Sunday 21 August 2016

புகைப்படக் கவிதைகள் 3rd Aug 2016 #7

மின்னிப் பாப்பாவின் கண்ணில்
மின்மினிகள் பார்த்தவர் கண்டார்
மின்னல் ஒன்றின் கூட வெள்ளாட்டு
மின்னல் ஒன்று கூட்டாள். 

சுட்டும் விழிச்சுடரோடு ரெண்டும்
சுற்றிப் பறந்தன ஊரில்
காலம் பொழுதுகளின்றி ரெண்டும்
கூடிக் கிடந்தன வீட்டில்.  

மேரியின் பின்னேயலைந்த ஆட்டின் 
மேற்கத்திய பாட்டினைக் கேட்டோர்
மின்னியின் நிழலாய்த் தொடர்ந்த 
மின்னலைக் கண்டிங்கு வியந்தார். 

மண்ணைத் தொடும் முன்னே மண்ணில்
தாயைப் புதைத்தது ஒன்று
மாரியாத்தாளின் கொடை தீர்க்க 
தாயினைப் பிரிந்தது மற்றொன்று. 

மேகங்கருத்த முன்னொரு நாளில் 
மேகத்துகளெனத் திரிந்த மின்னி
காணாத தாயன்பை எண்ணிக் 
கடவுளை நொந்து குமைந்தாள். 

மழைதனில் நனைந்த கண்கள் 
பொழிந்ததை எவரும் காணார்
பட்டுக்கன்னத்தில் உருண்ட கண்ணீர்
பார்த்துப் படைத்தவன் பதைபதைத்தான். 

வெட்டிய வெளிச்சத்தில் அங்கே
வெள்ளாட்டுக் குட்டியொன்றைக் கண்டு
ஒட்டிய ஆடைதடுக்கத் தாவி
ஓடியதை அணைத்துக் கொண்டாள். 

தனித்துத் திரிந்த உயிர்கள் இன்று
தானாய் இணைந்தன வழியில் 
பாசப் பசியினைத் தீர்த்த அவனோ
பார்க்க இயலாப் பெருவெளியில்.

No comments:

Post a Comment