Wednesday 17 August 2016

தலைப்பு என் மகள் எனக்குத் தாயானாள் 17.08.16 #3

தலைப்பு என் மகள் எனக்குத் தாயானாள்

கருவறை புகுந்த நாள் முதலாக
குட்டிப் புயலொன்று எம் வானில்
மையம் கொண்டது எங்களை
மயக்கியே வைத்தது
தாய்மை என்ற ஓர் உணர்வு நல்ல
தந்தைக்கும் அது பொதுவே
தாய்மை எனும் திருவிழாவில்
தொலைந்து போனோமே விருப்புடனே.....

அயல் தேசம் அதனில் தனித்தஇரு உயிர்கள்
தமக்கென ஒரு கூடு கட்டிய பறவைகள்
என் பாரம் நீ தாங்கவும்
உன் மனபாரம் நான் தாங்கவும்
என கை கோர்த்து நடந்த தடங்கள்
சின்னஞ்சிறு பாதங்கள் உதைத்த கணங்கள்
கண்ணனோ கண்ணம்மாவோ யூகித்த பொழுதுகள் யாவும் கொண்டாட்டங்களே....

ஏங்க வைத்து பலநாளாய்த் தூக்கம்
நீங்க வைத்து ஒரு திருநாளில்
வந்ததொரு தேவதை சிறகு கொண்டு
வண்ணத்தில் ரோஜா மலர்ச் செண்டு
விழிச்சிப்பி திறந்தொரு பார்வை தந்து
சிமிழென இதழதனைத் திறந்தழுது
தளிர்க் கரமொன்று தந்தை விரல் பிடிக்க
எங்கள் உலகமவள் ஆனதந்த நொடியினிலே..

தவழ்ந்ததும் தாவியதும் உறக்கத்தில்
சிரித்ததும் விழுந்ததும் எழுந்ததும்
முதல் அடி நடந்ததும் கவிதைக்கான
கருப்பொருளானது காட்சிகள் படமாய்
கண்ணெதிர் விரியுது காலங்கள்
காற்றென விரைந்து நகர்ந்தது அறிவு
கனிந்து மின்னும் கன்னி உருவானவள்
உயிர்த் தோழியும் ஆனதந்தப் பருவத்திலே...

ஓடிக் களைப்பதுவும் பொருள்
தேடி இளைப்பாறுதலும் ஆனதே
வாழ்க்கையது கடமை முடித்த பின்னே
வரும் மகிழ்ச்சியோடு ஓர் தனிமை
தன் துணையோடு தான் வந்து
அருகிருந்து அரவணைத்து அருமருந்தாய்
தோள் கொடுத்து அன்பாலே ஆதரித்து

தாயெனவே ஆனாளே மகளும் இன்று........

No comments:

Post a Comment