Sunday 2 October 2016

#சிறு துளி நீர் தீண்டிடா நிலவிற்குள் #47

#சிறு துளி நீர் தீண்டிடா நிலவிற்குள்

சிறு சிறு துளியாய் என் அன்பினைச்
சேமித்து வைக்கவே உன் இதயமதை
வேண்டினேன் ஏந்திழையே பதிலாய்ச்
சிந்திட வைத்தாயே கண்ணீர்த் துளிகள்

துளித் துளியாய்க் காதல் அதை
உளி கொண்டே வடித்தேன் அன்பே
சிற்பமதின் கண் திறந்து நோக்கும் நேரம்
முகம் மறைத்தாயே சொற் திரையால் 

திரை கொண்டு  வான் வெளியை
மறைத்திட நீ நினைத்தாலும்
தவழ்கின்ற மேகமெனத் திரைதாண்டி
வந்திடுவேன் உன் இதழ்த் துளி தீண்ட

துளி  நீர் தீண்டிடா நிலவிற்குள் 
உயிர் தேடிச் சென்ற மனிதன் போல்
விழி  தாண்டி உன் இதயம் புகுந்திடவே
இறங்கிட்டேன் விடா முயற்சியதில்

அதிசயமே எந்தன் அமரகமும் நீயே   
அந்தம் பாடி விடு உன் வாதத்திற்கு 
அன்பின் அணை திறந்து
அகமகிழ்ந்து அரவணைத்து விடு

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment