Sunday 2 October 2016

#திருவிழா 25.09.16 #58

#திருவிழா
25.09.16

ஊர்கூடித் தேர்களிலே
பூவாரிச் சொரிந்திடுவார்
பூமாரி கருமாரி 
எங்க ஊரு மகமாயி
எங்க முத்துமாரி
தங்க முத்துமாரி 

புதுகை நகரினிலே
அன்னையவள் வீற்றிருப்பாள்
பாதம் பணிந்திட்டால்
அருள் மாரிப் பொழிந்திருப்பாள் 

ஒன்றல்ல பலநூறு 
தேரதுவும் பவனி வரும் 
தகுதிக்கேற்றாற் போல்
அலங்காரம் ஒளிர்ந்திருக்கும் 

பொய்க்கால் குதிரையுண்டு
புலிவேஷம் தானுமுண்டு
அப்பாவின் கைபிடித்துப்
பார்த்து வந்த நினைவுமுண்டு 

ஒயிலாட்டம் கரகாட்டம் 
மயிலாட்டம்  பரவசமாய்
நோக்கிட இளவட்டம் தானாய்த்
தாளம் இட்டதுண்டு  

தம்பியவன் ஆசைக்கென
மரத்தேரும் உருவாக்கி
சிறுதேரின் அலங்காரம்
சிறப்பாய்ச் செய்திடவே
போட்டிகள் இட்டோமே
கூடியே திரிந்தோமே 

அப்பாவும் கண்ணுருட்ட
அம்மாவோ கைகொடுக்க
அக்கம் பக்கத்தவர்
அள்ளியே பூ நிறைக்க
தெரு கூடித் தேரிழுத்தே
ஊர்கோலமாய்ச் சென்று
பூவிட்டு வந்த கதை
கண்ணெதிரில் தோன்றுதே

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment