Thursday 25 August 2016

# நான் ரொம்ப நல்லவன் 25.08.16 #16

# நான் ரொம்ப நல்லவன்
25.08.16

வல்லவனா நானிருந்தா அவன்
வந்தா போனா கும்பிடுவான்
நல்லவனா நானிருக்க என்ன
நல்ல கோமாளியா மாத்திப்பிட்டான்...

பாடஞ்சொல்ல ஒத்த ஆளா
பள்ளிக்கூடம் போனேன் நானு
பயபுள்ள கெஞ்சினாலும் எட்டிக்கூடப்
பாக்கலயே  பூத்தகண்ணு கெறங்கித்

தானா உறங்கையிலே வந்தானய்யா 
பாயோடு படமெடுத்துப் பத்தியிலே
பத்தி வச்சானய்யா நாடறிய என்னப்
பாத்து எக்காளமாச் சிரிச்சானய்யா......

உறவு முறை கொண்டா டித்தான்
ஊரடிச்சு உலையில் போட்டான்
உடும்பப் போல கெட்டியாத்தான்
நாக்காலியில் ஒட்டிக் கிட்டான்  
நாலு வருசத்துக்கொரு முறை
உரிமை யாத்தான் வந்து நின்னான்.... 

என்னடான்னு கேக்கப் போனா
அண்ணாச்சின்னு கட்டிக் கிட்டான்
உன்னப் போல ஊரில் யாருன்னு
அதிசயமா மெச்சிக் கிட்டான்.....
அசட்டுச் சிரிப்பு வச்சுப்பிட்டு
'அவ்வ்வ்வ்வ்' ன்னுதான் வந்தேனுங்க 
ஆமாமுங்க'நான் ரொம்ப நல்லவன்'....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்.

#ஏக்கம் 24.08.16 #15

#ஏக்கம்
24.08.16

நித்திரை கரைந் திடத்தன் 
முத்திரை பதித்திடுமே நிதம்
புத்தி குடைந்தே மணலாய்க்
குமித்திட்டு  சித்தம் எங்கும்
ஊர்ந்து திரிந்திருக்கும் நண்டு....

அழையாமல் கண்வழி வாசல்
நுழைந்திட்டு அனுமதி பெறாமல்
மனக் கதவை அடைத்திட்டுப் பின்
புழுக்கம் தாங்காது வாயால்
புற வெளியேறும் பெருமூச்சு.....

தீர்த்திடும் வகையுள்ள தொன்று
சிறு ஆசையில் விளைந்திட்ட கன்று
ஊக்கமது கொண்ட உள்ளம் பிறர் 
தேக்கம் தவிர்த்திடத் திரு ஈயும்
நல்லிதயம் இணைந்திட நீங்கும்.....

தீர்ந்திட வழியில்லா ததொன்று
காழ்ப்பும் கசடும் வேராகி உள்
அழுக்கில் விளைந்த பயிராகி
கருவேலங்காட்டு முள்ளாக மன
வளம் உறிந்து தரிசாக உமிழும்...... 

வருமுன் காப்போர் ஞானியர் 
வந்தபின் தீர்ப்போர் அறிவானவர்
வழிமாறி வழிகாணத் தெரியாத மூடரை
வழித்து விழுங்கும் புதைகுழி 'ஏக்கம்'...... 

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

# பருவம் 23.08.16 #14

# பருவம் 
23.08.16

அமுத மதைப் பருகிக்கண் கிறங்கி
அன்னை யவள் மடியாம் அரியணையில் 
அரிதுயில் கொண்ட தொரு காலம்
அது வானவில்லின் வாழ்வையொத்த நேரம்.....

தளர் நடையும் யாழிசை மொழியும் 
கொண் டாடித் திரிந்திருக்கும் பேதை
தலைவாரிப் பூச்சூட்டி அழியாவரம் தேடிப்
பண்பாடிச் சென்றவிடம் கல்விச் சாலை.....

அரும்பொன்று மலராகப் பெதும்பை யவள்
மங்கையென மாற்றத்தில் மின்னுகிற உருவம்
அவள் மனமெங்கும் குழப்பங்கள் கேள்விகள் 
மின்னலிடத் தேவையது வழுக்குப் பாறை 
தனில் நடை பயிலும் கவனம்.....

அகமடக்கும் வித்தையது கற்றிட்டால்
தெளிந்த ஞானமது பெற்றிட்டால்
மடந்தையவள் மன முதிர்ச்சி கூடித்தான்
அறிவாய் உயர்ந்தநல் அரிவையானாள்...

தன்னிலோர் பாதியைய்த் தேடிக் கைப்பிடித்துத்
தானங்கள் தர்மங்கள் கடைப்பிடித்து 
பிற்காலம் உயரநற் சந்ததி தந்து
பேர் கொண்டிளம் பெண்ணாக வாழ்த்து....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

Sunday 21 August 2016

சங்கத்தில் காணாத கவிதை 10.08.16 #13

சங்கத்தில் காணாத கவிதை
#ஆட்டோ_ராஜா_
10.08.16

கானல் நீர் ஆன என் கனவது
கண்ணீரில் கரைந்தோடுது
காணாமல் தேய்ந்தது மனமது
காயங்கள் யார் கண்டது
காணாமல் தேய்ந்தது மனம் அதன்
காயங்கள் யார் கண்டது

உன் கண்ணில் நான் கண்ட சுடரது
என் வாழ்வில் ஒளி வீசுமோ
மென் தென்றல் விளையாடும் பொழுதினில்
தீண்டாதோ என் தேகமோ
நானென்ன.....
நான்தானோ.....
என்னுள்ளே எனைக் கொண்டு தருவாய்
உயிர் மூச்சாய்  உறவாட தினம்தினம்
கானல் நீரான...

மேகங்கள் வான்மீது நிலவதை
மூடட்டும் இவ்வேளையில் 
காயங்கள் ஆறாத மனம் அது
தூங்கட்டும் அவ்வேளையில் 
பெண் நெஞ்சம்......
தான் அஞ்சும்.......
ஏக்கங்கள் தீராத இதயமும்
தூக்கத்தில் விலகாது மோகமும்
கானல் நீரான.....

என் வீணை மீட்டாத விரலிது
இன்றேனும் சுருதி சேர்க்குமோ
என் கூந்தல் சேராத மலரிது
என்றேனும் மணம் வீசுமோ
கண் பட்டு....
புண் பட்டு....
காலங்கள் வீணாகக் கழியுது
கன்னங்கள் கண்ணீரில் நனையுது
கானல் நீரான....

சிந்தித்தே கொள்ளாத உறவிது
சித்தம் கொல் என்றாகுமோ
சந்தத்தில் சேராத கவி இது
சந்தம் சேர் பாட்டாகுமோ
விண்மீனோ........
வீண்தானோ......
மேகங்கள் தானாகக் கலைந்தது
தாளாமல் பயிரது வாடுது.....
கானல் நீரான...

கவியாக்கம்   ரத்னா வெங்கட்

கிறுக்கல்கள் # 4 2nd aug 2016 #12

கனவே கலையாதே  என்
கனவே கலையாதே 
கண்மூடித் தவம் செய்யும் 
பொழுதினிலே இரவில் 
கண்மூடித் தவம் செய்யும் 
பொழுதினிலே இமைகளுக்குள்
கன்னமிட்டு நுழைந்தாயே
காட்டினில் தனித்த முனியோ -நான்
காட்டினில் தவித்த முனியோ
பூட்டிய மனதினில் ஒளியோ -நீ
கசிந்து உள்ளேறிய ஒளியோ
காற்றினில் கலந்திட்ட மணமோ -நீ
காற்றினில் கலந்திட்ட மணமோ என்னுள் 
காற்றாய் உயிர்த்திட்ட கருவோ
கன்னமிட்டு நுழைந்து
கருவாய் மலர்ந்து
ஒளியேற்றி என்னில் 
ஓயாத கனலேற்றி நின்றாயே
கனவே..... நான்
கண்திறந்தால் கலையாதே என்
கனவே கலையாதே.

கிறுக்கல்கள் #3 29th July 2016 #11

காற்றில் ஏறி விண்ணைச் சாடு
மண்ணைத் துளைத்து பாதாளம் புகு
மேலும் கீழும் புரட்டிப் போடு
இடது வலது எதையும் விடாதே.....
ஓடு.....ஓடு முதலாமிடம் தொடு
விடு.... விடு விட்டுக்கொடு
பந்தம் அழைத்தால் பந்தயம் விடு.....
கோட்டினிலிருந்து விலகாதே ....
அச்சிலிருந்து நழுவாதே.....
நிமிர்ந்து நட நேர்ப்படப் பார்
அச்சமும் நாணமும் மறந்து விடாதே
அநியாயம் கண்டால் எரிக்கக் கற்றுக்கொள் 
அன்பென்று வந்தால் தண்ணிலவாய்க் குளிர்
அடுக்களையில் பசியமர்த்தும் செந்தழலாயிரு
அகத்தை ஒளிர்விக்கும் குத்துவிளக்காயும் இரு
அஞ்ஞானம் ....... பட்டியல் தொடருமுன்
அம்மாவென அழைத்தது மகளின் குரல்
குறும்பும் குதூகலமும் கூத்தாடிய முகத்தில்
குழப்பம் வந்து குடியேற......
தாளவில்லை தாயுள்ளம்....
அருகழைத்து அழகு முகத்தில் 
முத்தமொன்று வைத்துரைத்தேன்
என் மகளே
வாழ்க்கையை வாழ்ந்து பாரென்று....

கிறுக்கல்கள் # 2 17th July 2016 #10

இனிய தோழியே என்கவிதைக்கான 
உன் பதில்களெல்லாம் 
உட்பொருளாய்க் கூறுவது
நல்முத்தாய் அறிவுரைகள்
நன்றி என் தோழியே
கவிதைகள் கவிதைகளே 
என் வாழ்க்கையின்
கருப்பொருளல்ல
கடந்து வந்த பாதையில் 
சுமந்து வந்த கற்களை
இறக்கி வைக்கவே கவிதைகள் 
கூடுதலாகத் தூக்கிச் சுமக்க அல்ல
சுட்டுவிட்ட  சட்டியைத் தூக்கில்
இட்டுவிட்ட மனமே இங்கு 
மிஞ்சிவிட்ட வடுவைச் சற்று
நிரடிப்பார்க்கும் சுகமான
சோகமே கவிதை
கைகொடுத்துக் கைப்பிடித்த
துணையொன்றுண்டு அருகினிலே
புண்பட்ட மனது பண்பட்டபின்னே
சலனமில்லை வாழ்க்கையிலே 
துளிச் சலனமொன்றில்லை வாழ்க்கையிலே
கவிதைகள் கவிதைகளே என்
வாழ்க்கையின் கருப்பொருளல்ல....,

கிறுக்கல்கள் # 1 16th july 2016 #9

பால்கனியில் பூத்திருக்கும்
பலவண்ண மலர்களிலே
பறந்தமர்ந்து பறந்தமர்ந்து
தேன் சுமந்த 
தேன்சிட்டை
பைத்தியப் பராக்கு 
பார்த்துக்கொண்டிருந்தேன்
தேன்சுமக்கும் அதன் நெஞ்சில் 
என்னென்ன நினைவுகள் 
தேங்கிக்கிடக்குமென்று......
பின் தெளிந்த மனமோ 
மிக்க பாவனை 
கொண்டென்னை 
விளித்துப் .... பைத்தியமே
விட்டு விடுதலையான குருவிக்கு
கட்டும் நினைவுகள் கிடையாது 
அதனைக் கட்டும் நினைவுகள் கிடையாது 
சுமக்க நேர்ந்திருந்தால் 
நினைவுகள் சுமக்க நேர்ந்திருந்தால் 
பின் பறக்க முடியாதென்று......
எனக்கென்ன மேதாவி 
நீதானென்று
மனதிடம் சொல்லிவிட்டு
பாரமான அதனை நகர்த்திக்கொண்டு
உள் நகர்ந்தேன்......

புகைப்படக் கவிதைகள் # 48 வார்த்தைகளுக்குள் 20.08.16 #8

கபட நாடக வேடங்கள்
கட்டிய காசு மூட்டையுடன்
சன்னதியில் உருகி மருக
பிரகாரத்தின் தூணிடையே
பட்டுக் குட்டிக்கு 
கண்ணாமூச்சி ரேரே
காட்டிக் கொண்டிருந்தது கடவுள்
பாவப் பட்டயங்கள் 
புதைந்த பணமூட்டைகள்
தகுதியில்லா ஆசைகளின் 
தன் முயற்சியில்லா வேண்டுதல்கள்
படோடாபங்கள் ஆட்சி செய்யும்
பகட்டான ஆலயங்கள்
பாவத்தில் ஒளிந்து கொண்டு
கண்டு கொள்ளாதேயெனும் 
பிரார்த்தனைகள் 
மூச்சடைத்து கருவறை வெறுத்து
புறங்காண ஓடியதைத் தடுத்தது
பனித்துளியாய் படைப்பதனில்
முகிழ்த்ததொரு செண்டு.  


#48 வார்த்தைகளுக்குள் 


தள்ளாடும் வயதினிலே 
தாள்தான் கழண்டு விழ
தாள் பொதியும் சுமந்தாயே 
தாயே உன் கதையென்ன..... 
குலக்கொழுந்து கருங்காலிக்
குன்றெனவே ஆனானோ
உளம் பூக்காத் தரிசெனவே
உறங்கித் திரிந்தானோ....
ஊர் காணாக் கதையுமில்லை
உள் நாக்குவரை கசப்பான நிலை....
கயிறாய் வந்த கல்லும்
வயிற்றில் வளர்ந்த புல்லும்
கண்டதே மதுவில் இன்பம்
தந்ததே உடலும் என்பும்
தனியில்லை என் துணையாய்
இணை மூட்டை சுமப்பது
மருமகளும் பெற்ற மகளுமே....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

புகைப்படக் கவிதைகள் 3rd Aug 2016 #7

மின்னிப் பாப்பாவின் கண்ணில்
மின்மினிகள் பார்த்தவர் கண்டார்
மின்னல் ஒன்றின் கூட வெள்ளாட்டு
மின்னல் ஒன்று கூட்டாள். 

சுட்டும் விழிச்சுடரோடு ரெண்டும்
சுற்றிப் பறந்தன ஊரில்
காலம் பொழுதுகளின்றி ரெண்டும்
கூடிக் கிடந்தன வீட்டில்.  

மேரியின் பின்னேயலைந்த ஆட்டின் 
மேற்கத்திய பாட்டினைக் கேட்டோர்
மின்னியின் நிழலாய்த் தொடர்ந்த 
மின்னலைக் கண்டிங்கு வியந்தார். 

மண்ணைத் தொடும் முன்னே மண்ணில்
தாயைப் புதைத்தது ஒன்று
மாரியாத்தாளின் கொடை தீர்க்க 
தாயினைப் பிரிந்தது மற்றொன்று. 

மேகங்கருத்த முன்னொரு நாளில் 
மேகத்துகளெனத் திரிந்த மின்னி
காணாத தாயன்பை எண்ணிக் 
கடவுளை நொந்து குமைந்தாள். 

மழைதனில் நனைந்த கண்கள் 
பொழிந்ததை எவரும் காணார்
பட்டுக்கன்னத்தில் உருண்ட கண்ணீர்
பார்த்துப் படைத்தவன் பதைபதைத்தான். 

வெட்டிய வெளிச்சத்தில் அங்கே
வெள்ளாட்டுக் குட்டியொன்றைக் கண்டு
ஒட்டிய ஆடைதடுக்கத் தாவி
ஓடியதை அணைத்துக் கொண்டாள். 

தனித்துத் திரிந்த உயிர்கள் இன்று
தானாய் இணைந்தன வழியில் 
பாசப் பசியினைத் தீர்த்த அவனோ
பார்க்க இயலாப் பெருவெளியில்.

புகைப்படக் கவிதைகள் # 48 வார்த்தைகளில் 13.08. 16 #6

கிள்ளை வயதில் 
கிளை பரப்பும் நேசங்கள்
சில்லறைச் சிரிப்புகள்
சிந்திய வழித்தடங்கள்
புத்தகச் சுமைகளொன்றே
புத்தியில் சுமைகளில்லை
கண்ணாமூச்சி விளையாட
கதிரவனும் தயங்கவில்லை 
தோளில் தாங்கிட
தோழமைக்குத் தடையே இல்லை
வீடு செல்ல மனமில்லை
வானமே எங்கள் எல்லை.....

கன்னிப் பருவத்தில் 
கனவுக் குழப்பத்தில்
தன்னெஞ்சே சுமைதானோ
தண்ணிலவும் தகித்திடுதோ
நூலாடையும் கனக்க
நூலிடையும் சோர்ந்ததுவோ
காணாத பிம்பத்தை 
வான் நிலவில் தேடியதோ
காதலே தீராத தொல்லையோ?

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

புகைப்படக் கவிதைகள் 21.08.16 #5

21.08.16

முத்தமிழ் கொண்டதோ ழகரம்
மொழிகள்  பல காணா உயரம்
இதழ் அது தந்ததோ முத்தம்
பல மொழிகளைப் போல் அதன் வடிவம்.....
அன்னையிடத்தில் தொடங்கி
அன்பின் உருவம் தாங்கி
கன்னியவள் கடைக்கண்ணால் ஏகி
கனியிதழ் கடைத்தேற்றுமோ என்றேங்கி...
முறைகள் செய்யும் வரை தாங்கிப்பின்
கரைகள் கடந்த அலையாகி
ஆழ்கடல் முழுகித் தேடி
கிடைத்த புதையல் மகளென்றாகி.....
எந்தன் வானமவள் எனக்களித்த 
முதல் முத்தம்
ழகரத்தின் அழகிற்கு ஒப்பும்.....

போட்டி#2

தனியே கண்டால் காட்டில்
படையே நடுங்கும் கரியன்
பாகன் கட்டிய கயிற்றில்
பாங்காய் அடங்கிய கொம்பன்....
தும்பிக்கையின் பலம் தன்னை 
அறிந்தே மனிதன்- வாழும்
குன்றேயனைய வேழம்- அறிவால் 
கொண்டான் அடிமை தானும்.....
கண்டோர் பதைத்துத் திகைக்க
காட்சிப் பிழையும் அல்ல
கனவுகள் கண்ட உறக்கம் 
காண்பது நம்பிக்கையே வேறல்ல.....
கயிற்றினில் அடங்குமோ களிறு
மனித முயற்சியில் முடங்கியதிங்கே
தன்னம்பிக்கையின் முரண்பாடு
தனைக் கண்டபின் முயற்சியே செயல்பாடு.....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

Wednesday 17 August 2016

ஆசைகளின்‬ படியில் நாள் 16.08.16 #4

ஆசைகளின்‬ படியில்
நாள் 
கனவுகள் என்னும் வடத்தினிலே
அனுதினம் எந்தன் மனத்தினிலே
ஆசைகள் எனும் முத்துக்கள்
அழகழகாகக் கோர்த்து வைத்தேன்
காற்றினில் மாறும் மேகங்களாய்க்
கண்ணெதிர் தோன்றி மறையுமுன்னே
கைகளால் பற்றிக் கருத்தினில் பொதித்து
காதலென அதைப் போற்றி வைத்தேன்
இன்னிசையாய் வரும் கீதம் கேட்டால்
இசைக்குயிலாக நான் மாறிட ஆசை
வீணையில் நாதம் விளைந்திட வைக்கும்
விரல்களாகவும் ஆகிட ஆசை
'ததிங்கினத்தோம்' சொல்லக் கேட்டால்
தந்தேன் எனையென ஆடிட ஆசை
நாட்டியத் தாரகை நீதான் என்றே
நாநிலத்தில் பலர் புகழ்ந்திட ஆசை
கற்பதைத் தவிர வேறொரு வேலை
காணாமல் நான் வாழ்ந்திட ஆசை
கற்பிப்பதிலும் எனைப் போல் ஒருவர்
கண்டதுண்டோ எனக் கேட்டிட ஆசை
உயிரைக் காக்கும் மருத்துவராகி
உயர்ந்த செயல்கள் செய்திட ஆசை
கற்றுத் தெளிந்த அறிஞரும் ஆகி
காவியங்கள் பல படைத்திட ஆசை
அன்பைத் தந்து அடைக்கலம் கொண்டு
அன்பே உருவென மாறிட ஆசை
உள்ளும் புறமும் மாற்றம் இல்லா
உயிராய் என்றும் நிலைத்திட ஆசை
எத்தனை பிறவி எடுத்தால் எந்தன்
இத்தனை ஆசைகள் தீரும் இறைவா
கணக்கெடுத்தாலோ கைதான் ஓயும்
மனம் ஓயாமல் நீ காத்திட வேணும்.

தலைப்பு என் மகள் எனக்குத் தாயானாள் 17.08.16 #3

தலைப்பு என் மகள் எனக்குத் தாயானாள்

கருவறை புகுந்த நாள் முதலாக
குட்டிப் புயலொன்று எம் வானில்
மையம் கொண்டது எங்களை
மயக்கியே வைத்தது
தாய்மை என்ற ஓர் உணர்வு நல்ல
தந்தைக்கும் அது பொதுவே
தாய்மை எனும் திருவிழாவில்
தொலைந்து போனோமே விருப்புடனே.....

அயல் தேசம் அதனில் தனித்தஇரு உயிர்கள்
தமக்கென ஒரு கூடு கட்டிய பறவைகள்
என் பாரம் நீ தாங்கவும்
உன் மனபாரம் நான் தாங்கவும்
என கை கோர்த்து நடந்த தடங்கள்
சின்னஞ்சிறு பாதங்கள் உதைத்த கணங்கள்
கண்ணனோ கண்ணம்மாவோ யூகித்த பொழுதுகள் யாவும் கொண்டாட்டங்களே....

ஏங்க வைத்து பலநாளாய்த் தூக்கம்
நீங்க வைத்து ஒரு திருநாளில்
வந்ததொரு தேவதை சிறகு கொண்டு
வண்ணத்தில் ரோஜா மலர்ச் செண்டு
விழிச்சிப்பி திறந்தொரு பார்வை தந்து
சிமிழென இதழதனைத் திறந்தழுது
தளிர்க் கரமொன்று தந்தை விரல் பிடிக்க
எங்கள் உலகமவள் ஆனதந்த நொடியினிலே..

தவழ்ந்ததும் தாவியதும் உறக்கத்தில்
சிரித்ததும் விழுந்ததும் எழுந்ததும்
முதல் அடி நடந்ததும் கவிதைக்கான
கருப்பொருளானது காட்சிகள் படமாய்
கண்ணெதிர் விரியுது காலங்கள்
காற்றென விரைந்து நகர்ந்தது அறிவு
கனிந்து மின்னும் கன்னி உருவானவள்
உயிர்த் தோழியும் ஆனதந்தப் பருவத்திலே...

ஓடிக் களைப்பதுவும் பொருள்
தேடி இளைப்பாறுதலும் ஆனதே
வாழ்க்கையது கடமை முடித்த பின்னே
வரும் மகிழ்ச்சியோடு ஓர் தனிமை
தன் துணையோடு தான் வந்து
அருகிருந்து அரவணைத்து அருமருந்தாய்
தோள் கொடுத்து அன்பாலே ஆதரித்து

தாயெனவே ஆனாளே மகளும் இன்று........

விழி தாண்டும்போது.... .....நினைக்கையிலே 12-8-16 #2

#விழி தாண்டும்போது....
.....#நினைக்கையிலே

விழி தாண்டும்போது .....
உன் விழி தாண்டும்போது
புதுப்பித்துக் கொள்ளும் என்
இதயம் தன்னை அறியாமல்
ஒவ்வொரு முறையும் .....

இமைக் குடை நீ விரிக்க
இளம் சாரல் எனை நனைக்க
உச்சியிலே சூரியனும்
உறை பனியாய் உருவெடுக்க
தேனாறு உறையும் ......

படபடக்கும் பட்டாம்பூச்சி
பளபளக்கும் உன்கண்ணில்
மது அருந்தா வண்டிரெண்டு
மயங்கி விழும் என் கண்ணில்
தன்னாலே......

புருவங்கள் வில்லாக நீ
யோசிக்கும் பொழுதினிலே அதில்
பூட்டிய அம்பாக என் இதயம்
தொக்கியதும் சிக்கியதும்
யோசிக்காமலே......

புன்னகைத்தால் முத்தென்று
போற்றுவோர் பார்த்ததில்லை
உன் விழியை ... பார்த்திருந்தால்
இணையில்லா வைரங்கள் என்றிருப்பார்
கேட்காமலே.....

மணிகள் குலுங்கியதோ சிரிப்பினிலே
சிரிப்பழகா கன்னச் சிவப்பழகா
சிரிக்கையில் சுருங்கும் மூக்கழகா
நீர்த்துளிகள் பூத்த விழி அழகா
தெரியலையே.....

கோலிக்குண்டெனவே உருளும்
கோபம் வந்தால் உன் விழியும்
ஓராயிரம் கதை சொல்லும்
அஞ்சுவதா கெஞ்சுவதா கொஞ்சுவதா
புரியலையே.....

விழி தாண்டினால் என்ன கோடி முறை
திரும்ப விழுவதில் தடை இல்லாத வரை
பிறிதொரு துணை தேவையில்லை
உன் விழித்துணை ஒன்றை மட்டும்

நினைக்கையிலே.....

இப்ப என்ன பண்ணுவ......இப்ப என்ன பண்ணுவ......9-8-16 #1

இப்ப என்ன பண்ணுவ......
இப்ப என்ன பண்ணுவ......

நெல் மணியிட வேண்டியவள்
நல்லூரில் தங்கியதால்
கலங்கிப் போன உறவுகளின்
நலிந்தபோன மனத்திடையே
நல்முத்தாய் வந்ததொன்று அதன்
பொக்கை வாய்ச்சிரிப்பொன்று சொன்னது
இப்ப என்ன பண்ணுவ......
இப்ப என்ன பண்ணுவ......

கரித்த வாய்களிடை கட்டிக்
கரும்பெனவே வளர்ந்ததுவோ
எரித்த பார்வைகள் தாண்டி
சுடரெனவே ஒளிர்ந்ததுவோ
சூடான வார்த்தைகளைத் தள்ளியே
மீளாத குறும்பொன்று மின்னலிட முகம்
நீங்காத புன்னகையொன்று சொன்னது
இப்ப என்ன பண்ணுவ......
இப்ப என்ன பண்ணுவ......

சந்ததிகள் வளர வேண்டி
தம்பியொன்று பிறந்த பின்னும்
தானொன்றும் குறைவில்லை
தனக்கு ஒரு நிகரில்லை
என்றேதான் எண்ணம் கொண்டு
எழில் ஓவியமாய் நின்ற ஒன்று
சொல்லாமல் சொல்லியது
இப்ப என்ன பண்ணுவ......
இப்ப என்ன பண்ணுவ.....

எள்ளிச் சிரித்தவர்கள்
இடக்கு மிகச்செய்தவர்கள்
எண்ணாதே பள்ளி தனையென்று
இடுக்கிப்பிடி போட்டவர்கள்
கலங்கவில்லை கிள்ளையது
கல்லெனவே நின்று கல்வியென்ற
கண்திறந்து கவியுரைத்துச் சொன்னது
இப்ப என்ன பண்ணுவ......
இப்ப என்ன பண்ணுவ.....

கற்றலின் மேல் கொண்ட காதல்
வற்றுவதுண்டோ அரைகுறையாய்?
ஒயாத சிற்றலையொன்று கல்லூரிக்
கரை சேர்ந்தது திடங்கொண்ட
உள்ளமொன்று வானமே இங்கு
எல்லையென்று நின்றது தீராத
தாகங்கொண்ட தேடலொன்று சொன்னது
இப்ப என்ன பண்ணுவ......
இப்ப என்ன பண்ணுவ.....

திமிர்ந்த ஞானச் செருக்கைக் கண்டு
திமிரெனத் திரிந்த மிருகமொன்று
வன்மை கொண்டு வன்புணர்வு செய்தது
தடைகள் பலதாண்டி தானாய் உயர்ந்ததை
தடிதான் கொண்டு தரையில் தேய்த்தது
உயிர் மட்டும் தொக்கி நிற்க
உள்ளமோ நீதி கேட்க
போராடிக்களைக்குமுன்
சுட்டிய விரலொன்று சொன்னது
இப்ப என்ன பண்ணுவ......

இப்ப என்ன பண்ணு.....