Sunday 2 October 2016

#சம்மதம் சொல்வாயா # உன் சாகசப் பார்வைகளாலே 30.09.16 #53

#சம்மதம் சொல்வாயா
# உன் சாகசப் பார்வைகளாலே
30.09.16

சம்மதம் சொல்வாயா நீ
சங்கேத பாஷையிலே
சாய்த்திட்டுச் செல்வாயா உன்
சாங்கனைத்த விழியதனால் 

சந்திரன் தரையிலுதித்த
சாயலோ உன் முகத்தில்
சாமரமும் வீசிடுமே கருஞ்
சாந்தலையாய்க் கூந்தலது 

சம்பங்கிப் பூச்சூடி பட்டுச்
சரிகையது பளபளக்க எழில்
சாம்ராஜ்யத்தின் ராணியென
சாத்தவியாய் (நீ)அமர்ந்திருக்க 

சரற்கால மேகங்கள்
சரசமிட்டே பொழிதல் போல்
சரக்கென்று இதயம் மாறச்
சாதிமதம் பார்க்கவில்லை

சாத்திரங்கள் கூறாத 
சாத்தியமற்ற காதலில்லை
சதைத் திமிரில் வந்திட்ட
சன்னதமும் இது இல்லை 

சங்கம் வளர்த்திட்ட தமிழ்ச்
சந்தம் கண்ட பாட்டிதுவே
சப்தஸ்வரம் தந்ததனைச்
சங்கீதமாய் மாற்றிவிடு....

சர்வமும் நீயன்றோ நாம்
சதிபதியாய் வாழ்ந்திடுவோம் 
சகடயோகம் பார்க்காதே
சரட்டுத்தாலி அணிந்திடவே....

சரக்கொன்றைப் பூவினைப் போல்
சரஞ்சரமாய்க் கவி படைத்தேன்
சஞ்சலங்கள் தீர்த்துவிடு உன்
சாகசப் பார்வைகளாலே ....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment