Sunday 28 January 2018

Morning Thoughts

From 17th November 2017 to 12th December 2017



#அதிகாலைச் சிந்தனைகள்-1

அதிகாலையின் இனிமையில்
அமைதி வேண்டிய நடைப்பயிற்சியில்
அருகிருந்த துணையின் அன்பான பேச்சில்
ஆளரவம் குறைந்த சாலையில்
ஆரவாரமற்ற நாற்சந்தியில்
அநாமத்தாய் ஒற்றைப் பாத அணி! 
அநிச்சையாய்க் கண்ணில் விழ!!!!
அவ்வளவில்......
அனிச்சமாய்ச் சுருங்கியது மனம்....
அணிந்தவர் யாரோ? ஆபத்து ஏதோ? 
அவசரம்தானோ? ஒரு பாத அணி விடுத்தே
ஆவியது துடிக்க விரைந்தோடியதும் ஏனோ? 
அமைதி குலைய கற்பனைகள் விரிய.....
ஆண்டவனே அவரின் துன்பம் களைவாயே🙏

#ரத்னாவெங்கட். 
#அதிகாலைச் சிந்தனைகள்-2

குளிர் காற்றில் உதிர்ந்து வீழ்ந்த
குறையொன்றில் சலசலத்துப்
புலம்பின சருகுகள் வழியெங்கும்! 
இலையுதிர்த்த கிளைகள் தமக்குள்
இனி வரும் வசந்தம் தொலைவெனினும்
இயற்கையின் சுழற்சியென வாளாவிருந்தன! 
வெகு அருகில் வேரின் துணையில்
செறிவான அமைதியில் மரம்
செழித்திடும் நாளுக்காய்த் தவமியற்றியது! 

#ரத்னாவெங்கட். 

 #அதிகாலைச் சிந்தனைகள்-3

அரிதாரம்  முற்றும் கலைத்து
ஆழமாக சிலமணித்துளிகள் உறங்கி
இரவு ஆடை சற்றே நெகிழ
நீள் சோம்பலில் கிடந்த நகர வீதி! 

அமர்ந்தபடியே உறங்கித் தலைசாயத்
தளர்ந்த காவலாளிகள் கடமை காக்க...
வானமே கூரையாய் வாகனமே வசிப்பிடமாய்
அடுத்த நாளின் நிலையறியாத ஓட்டுநர்கள்...

தொடங்கும் நாள் உற்சாகம் பெறச்
சுடச்சுட தேநீரின் சுவை கூட்டப்
புதிய பால் பைகளுடன் பையன்கள் 
தொப்பை குறைய நடக்கும் மனிதர்கள்......

ஒளிரும் மஞ்சள் நிற விளக்கில்
ஒளிக் கட்டுப்பாடற்ற சாலைகள்! 
சுதந்திரம் தந்த வேகத்தில் பறக்கும்
விதேச மோக நாற்சக்கர வாகனங்கள்....

எவரும் பார்க்காத வரை பிடிபடாத வரை
விதிகளை மீறல் தரும் அற்ப குதூகலம்
எந்த உயிரும் பாதிக்காத வகையில் 
வினையாற்றிடுமோ இந்தச் சமூகம்? 

#ரத்னாவெங்கட்


 #அதிகாலைச் சிந்தனைகள்-4

மனத்தின் கசடுகளை
வார்த்தையெனும் நீரிலிட்டு
மொத்தமாய்க் கரைத்து
வாசலெங்கும் தெளித்து வைத்து

சுத்தமாய்க் கூட்டியள்ளிச்
சுற்றம் கெடாது புதைத்து வைத்து
புள்ளி வைத்துக் கோலமிட்டு
புதுப் பூவொன்றை நடுவில் வைத்தேன்! 

காலையின் புதுமையிலே -புது
நாளதன் பிறப்பினிலே -பழம்
பாளையின் புளித்த கள்ளாய்
நேற்றைய நினைவெதற்கு? 

காலத்தின் துடிப்பினிலே
காயங்கள் ஆறிடலாம்? 
இதயம் துடித்து...... நின்றால்
இனியொரு பிறவி வந்திடுமா? 

தேடுதல் மந்திரமாய்த்
தேம்புதல் மாயமாகத்
தேங்கிடக் குட்டையல்ல
தேனருவி நானன்றோ? 

#ரத்னாவெங்கட்

#அதிகாலைச் சிந்தனைகள்-5

சிலுசிலுத்த காற்றோடு
பசிய இலைகள் உறவாட
பழுத்த இலைகளுள் சில
நிறம் மாறியதும் 
உதிர்ந்துபோகும்
நிலை மறந்து
சலசலத்துச் சத்தமிட
முதிர்ந்த அன்பில் 
விளைந்த பரிவில்
புன்னகையுடன் கணக்கிட்டு
மடியேந்திக் காத்திருக்கும் பூமி
ஓய்ந்து விழும் நேரத்தில் தாங்க! 

#ரத்னாவெங்கட். 

#அதிகாலைச் சிந்தனைகள்-6

புலராத பொழுதொன்றில் 
கண்சிமிட்டி கண்சிமிட்டி
உலராத பனித்துளியைக்
கண்களிலே அணைகட்டிச்
சுடராக ஒளிர்ந்ததொரு
கண்கவரும் விண்மீன்! 

சாய்கின்ற நிலவொன்றும்
சத்தியமான கதிரவனும்
நேர்கோட்டில் எதிரெதிரே
நெடுநேரம் நிலைப்பதில்லை! 
ஒரு பாதி இருளதனில்....
மறு பாதி ஒளியதனில்.....
சுழலும் பூமிக்கோ அதன்
சுழிவு நேரத்தில் சேர்வதில்லை! 

#ரத்னாவெங்கட்

சுழிவு- மனக்கவலை/ மறைவு

 #அதிகாலைச் சிந்தனைகள்-7

தவழ்ந்தாடும் அலைகளிலே தாவிவரும்
மீனினங்கள் வலிந்தே வரவழைத்த
மகிழ்வு தரும் புன்னகையாய் அமிழ்ந்து
மீண்டு முகம் காட்டி மறையும்! 

முகம் வருடும் தென்றலிலே முகிழ்த்த
கவிதை மூங்கிலது மூச்சிழுக்கப்
புகுந்து துளைத்தே ராகத்தை ஏற்று
நல்லிசையாய்க் காற்றுடன் கரையும்! 

கலைந்திடும் இருளதில் கண்மூடும்
விழிகள் உறங்காத மனத்தின்
கதவுகளைத் தாழ்ப்பாள் இட்டு மூடக்
கிழக்கில் வெள்ளி முளைக்கும்! 

துயிலாத நகரத்தின் மனசாட்சியாக
வலம் வந்த நிலவொன்று 
பண்பட்டும் புண்பட்டுப் பற்றறுக்கத்
தன்னைப் புதுப்பிக்கத் தேயும்! 

#ரத்னாவெங்கட்.
 #அதிகாலைச் சிந்தனைகள்-8

நூலிழைகளின் பிடியிலும்
நொடிகளின் பின்னத்திலும்
இருப்பும் பிறப்பும் நிகழ்வும்
இறப்பும் சிறப்பும் மகிழ்வும்
உறவும் பிரிவும் துயரும்
உணர்வும் உடலும் உயிரும் 
தடுமாறச் சுழலும் கோளம்! 
தடுமாறாது செல்லும் காலம்! 
வேரூன்றிக் கிளைபரப்பி
வேகத்தடையொன்றாய்
நெடுஞ்சாலைப் பரபரப்பில்
நெடுநோக்கு கலையாது
நொடி நிறை நெடுவீதியின்
நூலகமாய் நின்றதோ மரம்?! 

#ரத்னாவெங்கட்

நொடி- விநாடி/ பள்ளம்
 # அதிகாலைச் சிந்தனைகள்-9

நினைவுகளில் இடறும்
கல்லாய்ச் சில ஆசைகள்! 
விளைவறியாது..சரி
தவறென உணராது 
மந்திரத்தால் மாங்காய்
மடியில் விழுந்தால் 
நமக்கென்று..
போகிற போக்கில் 
சிறு வார்த்தைகள் எறியும்
பொறுப்பற்ற சிறுபிள்ளையாய்
நம்மில் பலர்.....
காய்த்த மரமே 
கல்லடி படுமெனச் சாக்கு! 
காய்த்துப்போன பட்டைகள்
கனிந்த இதயத்தின் வலி
காட்டுவதில்லை....என்றும்! 

#ரத்னாவெங்கட்
 #அதிகாலைச் சிந்தனைகள்-10

மின்விளக்கின் உபயத்தால்
மஞ்சள் பூசி மினுமினுத்த
கருத்த நிறத்தழகி 
கார்முகில் மறைத்த கன்னத்தழகி 
இருண்ட மேலாடை நெகிழாது
புரண்டு வளைந்த நெளிவுகளில்
இதயம் கவர்கின்றாள்! 
ஒப்பனைகள் அற்ற அழகாய்
துயிலெழுப்பும் பறவைகளின் மொழியாய்
துயில் கலையாத இமைகளின் வழியே
உறங்கும் காவலாளிகளின் அசதியாய்
ஊர்க்காவல் தெருக்காவல் தமதென
உரைக்கும் பைரவனின் கடமையாய்
புது நாளின் வரவை எதிர்நோக்கி
ஓட்டம் தொடங்குதற்கான ஆயத்தமாய்
செல்லச் சோம்பல் முறிக்கும் காலைகள்
பெருநகரத்தின் வாழ்வதை இனிதெனத்
தோற்றுவிக்கும் சில கணங்கள்.  

#ரத்னாவெங்கட்
 #அதிகாலைச் சிந்தனைகள்-11

இருள்!  இருள்!  மன இருள்! 
ஒளியின் இறப்பில் பிறந்து
ஒரு நொடி குழப்பத்தில் விளைந்து
ஒரு நிகழ்வாய் அமைதி குலைத்து
ஒரு கணத்தில் நிலை மாற்றி
ஒரு வாழ்வை அழிக்க வல்லது! 

ஒளி! ஒளி! அக ஒளி! 
இருளின் எல்லைப் புள்ளியாய்
இருமையகற்றும் வழியாய்
இருபுனல் பொங்கும் நதியாய் 
இருத்தலியல் கோட்டுத்துணையாய்
இருப்பின் அருமை உரைக்க வந்தது! 

#ரத்னாவெங்கட்
 #அதிகாலைச் சிந்தனைகள்-12

தொலைதூர இலக்கை நிர்ணயிக்கும்
வெளிச்சப் புள்ளிகள் ...
தொலைந்த கனவுகளை நினைவுறுத்தும் 
வெள்ளோலை முகில்கள்....
அசைபோடும் எண்ணங்கள் நடையின்
ஆதார ஸ்ருதியாய்...
அலைபாயும் மனம் வேகத்தடையாகும்
ஆதிக்கத்தின் பிடியில் ...
தொடக்கங்களின் ஆரம்ப இனிமை 
நிலைக்க ...வலுத்திடத்
தொடர் கதையாய் நம்பிக்கை
நில்லாது..... நகர்ந்திட....
கோடுகள் கண்ணெட்டும் தொலைவினில்
வரவேற்கும்!-எல்லைக்
கோடற்ற களங்கள் கைதட்டிப்
பரிசளிக்கும்! பெருஞ்சிறப்பே! 

#ரத்னாவெங்கட்.
 #அதிகாலைச் சிந்தனைகள்-13
#நானிலு_முதல்முயற்சி

#1
காட்டுக்குள் வீழ்ந்த மரம்
மண்ணில் எருவானது! 
உன் குரல் எட்டாவிடில்
பிறருக்கென வாழப் பழகு! 

#2
நகர்ந்து செல்லும் மேகங்கள்
காற்றின் உபயத்தில்! 
புரியாத குழப்பத்தில் நகராது
அடம் பிடிக்கும் மனம்! 

#3
சீற நேரம் பார்த்து 
அமைதியாய் நின்றது எரிமலை! 
தேடிக் கொந்தளிக்கிறேன்
தப்பிச் செல்லும் வழி! 

#4
தேடிக்கொண்டே இருக்கிறேன்
காரணம் புரியவில்லை! 
அருளற்ற உன் மேலுள்ள
பொருளற்ற என் அன்பு! 

#ரத்னாவெங்கட்


நானிலத்தில் பிறந்த பலன்
நானிலு பிடிபடக் கிட்டுமோ? 
நேற்று விழி நுழைந்த
வேற்று மொழிக் காதல் ! 

#4
பின்னணியாய்க் குழலிசை ஓயாது
ஒலித்துக் கொண்டிருக்கிறது ! 
பிடிபடாத காற்றாய் நகர்கிறது
மொழியற்ற மௌனத்தின் அர்த்தம்! 

#5
நிழல் வலை பின்னியது வரவேற்றுச்
சாலையெங்கும் மரங்கள்! 
ஆராதிக்க எண்ணமற்ற ஓட்டம்
அவகாசமற்ற அவசரம் உன்னிடம்! 

#6
சிலிர்த்துச் சிதறிய பூக்கள்
நாசி நிறைத்து வருட
மிதித்து அழித்துச் சென்றது
கடமையில் கவனமாகக் கால்கள்! 

#7
ஊடுருவும் குளிராய் மனத்தில் 
ஊசலாடும் பதிலற்ற கேள்வி! 
ஒளியைக் களவாடிப் புறக்கணிக்க
இருளுக்கு என்ன அதிகாரம்? 

#8
வாரித்தான் வழங்குகிறேன் 
வார்த்தைகளைத் தண்ணீராய்! 
வற்றாது நதியெனச் சுரக்கிறது 
வலியெனும் செல்வம் மீண்டும்! 

#9 
ஏமாறியதற்கும்
ஏமாற்றியதற்குமாக
ஒரு மெய்யில்
உயிர் துடிக்கிறது! 

#10
திருப்தி ! அதிருப்தி ! 
அனர்த்தமாய் இடையில் 
நீ வந்த காரணத்தால்
திரிந்தது வாழ்வில் நிம்மதி! 

#ரத்னாவெங்கட்
#அதிகாலைச் சிந்தனைகள்-14

நடக்கையில் உணர்வின் நிழலாய்த்
தொடரும் தேய்பிறை ! 
நிற்கையில் வானுயர்ந்த கூடுகளின்பின்
ஒளிந்து மறையும்! 

ஆளரவமற்ற அமைதியின் அருமை
நிலைக்க விடுவதில்லை
அநாவசிய ஆரவார ஒலியில்
விரையும் எந்திரங்கள்! 

கடலாய் அன்பு கைகோர்த்து நடக்க
கண்டதும் மனம் சுருங்கும்
துணைவிடுத்துப் பிழைப்பிற்காய்
புலம்பெயர்ந்த பரிதாபம்!

மாந்தரின் அக இருளின் அங்கமாய்
நாற்சந்தியில் சந்தைப்பொருளாய்
தினம் நின்றிட்ட பாவம்
இன்று காணாத பச்சாதாபம்! 

புலரும் ஒளியும் பொங்கும் நேயமும்
மாற்றம் தருமா? 
ஓருயிராவது நலமது காண
உள்ளம் விழையுமா? 

#ரத்னாவெங்கட்
 #அதிகாலைச் சிந்தனைகள்-15

அன்பில், மகிழ்வில் 
அசைத்திடும் துயரில்
ஆசையின் வடிவில்
ஆடும் மனத்தில்
இன்னும் இன்னும்
இன்பம் எங்கே? 
ஈண்டு தேடென
ஈசன் பணிக்க
உண்டு உண்டு
உண்மையில் என்றும்!
ஊக்கம் அளிக்கும்
ஊற்றின் கண்ணாய்!
எங்கும் எதிலும்
எதிர்மறையற்ற எண்ணம்!
ஏக்கம் தவிர்க்கும்
ஏகாந்த உணர்வில்
ஐம்புலன் அடக்க
ஐயம் அகன்றிட
ஒன்றே இறையென
ஒப்பிடும் மனத்தில்
ஓம்கார ஒலியாய்
ஓங்கி உயிர்த்து 
ஔடதமாகும்
ஔவையின் மொழியே
அஃகாத தமிழ்க் கவிதை!!

#ரத்னாவெங்கட்

அஃகாத-சுருங்காத
 #அதிகாலைச் சிந்தனைகள் -16

சுவாதீனமாய்ச் சிறகடித்து
சுவானுபவத்தைச் சுவாசித்து
வானம் தன் வசமெனவே 
வாகாய்ப் பறந்துயர்ந்து
கால்வாய் மீன் கொத்திக்
கதிரவன் ஒளியில் நீந்திப்
புலம் பெயர இனம் பெருக்க
நிலம் கடக்கும் திடமுற்றுத்
தேடலின் பலன் கண்டு
தேனிசை பொழிந்திடும்
சுதந்திரப் பறவை! 

சிறகிழந்து வலைக்கம்பி
சிலுவையான கூட்டுக்குள் 
சீண்டுகின்ற ஒளிக்கதிர்கள்
சீற்றம் தரப் பார்வைக்குள்
தீண்ட இயலாக் கனவுகள்
தீனமாய் மடியும் முன்னர்
காணாத மலை முடியும்
கானகத்து மரக்கிளையும்
சேருமென்ற நம்பிக்கையைச்
சேர்த்திசைக்கும் தன் குரலில்
சிறைப்பட்ட கூண்டுப்பறவை! 

#ரத்னாவெங்கட்
 #அதிகாலைச் சிந்தனைகள்-17

இறக்கும் ஒவ்வொரு 
கணமும் மரித்துப்
பிறக்கும் புதியதோர் 
கணத்தில் எழுகிறேன்! 

அவமானம் பழங்கதையாய் 
மன அடுக்கினில் உறைய
வலிகள் தொடர்கதையாய்
மன வலிமை சிதைத்திட..

கவியும் இருளில்
உறங்கா உள்ளமும்
கதிரின் ஒளியில்
உருக்கும் சிந்தனையாய்....

முடிவற்ற கருந்துளையில்
சறுக்கிய பொழுதிலும்
முகமற்றுப் பெருவெளியில்
சரியும் நேரத்திலும்..

பொருள் மறந்து
புன்னகைக்கும் செயலாய்
அருள் நிறைந்து
மன்னிக்கும் மனமாய்ப்

பணி சூழ் வாழ்வில்
பங்கேற்று உறவாய்த்
தனித்த நினைவினில்
பற்றறுக்கும் நிலைக்காய்ப்

படிகளில் இடறிப்
போராடித் தோற்றுத்
தீராத பழியைத்
தீப்புகுந்து நாளும்

வெற்றிடம் தேடி
வெதும்பிக் குளிர்ந்து
தணுப்பில் காய்ந்து
சருகாய் உலர்ந்து

மடியில் வீழ்ந்து
மண்ணில் புதைந்து
மரத்தின் வேரில்
மன்னும் உயிராய்

இறக்கும் ஒவ்வொரு 
கணமும் மரித்துப்
பிறக்கும் புதியதோர் 
கணத்தில் எழுகிறேன்! 

#ரத்னாவெங்கட்
 #அதிகாலைச் சிந்தனைகள்-18

நித்தியமற்ற வாழ்க்கையில்
நிகழ்ந்திடும் நிகழ்வுகள்
நிமித்தம் அறியும் முன்னர்
நிமைத்து நகரும் மணித்துளிகள்! 

நிச்சயம் நம் வசமில்லை!
நிரந்தரம் எதுவுமில்லை!-சுய
நிந்தனையில் மனம் சிக்க
நிறம் மாறும் மனச்சிந்தனைகள்! 

நிரையமாகும் நிகழ்காலம்
நிர்த்துளியாகும் எதிர்காலம்
நிபந்தனைகள் அறியப் பழக
நிதர்சனம் நிலைக்களமாகும்! 

நிலைக்கண்ணாடி காட்டும் உரு
நிர்ச்சலனமற்ற நிர்மலமாக 
நிர்ணயம் செய்திடும் திடம்
நிர்க்குணன் அருளே நிறைக்கும்! 

#ரத்னாவெங்கட்
 #அதிகாலைச் சிந்தனைகள்-18

நித்தியமற்ற வாழ்க்கையில்
நிகழ்ந்திடும் நிகழ்வுகள்
நிமித்தம் அறியும் முன்னர்
நிமைத்து நகரும் மணித்துளிகள்! 

நிச்சயம் நம் வசமில்லை!
நிரந்தரம் எதுவுமில்லை!-சுய
நிந்தனையில் மனம் சிக்க
நிறம் மாறும் மனச்சிந்தனைகள்! 

நிரையமாகும் நிகழ்காலம்
நிர்த்துளியாகும் எதிர்காலம்
நியமங்கள் அறியப் பழக
நிதர்சனம் நிலைக்களமாகும்! 

நிலைக்கண்ணாடி காட்டும் உரு
நிர்ச்சலனமற்ற நிர்மலமாக 
நிர்ணயம் செய்திடும் திடம்
நிர்க்குணன் அருளே நிறைக்கும்! 

நித்தம் நினைவினில் நிறைத்திட
நிபந்தனையற்ற அன்பின் வளி! 
நிர்விகற்பம் நில்லாது வெளியேறும்
நிரூபணமாகும் நித்தன் ஒளி! 

#ரத்னாவெங்கட்


நிமித்தம்-காரணம்
நிமை- இமை
நிரையம்- நரகம்
நித்தன்- கடவுள்

 #அதிகாலைச் சிந்தனைகள்-19

பூக்க மறந்து தவித்து
கிளைகள் சூழ்ந்தும் தனித்தே
இலைகள் உதிர்த்து நிலத்தில்
தூற்றலிலும் பிழைத்து

வேர்கள் மட்டும் ஸ்திரமாய்
நிழல் கொடுத்த ஒன்று...
சிதல்லையென்ற பெயரால் 
வேகத்தடையென வீழ...

தாய்மை ! வேர்களில்...
காய்க்கும் பூவினில் இல்லை! 
வேரறுக்க மனமின்றித்
தேம்ப மறந்து உயிர்த்தது! 

#ரத்னாவெங்கட்

சிதல்லை- பூக்காத தாவரம்
 #அதிகாலைச் சிந்தனைகள்-20

கசிந்து உள் நுழைந்த
கடந்த காலக் குளிரொன்றைத்
தடுக்கும் முயற்சியில் 
தணப்பைக் கூட்டி வைத்து
கம்பளியின் உதவியுடன்
கண்மூட யத்தனித்தேன்.....
தடுப்பைத் தாண்டித்
தடைகளை உடைத்த காற்று
நுழைந்து ஊர்ந்து அத்து மீறி
நரம்பில் ஊடுருவித் துளைத்தது...
நுண்ணுர்வு பட்டென்று துடித்து
நடு முதுகு சிலீரென உதறிட....
எழுந்த வேகத்தில் நிலை தடுமாற
ஏதுமற்ற தனிமையின் பிடியை
எதிர் கொள்ளும் முயற்சியில்
ஏற்பட்ட வைராக்கியத்தில்
உதறிய போர்வையுடன் விழுந்தது
உதவாத சில நினைவுகள்.....
முடமாய் மனத்தை ஒடுக்கி
முடக்கும் வலிமை எதற்குமில்லை! 
மீளும் வழி என்னிடமே! 
மீண்டிடுவேன் இது சத்தியமே! 

#ரத்னாவெங்கட்
 #அதிகாலைச் சிந்தனைகள்-21

மனமெங்கும்
விடையற்ற கேள்விகள் 
குடையும் வண்டுகளாய்! 

வனமெங்கும்
புறக்கணிப்பின் வலிகள்
கருவேலம் புதர்களாய்! 

வானமெங்கும்
பரந்த நீலம்
தெளிந்த நீரோடையாய்! 

ஆழமென்கும்
தேடும் எண்ணம்
ஆழியின் முத்தாய்! 

உயர்வென்கும்
ஊன்தொடா உச்சி
விடுகதையின் முடிவாய்! 

விடுதலையென்கும்
விடுத்த நினைவுகள்
வண்ணத்துப்பூச்சிகளாய்! 

#ரத்னாவெங்கட்
 #அதிகாலைச் சிந்தனைகள்-22

நீள் விசும்பும் நீலக் கடலும்
கீழ் வானமும் சீதள மேகமும்
மீள் பதிவாய் நீண்ட கனவாய்
வீழ் இரவின் இருள் மாற்றும்! 

நாள் நின்று நொடியாய் நகர
புள்ளினங்கள் கீழ்க்குரலெழுப்ப
சூழ் மோனத்தில் கீழறைக் கீறல் 
ஊழ் விலக்கி நேர்வழி காணும்! 

#ரத்னாவெங்கட்
 #அதிகாலைச் சிந்தனைகள்-23

கண்கவர் தூரத்துப் பச்சைகள்
கண்ணெட்டா தொலைவில்
கருவிழியினின்று புள்ளியாகச்
சாம்பர் பூத்த வானத்தின்
சாயம் வெளுத்த நீலத்தைச்
சாகரம் உள்வாங்கிப் பிரதிபலித்தே
உயர்ந்து ஓங்கிப் பொங்கி
உடன் வடிந்து கரை தேடி
உளம் மாறித் திரும்பத் தாலாட்டும்! 

ஆடும் தூசாய்ச் சிறு படகு
ஆழி கிழித்து விரைகையிலே
ஆவி ஒடுங்கும் கூட்டினில்! 
வானும் மண்ணும் தொலைவாக
வானின் வண்ணம் முடிவாக
வாழ்வின் எல்லை இதுவாகத்
தேடல் நிற்கத் தற்காலிகமாய்த்
தேம்பல் மறந்து பெருவெளியில்
தேகம் விடுத்துலவும் மாயம்! 

#ரத்னாவெங்கட்
#அதிகாலைச் சிந்தனைகள்-24

கண்ணெட்டும் தொலைவில்
கண்சிமிட்டும் நட்சத்திரங்கள் ! 
விண்ணுயர்ந்த கோபுரங்கள்
விலையுயர்ந்த மனிதக் கூடுகள்! 
மின்னொளியில் ஒளிர்ந்த முகம்
சிறுகாலையில் சோம்பல் முறிக்கப்
புள்ளினங்கள் குரல் எழுப்பிப்
பூபாளம் இசைத்திடவே
புன்னகை விரிந்த பொழுதில் 
பூத்தது அன்பு நெஞ்சினிலே
இயற்கையின் அழகினிலும்
செயற்கையின் நேர்த்தியிலும்
இருக்குதே அமைதியெங்கும்
இருப்பிடம் நம் இதயமென்றால்? 

#ரத்னாவெங்கட்.
 #அதிகாலைச் சிந்தனைகள்- 25

வனமெங்கும் சுதந்திரமாய்
கனி நிறை மரக்கிளையில்
ஊஞ்சலாடிய மனக்குரங்கு
ஊசலாடும் மதி  மயங்கிக்
குடுவையிலே கலகலத்த
குறும்பொறிக்காய் ஆசைப்பட..
கை விட்ட கணத்தினிலே
கைத்தடிக்கடிமையென
வித்தைகள் காட்டி நின்று
விடுவதோ விதியென்னும்
தத்துவத்தை உணர்கையிலே
சத்தியம் சிரித்து விலகும்....

#ரத்னாவெங்கட்.
 #அதிகாலைச் சிந்தனைகள்-26

கருப்பு வெள்ளை மட்டுமே
தெரிந்த நிறக்குருடாய்....

விருப்பு வெறுப்பற்ற நிலைப்பாடே
அறிந்த மனநிலையாய்....

வளர்ந்த பிள்ளையாய் ! வாழ்வெனும்
களம் கண்டிடா மோழையாய்...

இருந்ததும் உண்மையே! இன்று
இருப்பது யாரோ? எவரோ? 

நான்தானா? நானேதானா? 
நாலும் மறந்து பித்தானது! 

ஆசையின் பிடியில் சிதறியே
ஆடியில் அழுதிடும் பிம்பமே! 

ஏனென்று அறிந்தால் சொல்வாயா? 
ஏசும் மனசாட்சி கொல்கிறதே!

காரணி எதுவென உணர்வாயா? 
காரணம் கண்டால் உரைப்பாயா? 

மன்னிக்கும் வழி பகர்வாயா? 
மறந்திடும் மனம் ஒன்று பெறுவாயா? 

#ரத்னாவெங்கட்.
 #அதிகாலைச் சிந்தனைகள்-27

தனியே ஒரு பயணம்! 
தயையில் தாயாய்த்
தாங்கிய உறவுகள், நட்புகள்! 
புதுப் பதியன்கள் ! 
புது வரவுகளாய்ப்
பாசமெனும் தோட்டத்தில்! 
அன்பும் அக்கறையும் 
அலையாய்ப் புரண்டோடக்
கண்கள் பனிக்கும் நன்றியில்!
கற்பகமும் கபாலியும்
கனிவுடன் அருள் பாலிக்கக்
காரிருள் விலகும் அமைதியில்!
தனிமையில்லை எங்கும்! 
தரு நிறை வனம் என்றும்
துளிர்ப்பதை மறப்பதில்லை! 

#ரத்னாவெங்கட்.
 #அதிகாலைச் சிந்தனைகள்-28

ஏனென்ற கேள்வியின்
ஏங்குதலும் தேடுதலும்
எப்படி எனது வினை
எழுபிறப்பும் இதுவோ நிலை
எத்தனை இன்னும் என
எண்ணித் தவிக்கும் நொடி
எதற்கென்று புரிகையிலே
எங்கும் நிறைந்திருக்கும் 
எது பொருளென்று உணர்கையிலே
எல்லாம் அவன் செயலாக
எப்பொழுது என்பதன் விடையாக
எய்தவன் அவனின் பதம் தேட
நானும் நீயும் மறைந்திட
நாவும் புலனும் ஒடுக்கிட
யாரவன் என்று அறிகையில்
யாக்கையின் பிணி அடங்குமே🙏

#ரத்னாவெங்கட்
 #அதிகாலைச் சிந்தனைகள்-29

வலை பின்னிச் சிலந்தி
வாகாய்க் காத்திருக்க
மதி மயங்கிய பூச்சி
சதியறியாது வாயில் விழக்
காட்சியில் பிழையில்லை! 
காலனின் தவறில்லை! 
இயற்கையின் கோட்பாட்டில்
இதுவும் ஒரு நிகழ்வெனினும்
பதைத்த மனம் தாறுமாறாய்ச்
சிதைந்த வண்ணச் சித்திரமாய் 
நிறைந்த கருமை வானவில்லின்
நிறங்கள் துடைத்த வெற்றிடமாய்க்
கூதல் காற்றினிடைக்
குமுறிக் குமுறி ஓயவில்லை! 
நகர்ந்திடத் தொடர்ந்திடும்
நரகத்தின் நிழலொன்றாய்க்
கர்ம வினைகள் காவு வாங்கக்
கடவதும், கடப்பதும் 
கழிபடர் கடமையென்றாகப்
பகிர்ந்திட மொழியின்றிப்
பாசவலையில் சிக்க.....
சுழலும் சக்கரம்....
சுழற்சியின் தந்திரம்! 

#ரத்னாவெங்கட்

Saturday 18 March 2017

#தேர்வு #92

#தேர்வு

போகிற போக்கில்
பதில் சொல்ல முடியாத
பதிலொன்று இல்லாத
கேள்விகளை என் முன்
விளையாட்டாய் 
இறைத்துச் செல்கிறாய்
குழந்தையைப் போல! 
திணறி , அள்ளி,ஆராய்ந்து
சிந்தித்து, உணர்ந்து
வார்த்தைகளைத் தேடும் முன்
கடக்கிறாய் அனுபவம் தந்து
கடவுளைப் போல! 

வலிகள் நீ தந்தாலும்
தாண்டிடும் திறன் தந்தாய் ! 
துன்பம் சலித்துத் தக்க வைத்துப்
புறவுலகிற்காய்ப் புன்னகை 
சிந்தும் இதழ்கள் தந்தாய் ! 
சிரிப்பு சென்றடையாத என்
கண்களை  மறைக்க 
வேண்டிய அளவில் 
பாவனைகள் கற்பித்தாய்! 

வருத்தங்கள் உன் மேல் இருந்தாலும்
வாரி வழங்கும் வள்ளலல்லவா? 
இன்பமும் துன்பமும் 
சரியான விகிதத்தில்! 
ஒன்றின் பிடியில்
மற்றொன்றைத் தேட வைக்கும்
முயற்சியின் தூண்டுதலில் ! 
கோபம் சாத்தியமில்லை ! 
கொண்டாலும் செல்வதெங்கே? 

அணு அணுவாய் ரசிக்கிறேன்
அனு தினமும் நிந்தனை செய்து! 
இரண்டையும் ஒன்றாய்ப் பார்த்து
மந்தகாசப் பார்வையொன்றை ஈன்று
இன்றைக்கான கேள்விகளைத் தந்து
இமை தாழ்த்திக் கையிலெடுத்து
நிமிரும் முன் நகர்கிறாய்! 
திகைத்தாலும் தொடர்கிறேன்! 
முடிவில்லாத் தேர்வெழுதி உன்
மதிப்பீட்டிற்கான காத்திருப்பை! 

#ரத்னாவெங்கட்                        

#உயிர்வலி #91

#உயிர்வலி
****
உயிர் திணறும் வலியொன்றைத் தந்து
உடல் மட்டும் கேட்கிறாய்! எடுத்துக் கொள்! 
இரண்டையும் ஒரு சேரக் கொள்வாயெனில்! 

கடலோடு கலந்த ஆறொன்றை வழிதிருப்பிக்
கரையாக மறுக்கிறாய்! அணையொன்று இடு! 
தேக்கி வைப்பாய் உன் நினைவிலெனில்! 

மனம் கொன்று புதைத்து விட்டு
மலர்ப் பதியனிடுகிறாய்! காப்பாற்றி விடு! 
பூக்களாவது பிழைத்துப் போகட்டும்! 

ஆசையெனும் நெருப்பிலிட்டு உண்மையை
ஆகுதியாக்குகிறாய்! எரியட்டும் பொறு! 
சாம்பலில் என் இதயம் உயிர்த்திருக்கக் கூடும் ! 

#ரத்னாவெங்கட்.

#பதுங்கும் நிஜங்கள். 02.03.17 #90

#பதுங்கும் நிஜங்கள். 
02.03.17

பனிப்பொழிவிற்குக் கதகதப்பாய்
கம்பளியைச் சுற்றினாற் போல
காலத்தை ஒத்தி வைத்துக்
கனவுகளில் வெம்மை கண்டு
குளிர் காயும் நிழல்கள்
நிஜங்களின் பதுங்குதலில்! 

மழைத்துளி தெறித்திடும் வனத்தில்
குடை விரிக்கும் உண்மைகள்
மன இருள் துடைத்திடத் துடிக்க
மூடு பனியாய் மறைத்தே மனம் 
முகமூடியாய் அணிந்திடும் 
முன்னேற்பாடாய் பொய்களை! 

#ரத்னாவெங்கட்.

#காதல் பறவை #89

#காதல் பறவை


விரித்த சிறகுகள்  வான்வழி பறக்கச்
சிலிர்த்த மலரது இதழ்விரியத் துடித்துத்
திளைத்த நொடிகளின் கனம் வழியத்
திகைத்து நின்றது வாடி மடிந்திட! 

எடுத்த தேனின் சுவையில் கிறங்கித்
தொடுத்த அம்பின் வேகங் கொண்டு
தடுத்த காற்றை  மீறியே பறவை
கொடுக்கத் திரும்புமோ பூவின் உயிரை? 

#ரத்னாவெங்கட்.

#உனை வரைகிறேன் ஓவியமாய் #88

#உனை வரைகிறேன் ஓவியமாய்
   
**********

உனை வரைகிறேன் ஓவியமாய் 
தினம் கண்ணீரில் உன் நிறம் குழைத்து 
உப்பிட்டு உலகுள்ளவரை காக்கிறேன்
என் நினைவுகளில் உனைப் புதைத்து! 

உயிர் கலந்த உறவே உந்தன்
வண்ணம் பல தொட்ட தூரிகையில்
வரையும் ஒரு வானவில் கூட
உரிமை மறுத்து ஏகுதே வானில்! 

தனை மறந்து பருகும் இதயம்
கள்ளுண்ட வண்டாய் ஆகும்! 
என்றோ உனை மறந்து நீ உதிர்த்த
மனம் தொடாத உன் வார்த்தைகளை! 

தடைகள் தாண்டி வாவென அழைத்தேன்
காற்றாய் என்னுள் உயிர்த்திருக்க! நிலை
தடுமாறச் செய்து உணர்வழித்தாய்! மென்
கவிதை ஒன்றின் கருவறுத்தே! 

திரைக்குள் மறைந்தாய் ஒளியின் துகளாய்
இருண்டதென் வானம்....நில்லடா! 
குடைக்குள் மழை விழிகளில் தூறலாய்
விசும்புகிறது  உயிரே....சொல்லடா! 

#ரத்னாவெங்கட்.

#காதல் மேகங்களே #87

#காதல் மேகங்களே 
********

மலர்ந்து மகிழ்வாலே மனம்
நிறைந்து சூல் கொண்டு
தரித்து ஓரிடம் நில்லாது
கடந்து காற்றில் நகர்ந்து
கலைந்து சென்றிடல் தகுமோ? 
கனத்த கனவது நினைவில்
தழைத்து இன்னுயிர் செழிக்கப்
பொழிந்தே வரம் தருமோ? 

#ரத்னாவெங்கட்.