Wednesday 17 August 2016

இப்ப என்ன பண்ணுவ......இப்ப என்ன பண்ணுவ......9-8-16 #1

இப்ப என்ன பண்ணுவ......
இப்ப என்ன பண்ணுவ......

நெல் மணியிட வேண்டியவள்
நல்லூரில் தங்கியதால்
கலங்கிப் போன உறவுகளின்
நலிந்தபோன மனத்திடையே
நல்முத்தாய் வந்ததொன்று அதன்
பொக்கை வாய்ச்சிரிப்பொன்று சொன்னது
இப்ப என்ன பண்ணுவ......
இப்ப என்ன பண்ணுவ......

கரித்த வாய்களிடை கட்டிக்
கரும்பெனவே வளர்ந்ததுவோ
எரித்த பார்வைகள் தாண்டி
சுடரெனவே ஒளிர்ந்ததுவோ
சூடான வார்த்தைகளைத் தள்ளியே
மீளாத குறும்பொன்று மின்னலிட முகம்
நீங்காத புன்னகையொன்று சொன்னது
இப்ப என்ன பண்ணுவ......
இப்ப என்ன பண்ணுவ......

சந்ததிகள் வளர வேண்டி
தம்பியொன்று பிறந்த பின்னும்
தானொன்றும் குறைவில்லை
தனக்கு ஒரு நிகரில்லை
என்றேதான் எண்ணம் கொண்டு
எழில் ஓவியமாய் நின்ற ஒன்று
சொல்லாமல் சொல்லியது
இப்ப என்ன பண்ணுவ......
இப்ப என்ன பண்ணுவ.....

எள்ளிச் சிரித்தவர்கள்
இடக்கு மிகச்செய்தவர்கள்
எண்ணாதே பள்ளி தனையென்று
இடுக்கிப்பிடி போட்டவர்கள்
கலங்கவில்லை கிள்ளையது
கல்லெனவே நின்று கல்வியென்ற
கண்திறந்து கவியுரைத்துச் சொன்னது
இப்ப என்ன பண்ணுவ......
இப்ப என்ன பண்ணுவ.....

கற்றலின் மேல் கொண்ட காதல்
வற்றுவதுண்டோ அரைகுறையாய்?
ஒயாத சிற்றலையொன்று கல்லூரிக்
கரை சேர்ந்தது திடங்கொண்ட
உள்ளமொன்று வானமே இங்கு
எல்லையென்று நின்றது தீராத
தாகங்கொண்ட தேடலொன்று சொன்னது
இப்ப என்ன பண்ணுவ......
இப்ப என்ன பண்ணுவ.....

திமிர்ந்த ஞானச் செருக்கைக் கண்டு
திமிரெனத் திரிந்த மிருகமொன்று
வன்மை கொண்டு வன்புணர்வு செய்தது
தடைகள் பலதாண்டி தானாய் உயர்ந்ததை
தடிதான் கொண்டு தரையில் தேய்த்தது
உயிர் மட்டும் தொக்கி நிற்க
உள்ளமோ நீதி கேட்க
போராடிக்களைக்குமுன்
சுட்டிய விரலொன்று சொன்னது
இப்ப என்ன பண்ணுவ......

இப்ப என்ன பண்ணு.....

No comments:

Post a Comment