குறையதனை இதன்
உறுதுணையோடு 
வென்றவரோ உயரத்தில்......

எண்சாண் உடலதைக் கட்டும்
எண்ணங்கள் சீர்படுத்தும் 
நம் மூளையதும்.... 

உணர்வுகள் பின்னே ஒன்றி
உறவது தேடிச் செல்லும்
நம் இதயமும்..... 

ஒற்றுமையாய் செயலாற்ற
ஒருங்கிணைக்கும் 
நம்பிக்கையே பலம்
நம்பினால் கிடைத்திடும் வளம் 

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#விழுந்தாலும் விதையாகிடு. 04.10.16 #66

#விழுந்தாலும் விதையாகிடு. 
04.10.16

எல்லைகள் தாண்டி தேசங்கள் விரிய
வேலிகள் இட்டு தேசங்கள் குறுக்கி
வேலிகள் தாண்டி நேசங்கள் மலர
தேசங்கள் பேச்சு வார்த்தை நடத்தும் 

எல்லையின் காவல் அதிகப் படுத்தி
நல்லிணக்கத் தூதுவர் பெயருக்கென
நட்பென்று நேசக்கரம் நீட்ட
எழுதாத நாடகங்கள் அரங்கேறும் 

எல்லைப் பணியில் எம் வீரர்
தன்னலம் கருதா நம் தோழர் 
எம் உறக்கம் உம் பரிசே
தலை வணங்கி வாழ்த்துகிறோம் 

மகன், கணவன், தந்தை என்ற
அடைமொழி மறந்த காவலரும்
இடியோ மழையோ பனியோ புயலோ
இமை சோராமல் எமைக் காக்க 

திரும்பிடுவாரோ முழுதாக இல்லை
வந்திடுவாரோ பெட்டியிலே 
விதியினை அறிந்தவர் யாரோ இங்கே
அறிந்தே ஆற்றுவார் கடமையதை 

உடலது பூமியில் விழுந்திட்டாலும் 
மனங்களில் மரமெனத் துளிர்த்திடும்
விதைகளன்றோ இவர் தியாகங்கள் 


கவியாக்கம் - ரத்னா வெங்கட்.

#சதுரங்க வேட்டை. 04.10.16 #65

#சதுரங்க வேட்டை. 
04.10.16

மந்திரத்தால் மாங்காய் 
மண்ணில் விழுமென்றே
மாயையில் திரிந்தே
மதிகெட்டு நின்றார்

குறுக்கு வழியே
பொருள் தேடிச்சென்று
போகாத இடமும்
கூடாத நட்பும் 
கொண்டே அவர் 

புறவாசல் வழியே
திரு தேடிவருமென்று
திருடரை நாடியே
பலியாடாய் நின்றார் 

பேராசை தன்னில்
ஏமாளியென்றாகி
வாய்ச் சொற்கள் வீசும்
வலை தன்னில் விழுந்தே 

சதுரங்க ஆட்டமதில்
கணக்கெடுத்துப் பிறர் 
நகர்த்தப் பலியாகும்
காய்களோ இம்மூடர்கள் 

ஒட்டியது தெரியாமல் குருதி 
உறிந்திடும் அட்டையென
உணர்ந்திடுமுன் 
உறவாடிக் கெடுப்பார் 

அப்பாவி ஒருவரைக் கண்டால்
அமுக்கிடுவார் கோழியென
இனிமையாய்ப் பேசி 
இளித்த வாய் ஆக்கிடுவார்.  

புரட்டாலே பணம் சேர்த்துப்
பலகாலம் வாழ நினைக்கப்
பலிக்காது வால் பிடித்துப்
புலியைத் துரத்தும் கதை 

பொய்புரட்டு ஏமாற்றும்
பேராசை ஏமாறும்
உண்மையொன்றே உயர்த்திவிடும் 

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

#மெட்டுக்குப் பாடல் 03.19.16 #64

#மெட்டுக்குப் பாடல் 
03.19.16
பல்லவி 

விழியே விழியே கதை பேசு
விழியால் நீயும் வலை வீசு

கவியே கவியே மொழி பேசு
இதழால் காதல் மொழி பேசு.  

சரணம் 1

அழகே உன்னை ஆண்டவனும் 
அதிசயமென்றே படைத்தானோ
அதிசயமே உனைக் காக்கவென்ற
அருகினில் எனையே சேர்த்தானோ

மலரே மலரே மணம் வீசு
மலர்ந்தே என்னுள் ஒளி வீசு (விழியே)

சரணம் 2

ஆருயிரே என்னை அணைத்துவிடு
ஆசையின் பிடியில் இருந்துவிடு 
ஆடையில் நூலாய்ச் சேர்த்துவிடு என்
ஆவி துடிக்குதே இணைந்துவிடு

உயிரே என்னுள் உயிர்த்துவிடு
உறவாய் வாழ உறுதி கொடு (விழியே) 

கவிமுயற்சி- ரத்னா வெங்கட்

#மனக் கிடங்கு 03.10.16 #63

#மனக் கிடங்கு
03.10.16

பூட்டிக் கிடக்கும் மன
வீட்டுக் கிடங்கைத் திறக்கும்
வேகம் எப்போதேனும் வருவதுண்டு......

நினைவுகளின் அழுத்தத்தோடு
பின்னப்பட்ட வலைகளின்
நீடித்த நிழல்கள் 
சுவற்றில் சித்திரங்களாய்
நேசித்து சுவாசித்து 
கண்களில் சுமந்த கனவுகள் 
மக்கிப் போன நெடியாய்
முகத்தில் மோதிப் பறந்த
வௌவாலாய்க் குன்ற
வைக்கும் சில கணங்கள் ........

குப்பை கூளம் வாரியெடுத்து
கதவு திறந்து காற்றும் ஒளியும் 
வந்து நிறைத்த நிமிடம்
கண்ணில் விழுந்தது...
கண்வழி நுழைந்த கனவுகளின் 
கன்னிமை குறையாத தொகுப்பு

உள் மனதின் ஆசைகள் -அதில்
உருவெடுத்த வார்த்தைகள்- என்
உணர்வுகளின் பொழிப்பு -உன்
விழி சேரா பதிப்பு 
விரல்கள் வலித்திடும் நெருடுகையில்
அணையிட்ட நினைவுகளை
அசையிட்டுப் பார்க்கின்றேன் 

வரிகளினூடே விரிந்த
வலிகளின் இன்பத்தை 
பக்கங்களின் 
மடித்த காதுகளை 
நீவி விடுத்துப் படித்து
நீந்திடையில்
நிகழ்காலக் குரல்கள்
நிதர்சனத்திற்கிழுக்க

காது மடிக்கப்பட்டு
பாவமாய் எனைப் பார்த்து
பழைய இடத்தினிலே
பதுங்கும்..
பூட்டெடுத்துத் திரும்புகையில் 
ஊர்ந்திருக்கும் அதன் கண்கள்
முதுகினில்...
மறுபடியும் திறக்கும் எண்ணம்
மனம் காணும் வரையிலும் 
மறைந்திருக்கும் உயிர்
வாழ்ந்திருக்கும் என்
கனவான உன் நினைவில்.....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்