Sunday 2 October 2016

#தூண்டிலில் சிக்காத மீன்கள் 22.09.16 #48

#தூண்டிலில் சிக்காத மீன்கள்
22.09.16

தெளிந்த புனலில் துள்ளும் மீனும்
குவித்து கவனம் இரையதில் வைத்து
விழிப்பு  உணர்வு கொண்டே தேட
சிக்கு வதில்லையே தூண்டிலதில்....

பதின்ம வயதில் பக்குவக் குறைவில்
பருவத்தின் பிடியில் வேண்டாச் செயல்கள்
பல பரிமாணங்கள் எடுத்தே வந்து
கொக்கிகளிட்டுத் தளைகளில் மாட்டும்

தன்னியல்பு தொலைத்திட உந்திடும்
கருவிகள் கண்ணையும் கருத்தையும்
ஒருங்கே மயக்கிடும் புகையும்
போதையும் குடி குலைத்திடும் குடியதும்

குறுகிய பார்வையில் குழப்பிடும் காமமும்
கூடாத நட்பும் எதிர்பாலதில் மரியாதை
கொள்ளாமல் முறை தவறும் காதலும் 
நெளியும் புழுக்களாய் 
மீன்குஞ்சதைக் கவர்ந்திடும் 

ஒற்றைச் சக்கரம் உருட்டிடத் தேவை
பிறழாத பார்வை விலகாத கவனம்
வழுவாது நேர்வழி வாழ்வினில் சென்றிடச்
சிக்குவதில்லையே தீமையெனும் தூண்டிலில் இழந்திடவும் வழியில்லையே எதிர்
நீச்சலிடும் சுதந்திரத்தை.....

கவியாக்கம் - ரத்னா வெங்கட்

No comments:

Post a Comment