Sunday 2 October 2016

#ஞாபகம் வருதே 23.09.16 #46

#ஞாபகம் வருதே
23.09.16

குழப்பங்கள் கவலைகள் ஏதுமின்றிக் 
குழவியாய் இருந்த காலமொன்று
கண்மூடி அசை போட்டேன் நினைவதனில்
கண்ணோரம் நீர்கசிய நானுமிங்கே

தண்டையும் கொலுசதுவும் காலில் கொஞ்சத்
தங்கமெனத் தாயவளும் மடியிலிட்டுக் கொஞ்ச 
தந்தையவர் தோளினிலே ஊஞ்சலாடித்
தாய்மாமன் மடியமர்த்திப் பொன்தோடு மாட்ட

பாட்டனவர் பெருமையுடன் பார்த்திருக்க
பாட்டி வம்சம் வளர்ந்ததென்று பாட்டிசைக்க
அத்தையவள் ஆசையுடன் காப்பிட்டு
அழகியென்று கன்னத்தில் கருஞ்சாந்து வைக்க 

அமுதூட்டித் தாலாட்டிக் குளிப்பாட்ட
அடுத்தது தானென்று அன்போடு
அனைவருமே போட்டியிட -வாடாத
நினைவுகள் நீர்க் குமிழியென
நெஞ்சமெங்கும் மோதித் திரிந்திட

அன்பென்ற மொழி தவிர வேறில்லை
அரவணைத்த பலரும் இன்றில்லை
கசிந்தநீர் கன்னத்தில் இறங்கும் முன்னே
கற்கண்டாய்க் குரலொன்று செவியில் மோத 

பாட்டியென்று அழைத்திட்டுப்
பரவசமாக்கப் பேரனுண்டு பேத்தியுண்டு 
வாழ்க்கையது சுழலும் சக்கரமிங்கு....


கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment