Wednesday 17 August 2016

ஆசைகளின்‬ படியில் நாள் 16.08.16 #4

ஆசைகளின்‬ படியில்
நாள் 
கனவுகள் என்னும் வடத்தினிலே
அனுதினம் எந்தன் மனத்தினிலே
ஆசைகள் எனும் முத்துக்கள்
அழகழகாகக் கோர்த்து வைத்தேன்
காற்றினில் மாறும் மேகங்களாய்க்
கண்ணெதிர் தோன்றி மறையுமுன்னே
கைகளால் பற்றிக் கருத்தினில் பொதித்து
காதலென அதைப் போற்றி வைத்தேன்
இன்னிசையாய் வரும் கீதம் கேட்டால்
இசைக்குயிலாக நான் மாறிட ஆசை
வீணையில் நாதம் விளைந்திட வைக்கும்
விரல்களாகவும் ஆகிட ஆசை
'ததிங்கினத்தோம்' சொல்லக் கேட்டால்
தந்தேன் எனையென ஆடிட ஆசை
நாட்டியத் தாரகை நீதான் என்றே
நாநிலத்தில் பலர் புகழ்ந்திட ஆசை
கற்பதைத் தவிர வேறொரு வேலை
காணாமல் நான் வாழ்ந்திட ஆசை
கற்பிப்பதிலும் எனைப் போல் ஒருவர்
கண்டதுண்டோ எனக் கேட்டிட ஆசை
உயிரைக் காக்கும் மருத்துவராகி
உயர்ந்த செயல்கள் செய்திட ஆசை
கற்றுத் தெளிந்த அறிஞரும் ஆகி
காவியங்கள் பல படைத்திட ஆசை
அன்பைத் தந்து அடைக்கலம் கொண்டு
அன்பே உருவென மாறிட ஆசை
உள்ளும் புறமும் மாற்றம் இல்லா
உயிராய் என்றும் நிலைத்திட ஆசை
எத்தனை பிறவி எடுத்தால் எந்தன்
இத்தனை ஆசைகள் தீரும் இறைவா
கணக்கெடுத்தாலோ கைதான் ஓயும்
மனம் ஓயாமல் நீ காத்திட வேணும்.

No comments:

Post a Comment